லஞ்சம், முறைகேட்டில் சிக்கும் நகராட்சிகள்: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி| Dinamalar

தமிழ்நாடு

லஞ்சம், முறைகேட்டில் சிக்கும் நகராட்சிகள்: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி

Added : ஆக 02, 2020
Share

கரூர்: லஞ்சம், முறைகேடு உள்ளிட்ட பிரச்னைகளில், கரூர் மாவட்டத்தில் உள்ள, இரண்டு நகராட்சிகளும் அடுத்தடுத்து சிக்கி தவிக்கின்றன.


கரூர் மாவட்டத்தில், கரூர், குளித்தலை ஆகிய, இரண்டு நகராட்சிகள் உள்ளன. தமிழகம் முழுவதும் கடந்த, 2011 க்கு பிறகு, நகர்ப்புற பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை. மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், நகராட்சிகளில் கடந்த, ஒன்பது ஆண்டுகளாக, ஆணையர்கள் கையில் நிர்வாகம் உள்ளது. இந்நிலையில், கரூர் நகராட்சியில், 35வது வார்டு வருவாய் உதவியாளர் ரேவதி, வீட்டு வரி நிர்ணயம் செய்ய, 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக, தொழிற்பேட்டையை சேர்ந்த அந்தப்பன் என்பவர் கடந்த மாதம், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். ரேவதி மீது கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், நகராட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை, கைப்பற்றி சென்றுள்ளனர். இந்நிலையில், குளித்தலை நகராட்சியில் ஊழியர்களின் சேமநல நிதி மற்றும் தன் பங்கேற்பு ஓய்வூதிய நிதி உள்ளிட்ட நிதிகளை, கணக்காளராக பணியாற்றி வந்த சத்யா என்பவர், 60 லட்ச ரூபாய் வரை முறைகேடு செய்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நடந்த விசாரணையில், ஒரு கோடி ரூபாய் அளவுக்கு, முறைகேடு நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில், ஆறு பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள, இரண்டு நகராட்சிகளிலும், கடந்த மாதத்தில் மட்டும் லஞ்சம், நிதி முறைகேடு தொடர்பான சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதனால், சொத்து வரி, குடிநீர் கட்டணம் தொடர்பாக இன்னும் என்ன என்ன புகார்கள் வருமோ என, இரண்டு நகராட்சிகளை சேர்ந்த, பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X