பொது செய்தி

இந்தியா

புத்தக அறிமுகம்: தமிழ் சினிமா விமர்சனங்கள் (1931- 1960)

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புத்தக அறிமுகம்: தமிழ் சினிமா விமர்சனங்கள் (1931- 1960)

சென்னை: வாசகர்களே, தமிழில் எத்தனையோ நல்ல புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவை பற்றி பெரும்பாலான வாசகர்களுக்கு தெரிவதில்லை. அதற்காகவே தமிழில் வெளிவரும் சிறந்த புத்தகங்களை தினமலர் இணையதள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த வாரம் கீழ்க்கண்ட புத்தகங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். வாசிக்கும் தாகமுள்ள வாசகர்கள் தேவையான புத்தகங்களை தேர்வு செய்து படிக்கலாம். வாசிக்கும் இன்பத்தை அனுபவிக்கலாம். ஒவ்வொரு ஞாயிறும் தினமலர் இணையதளத்தில் இந்தப் பகுதி வெளிவரும்.


01. தமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 - 1960)தொகுப்பாசிரியர்: சொர்ணவேல் ஈஸ்வரன், நிழல் திருநாவுக்கரசு
வெளியீடு: நிழல் பதியம் பிலிம் அகாடமி
வளசரவாக்கம், சென்னை - 78.
அலைபேசி: 94444 84868
பக்கம்: 414 விலை: ரூ.590

தமிழில் வெளியான, 140 சினிமா விமர்சனங்களை தொகுத்து தயாரித்துள்ள நுால்.
தமிழின் முதல் சினிமா காளிதாஸ் உட்பட, 70 படங்களின் தடயங்கள் இன்று கிடைக்கவில்லை. அவை குறித்த இதழ்களில் வந்த விமர்சனம் தொகுக்கப்பட்டுள்ளது. அந்த காலத்திய தமிழ் மொழி நடை, விமர்சன அணுகுமுறையை அறிய முடிகிறது.
எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், குயிலன் உட்பட, 11 பேர் விமர்சனங்களை எழுதியுள்ளனர். ரசிகர்களால் விரும்பப்பட்ட பராசக்தி, ரத்தக்கண்ணீர் போன்றவற்றில், குறைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
ஈழகேசரி மலரில், சிந்தாமணி என்ற படம் பற்றி, 1938ல் எழுதியுள்ளார் புதுமைப்பித்தன். அதில், 'கதாநாயகியாக வரும் ஸ்ரீமதி அசுவத்தாமா கன்னட பாஷைக்காரி. ஆனால், சிந்தாமணியாக நடிக்கும்போது பேசிய மழலைத்தமிழ் விரும்பி அனுபவிக்கப்பட்டது. தமிழ் சினிமா கொட்டகைகளில், இதுவரை அதிக நாட்கள் ஓடிய படம்...' என, குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'தமிழ்ப் படங்களில் பொருந்தாத இடத்தில் ஹாஸ்யக் காட்சிகளை வைப்பது ஒரு சம்பிரதாயமாக உள்ளது. அடித்தட்டு சமூக வசூலைப் பெறலாம் என்ற பட முதலாளிகள் எண்ணம் பிழையானது. மேன்மையானதை எடுத்துக் காட்டினால், சினிமாக்கலை உயரும்...' என்கிறார்.
தமிழன் குரல் இதழில், ரத்தக்கண்ணீர் படம் குறித்து, 'ஒரு ஆண், தாசிலோலனைத் திருத்த முயல வேண்டுமே ஒழிய, பெண்ணை விபசாரம் செய்யத் துாண்டுவது அறிவுடைமையாகாது. சொந்த அனுபவத்தைக் கொண்டு, எல்லாம் பிசினஸ் கட்சிகள் என்ற முடிவுக்கு வருகிறார் எம்.ஆர்.ராதா. இந்த தவறை பட அதிபதி எப்படித்தான் அனுமதித்தாரோ... ராதாவின் சுயமொழி இல்லாதிருந்தால், படத்தின் தரம் உயர்ந்திருக்கும்...' என, எழுதப்பட்டுள்ளது. ஆய்வாளர்களுக்கு உதவும் சுவாரசிய நுால்.
- டி.எஸ்.ராயன்


02. ஆதியிலிருந்த சாதி வரைஆசிரியர்: ஏ.தனசேகரன்
வெளியீடு: ஆர்.சி.என்.பதிப்பகம்
1/65ஏ, மசூதி தெரு, அப்துல் கலாம் நகர், சோழாவரம், சென்னை - 67.
அலைபேசி: 77082 14692
பக்கம்: 104 விலை: ரூ.90


