புதுடில்லி: லடாக் எல்லைப் பிரச்னையில் தீர்வு எட்டப்படாத நிலையில் அங்குள்ள முக்கிய பகுதிகளில் இந்திய ராணுவம் தன் பலத்தை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய சீனா எல்லைப் பிரச்னை தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் இதுவரை தீர்வு கிடைப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. இதனால் லடாக் எல்லை அருகே இந்திய ராணுவம் படைபலத்தை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி படைவீரர்கள் மற்றும் டேங்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து பராமரிப்பில் இருந்து வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர இருக்கும் குளிர் காலத்தில் மிகக் குறைந்த வெப்பநிலையிலும் (மைனஸ் 20 டிகிரி) இப்போது உள்ள எண்ணிக்கையில் இந்திய வீரர்கள் காவல் பணியில் இருப்பார்கள். இதையடுத்து கடுமையான குளிரை தாக்குப் பிடிக்கும் வகையில் வீரர்களுக்கு தேவையான உடைகள், உபகரணங்கள் வழங்கப்படும்.
அதேபோல் கட்டுப்பாட்டு எல்லை முன்களப் பகுதியில் இந்திய போர் விமானங்கள் விழிப்புணர்வுடன் ரோந்துப் பணியில் ஈடுபடும். சீனாவுக்கு தொடர் அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்திய பெருங்கடல் பகுதியில் போர்க்கப்பல்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே உயர் ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்வான் பகுதியில் சீன ராணுவம் காலி செய்துள்ள நிலையில் பாங்காங்சோ பகுதியில் சீன ராணுவம் வீரர்களை இன்னும் குவித்து வருகிறது.

கடந்த ஜூலை 24ல் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. நான்கு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் சீனா ராணுவ பலத்தை குறைக்காத நிலையில் இந்தியா சீனாவிடம் எல்லைப் பகுதியில் வீரர்களை இடத்தை காலி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE