மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது; கரூர் மாவட்ட விவசாயிகள் கவலை| Dinamalar

தமிழ்நாடு

மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது; கரூர் மாவட்ட விவசாயிகள் கவலை

Added : ஆக 02, 2020
Share

கரூர்: மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


மேட்டூர் அணையிலிருந்து, ஜூன், 12ல் தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில், வினாடிக்கு, 3,000 கன அடி தண்ணீர், பிறகு, 15 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், கர்நாடகா அணைகளில் இருந்து, எதிர்பார்த்த அளவில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதையடுத்து, அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், படிப்படியாக குறைக்கப்பட்டு, நேற்று முன்தினம், 7,000 கன அடியும், நேற்று காலை, 9:30 மணி நிலவரப்படி, 3,000 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. மேலும், திருப்பூர் மாவட்டம், அமராவதி அணை, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால், கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து வருகிறது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி மாயனூர் கதவணைக்கு, 6,739 கன அடி தண்ணீர் வந்தது. குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், 6,319 கன அடியும், இரண்டு பாசன வாய்க்காலில், 420 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: தென்மேற்கு பருவ மழை குறைந்துள்ளது என கூறி, கர்நாடகா அணைகளில் இருந்து, கூடுதல் தண்ணீரை திறக்க அம்மாநில அரசு மறுத்து வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. கடந்த ஜூலை, 34 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும். ஆனால், 4 டி.எம்.சி., தண்ணீர் தான், தமிழக எல்லைக்கு வந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையில் உள்ள, 27.73 டி.எம்.சி., தண்ணீரில், 10 டி.எம்.சி., யை இருப்பாக வைத்து கொண்டாலும், மீதமுள்ள, 17.73 டி.எம்.சி., தண்ணீரைதான் இன்னும், 40 நாட்கள் வரை தான் திறந்து விட முடியும். அதற்குள், கேரளா, கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெருமழை பெய்தால் மட்டுமே, மேட்டூர் அணைக்கு கூடுதல் தண்ணீர் வரும். அப்போதுதான், அடுத்த கட்ட விவசாய பணிகளை தொடங்க முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X