latest tamil news
மனித இன வரலாற்றை, மிக சுருக்கமாக கூறும் நுால். மிக எளிமையாக படைக்கப்பட்டுள்ளது. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட தகவல்களை தொகுத்து கடித வடிவில், சிறுவர் - சிறுமியர் புரியும் வகையில், எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. பேரரசர் அக்பர் அவையில், மிக நுட்பமாக எழுப்பிய கேள்வியுடன் துவங்கி, ஜென் துறவியின் தன்னம்பிக்கை மேற்கோளுடன் முடிகிறது.
காடு மேடுகளில் உணவுக்காக அலைந்து திரிந்த மனித இனத்தின், வரலாற்று கால பிரிவினைகள் கோடிட்டு காட்டப்பட்டுள்ளன. தகவல்கள், அறிவியல் பூர்வமாக அலசப்பட்டுள்ளன. இலக்கியம், வரலாறு, தொல்லியல் போன்ற நிரூபிக்கப்பட்ட சான்றுகளுடன் பின்னப்பட்டுள்ளது.
மனித குலம் காலந்தோறும் சந்தித்த மாற்றங்களையும் கூறுகிறது. கால இயந்திரத்தில் அமர்ந்து, பல கோடி ஆண்டுகளை அசை போடும் முயற்சியாக அமைந்துள்ளது. வாசிப்பை துாண்டும் சுருக்கமான மானுடவியல் நுால்.
- அமுதன்


03. மருத்துவ ஜோதிடம்ஆசிரியர்: துரை கே.ராஜகோபால்
வெளியீடு: ஸ்ரீ ஆனந்த நிலையம்
7, புதுார் முதல் தெரு, அசோக்நகர், சென்னை - 89.
பக்கம்: 310 விலை: ரூ.300
அலைபேசி: 94440 35667


latest tamil news


Advertisementசோதிட அடிப்படையில் மனிதன் உடலைப் பற்றியும், அதில் உண்டாகும் நோய்கள், அதற்கான காரணம், தீர்வு குறித்து விரிவாகப் பேசும் நுால். உலகில் அனைத்து உயிர்களும் முட்டை, வேர்வை, விதை, வேர்க்கிழங்கு, கர்ப்பப்பை என, நான்கு வகையாக தோன்றுகிறது என்கிறார். உடல் உள்ளுறுப்பு பற்றியும் எடுத்துரைக்கிறார்.
நவ கிரகங்களைப் பற்றி விரிவாகக் கூறுகிறார். மனிதன் கருவில் உண்டாகும் போதே, கிரகம் ஆட்சி செலுத்தும் என்று கணிக்கிறார். அவை, எந்தெந்த நோய்க்குக் காரணமானவை என்று வகைப்படுத்துகிறார். அவற்றை இயற்கையாக குணப்படுத்துவதை எளிய முறையில் விளக்குகிறார்.
மனிதனுக்குத் தோன்றும் நோய்கள், அதற்கான உணவுப் பரிகாரம் கூறப்பட்டுள்ளது. ரத்தசோகை, சிறுநீரக வியாதி, நீரிழிவு நோய்களுக்கான சிகிச்சையையும் கூறியுள்ளார். ஆயுள் நீட்டிக்கப் பரிகாரங்கள், மருத்துவக் கோவில்கள் என, பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது இந்நுால்.
- முனைவர் இரா.பன்னிருகை வடிவேலன்


04. வானில் தவழும் பக்தி மாலைஆசிரியர்: அகிலா விஜயகுமார்
வெளியீடு: வைகுந்த் பதிப்பகம்
நாகர்கோவில் - 2.
அலைபேசி: 94420 77268
பக்கம்: 296 விலை: ரூ.300

மதுரை வானொலியில் ஒலிபரப்பான கட்டுரைகள் நுாலாக மலர்ந்துள்ளன. செவிக்கு சுவை தந்த உரைச் சித்திரங்கள், விழிகள் வழி மனதில் இடம்பிடிக்கின்றன. மீனாட்சி கல்யாணம் துவங்கி, தெய்வத் திருக்கல்யாண வைபவங்கள் வரை, 21 தலைப்புகளில், ஆன்மிகக் கட்டுரைகள், வாழ்வியல் பண்புகளை உணர்த்துகின்றன.
கள்ளழகர், மதுரை வைகைக் கரைக்கு வரும்போது செய்யப்படும், 10 வகையான தசாவதாரக் காட்சிகள், குறிப்பாக நரசிம்ம அவதாரம் பற்றி மிகச் சிறப்பாக ஒரு கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது. வரலட்சுமி விரதம், சரசுவதி பூஜை, கவுரி விரதம், கந்தர் சஷ்டி, கார்த்திகை தீபம், சிவ மகாராத்திரி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி விரதம், நவவித பக்தி பிரபாவம் போன்ற கட்டுரைகள், புராணச் செய்திகளைத் தருகின்றன.
'நீரின்றி அமையாது உலகு' என்ற தலைப்பில், தண்ணீரின் தெய்வத் தன்மைகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. தீர்த்தவாரி மற்றும் மகாமகம் வரலாறு சொல்லப்பட்டுள்ள விதம் சிறப்பு.
- முனைவர் மா.கி.ரமணன்


