நடிகர் தற்கொலையில் இழுக்கப்படும் அரசியல்வாதி| Dinamalar

நடிகர் தற்கொலையில் இழுக்கப்படும் அரசியல்வாதி

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (3)
Share
 டில்லி உஷ்

பீஹாரை சேர்ந்த, ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில், ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டார். ஒரு சாதாரண தற்கொலை தான் என முதலில் சொல்லப்பட்ட இந்த விவகாரம், இப்போது மஹாராஷ்டிரா மற்றும் பீஹார் அரசியலை கலக்கிக் கொண்டிருக்கிறது.

இவருடன் நெருக்கமாக, ஒன்றாக வாழ்ந்து கொண்டிருந்த, ஹிந்தி நடிகை ரியா சக்ரவர்த்தி மீது, பாட்னா போலீசில் புகார் அளித்துள்ளார் சுஷாந்தின் அப்பா. 'என் மகன் தற்கொலைக்கு காரணம், இந்த நடிகை தான். சுஷாந்தின் கோடிக்கணக்கான பணத்தை அவர் சுருட்டிவிட்டார்' என்பது, புகாரின் சாராம்சம்.சுஷாந்தின் கோடிக்கணக்கான பணம் எங்கே போனது என, அமலாக்கத் துறையும் விசாரணையில் இறங்கியுள்ளது.

இதற்கிடையே, 'பாட்னாவில் தொடரப்பட்டுள்ள வழக்கை, மும்பைக்கு மாற்ற வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார், நடிகை ரியா.சுஷாந்தின் அப்பாவிற்கு ஆதரவாக, பீஹார் அரசும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மஹாராஷ்டிர அரசும், இந்த வழக்கில், தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என, கோரியுள்ளது.

'சுஷாந்தின் தற்கொலைக்கு காரணம், ஒரு இளம் அரசியல்வாதி' என, டில்லி மற்றும் மும்பை அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. நடிகை ரியாவிற்கும், அந்த அரசியல்வாதிக்கும் இருந்த தொடர்பை, சுஷாந்த் எதிர்த்தார் என்கின்றனர். தற்கொலைக்கு முன்தினம், ரியா நடத்திய விருந்தில், சுஷாந்த் கலந்து கொண்டார். விருந்துக்கு, அந்த அரசியல்வாதியும் வந்தாராம். இதனால் வெறுப்படைந்த சுஷாந்த், ரியாவுடன் சண்டை போட்டு, அங்கிருந்து வெளியேறிவிட்டாராம். மறுநாள், சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார்.

அந்த இளம் அரசியல்வாதியின் தந்தையும், மஹாராஷ்டிராவில் மிகப் பெரிய அரசியல் புள்ளியாம். விருந்து நடந்த இடத்தில் இருந்த, 'சிசிடிவி' கேமராக்கள் வேலை செய்யவில்லையாம். இது பெரும் பிரச்னையை கிளப்பியுள்ளது. 'விரைவில் இந்த இளம் அரசியல்வாதியின் பெயர் வெளியாகும். இது மஹாராஷ்டிர, சிவசேனா - காங்., கூட்டணி அரசுக்கு பிரச்னையை ஏற்படுத்தும்' என, சொல்லப்படுகிறது.

இன்னொரு பக்கம், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், இந்த வழக்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். காரணம், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஜாதிக்கு, அதிக ஓட்டு வங்கி, பீஹாரில் உள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில், பீஹாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், இந்த வழக்கில் அமலாக்க துறையும் விசாரணை செய்ய வேண்டும் என, டில்லிக்கு நிதிஷ் குமார் சொன்னதும், அது உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒரு நடிகரின் தற்கொலை, இரு மாநிலங்களில் அரசியலையே மாற்றிக் கொண்டிருக்கிறது.