05. சட்டத்தின் ஆன்மாஆசிரியர்: எம்.குமார்
வெளியீடு: வானதி பதிப்பகம்
23, தீனதயாளு தெரு,
தி.நகர், சென்னை - 17.
தொலைபேசி: 044 - 2434 2810
பக்கம்: 384 விலை: ரூ.280


latest tamil news
அரசியல் அமைப்புச் சட்டத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ள நுால். பல நாட்டு அரசியல் சட்டங்களையும் எடுத்துரைக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தை அப்போதைய சட்ட அமைச்சர் அம்பேத்கர் தலைமையில், எட்டு பேர் கொண்ட குழு உருவாக்கியது. அந்த குழுவின் புகைப்படத்தை புத்தகத்தில் வெளியிட்டிருப்பது சிறப்பு.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் எளிமை பற்றியும் எழுதியுள்ளார். மோடியின் தாய், '108' ஆம்புலன்சில், மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றது உட்பட, மோடியின் சகோதரர்கள் மளிகை, பழைய பொருள் விற்பதையும் எடுத்துரைத்துள்ளார்.
அண்ணல் காந்தியடிகள், கர்ம வீரர் காமராஜர் உட்பட தலைவர்களின் எளிமை, நேர்மை, வாய்மையையும் விளக்கியுள்ளார். உலகளாவிய சட்டம் தொடர்பான செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன.
- முகிலை ராசபாண்டியன்


06. வெற்றி உங்கள் கையில்ஆசிரியர்: கீழாம்பூர்
வெளியீடு: கலைமகள் பப்ளிகேஷன்ஸ்
34/2, வீரபத்ரன் தெரு, மயிலாப்பூர், சென்னை - 4.
தொலைபேசி: 044 - 2498 1699
பக்கம்: 88 விலை: ரூ.75


latest tamil news
வாழ்க்கையில் முன்னேறும் உத்வேகம் எல்லாருக்கும் இருக்கும். அதை செயல்படுத்த போதுமான வழிமுறையோ, பயிற்சியோ இருக்காது. அதை அறியாமல் திணறிக் கொண்டிருப்பர். அவர்களுக்கு உதவும் நுால்.
வெற்றி பெற பொறுமை, விடாமுயற்சி வேண்டும். கனவை கலைக்காமல் ஒளி வீசச் செய்யும் வித்தையை அறிவுரையாகத் தருகிறது. சாதிக்கத் துடிப்போருக்கு உதவும் நுால்.
- கிருஷ்ணவேணி


07. தாராபாரதி கவிதைகளில் இலக்கிய நலம்!ஆசிரியர்: எஸ்.மகேஸ்வரி
வெளியீடு: சங்கர் பதிப்பகம், சென்னை.
தொலைபேசி: 044 - 2650 2086
பக்கம்: 184 விலை: ரூ.165

சோர்வுற்ற இளைஞர்களைத் தட்டி எழுப்பும் வகையில், கவிதைகள் பாடியவர் தாராபாரதி. அவரது வைர வரிகள் சமுதாய அவலங்களை சுட்டிக் காட்டுகின்றன. 'வெறுங்கை என்பது மூடத்தனம் - உன் விரல்கள் பத்தும் மூலதனம்' என்கிறது ஒரு பாடல்.
சந்தம் தொனிக்க, எழில் கருத்துக்களை ஆய்வு செய்துள்ளார். பல கவிதைகள், அரசியல் தலைவர்களை கேலி செய்கின்றன. சமுதாய உணர்வு, நடை நலம், வருணனை நலம், அணி நலம் என்ற தலைப்புகளில் ஆய்வு செய்துள்ளார்.
- எஸ்.குரு


08. வீடு தேடி வரும் ஆபத்து தேவை பெண்கள் பாதுகாப்புஆசிரியர்: பெ.மாடசாமி
வெளியீடு: மணிமேகலை பிரசுரம்,
தபால் பெட்டி எண், 1447, சென்னை - 17.
தொலைபேசி: 044 - 2434 2926
பக்கம்: 108 விலை: ரூ.75


latest tamil news
காவல் துறை பணி அனுபவங்களை விளக்கும் நுால். வீட்டு வேலைக்காரரிடம் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் பற்றிய தகவல்களை தெரிந்திருக்க வேண்டும் போன்ற அறிவுரைகள் அதிகம்.
ஆபத்தை தவிர்ப்பது பற்றி அனுபவ பின்னணியுடன் அறிவுரைத்துள்ளார். பிரச்னைக்கான தீர்வு என்ற நிலையில் அமைந்த புத்தகம்.
- பேராசிரியர் இரா.நாராயணன்

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rsudarsan lic - mumbai,இந்தியா
02-ஆக-202017:15:57 IST Report Abuse
rsudarsan lic மிகவும் பயனுள்ள பகுதி. மின்னணு புத்தகங்களும் கிடைக்குமா என்பதை தெரிவிக்கவும்
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
02-ஆக-202016:51:50 IST Report Abuse
S. Narayanan dinamalarin sevai migavum paraattukkuriyathu .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X