கந்த சஷ்டி விவகாரத்தில் உளவுத் துறை தந்த அறிக்கைகந்த சஷ்டி கவசத்தை கேவலப்படுத்திய கருப்பர் கூட்டத்தின் முக்கிய புள்ளி, இப்போது சிறையில் உள்ளார். இது தொடர்பாக, தமிழக போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

கந்த சஷ்டி கவசத்தை கேலி செய்த இந்த கூட்டம் குறித்து, ஓர் அறிக்கை வேண்டும் என, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உளவுத் துறையிடம் கேட்டிருந்தாராம். களத்தில் இறங்கிய மத்திய அரசின் உளவுத் துறை, கருப்பர் கூட்டம் தொடர்பான முழு விபரங்களை திரட்டி, ரகசிய அறிக்கையை அமைச்சர் அமித் ஷாவிடம் அளித்துள்ளது. கருப்பர் கூட்டத்திற்கு பண ரீதியாக யார் உதவி வருகின்றனர்; இந்த அமைப்பின் பின்னால் இருப்பவர்கள் யார்; எந்த அரசியல் கட்சிகள், இந்த கூட்டத்துடன் தொடர்பு வைத்துள்ளனர் என, அனைத்து விபரங்களையும், உளவுத் துறை திரட்டியுள்ளதாம். இதை வைத்து, தமிழக அரசியலில் பிரசாரத்தை மேற்கொள்ள, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

தி.மு.க.,வின் கடவுள் எதிர்ப்பு நிலை; கருப்பர் கூட்டத்திற்கு எதிராக, அதிகம் பேசாமல், அமைதி காத்தது என, பல விஷயங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல, பா.ஜ., தயாராகி விட்டதாம். 'அடுத்த முறை தமிழகத்தில் பயணம் செய்யும் போது, பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ, இந்த கருப்பர் கூட்டம் தொடர்பாக பேசுவர். தமிழக கட்சி களுக்கும், இந்த கூட்டத்திற்கும் உள்ள உறவை வெளிப்படுத்துவர்' என்கின்றனர், டில்லி பா.ஜ.,வினர். இந்த விவகாரத்தில் கைமாறிய பணம் தொடர்பான விவகாரத்தில், அமலாக்க துறையும் விசாரணையில் இறங்கும் என சொல்லப்படுகிறது.


அயோத்தி ராமர் கோவிலும் தமிழகத்தில் கிடைத்த உதவியும்வரும், 5ம் தேதி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்படுகிறது. பிரதமர் மோடி உட்பட, பலர் கலந்து கொள்கின்றனர். கொரோனாவால் இந்த நிகழ்ச்சி அடக்கி வாசிக்கப்படுகிறது.

பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கைகளில், ராமர் கோவில் கட்டுவோம் என, தொடர்ந்து வாக்குறுதி அளிக்கப்பட்டு வந்தது. இப்போது அதை, மோடி தலைமையில் நிறைவேற்றுகிறது, பா.ஜ., அயோத்தி ராமர் கோவிலுக்கும், தமிழகத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து, டில்லியில், குறிப்பாக பா.ஜ., வட்டாரங்களில் அலசப்படுகிறது.

முதலாவதாக, காஞ்சி சங்கராச்சார்யார், ஜெயேந்திர சரஸ்வதி. ராமருக்கு கோவில் கட்டியே ஆக வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை, ஆன்மிக ரீதியாக மேற்கொண்டார், ஜெயேந்திரர்.அடுத்தவர், மூத்த வழக்கறிஞரும் இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான, கே. பராசரன். சமஸ்கிருத பண்டிதரான இவர் தான், ராமர் கோவில் வழக்கில், உச்ச நீதிமன்றத்தில், முன் நின்று வாதாடியவர். ராமர் கோவில் டிரஸ்டியாக நியமிக்கப்பட்டுள்ளார். கோவில் கட்ட, சட்ட ரீதியாக உதவியவர், இவர்.

மூன்றாவதாக, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா. ராமர் கோவில் கட்டுவதற்காக, முதன் முதலாக ஆதரவளித்த, மாற்றுக் கட்சி அரசியல் தலைவர் இவர். கோவில் கட்ட, மற்ற கட்சிகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்த போது, முதல்வர் பதவியில் இருந்த போதும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆதரவு கொடுத்தார், ஜெயலலிதா. அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையிலேயே கோவில் கட்ட வேண்டும் என சொன்னவர். அரசியல் ரீதியாக, மோடிக்கு இந்த கோவில் விவகாரத்தில் உதவினார், ஜெ.,

இப்படி இந்த மூவரும், ஆன்மிக, சட்ட மற்றும் அரசியல் ரீதியாக, அயோத்தியில் கோவில் கட்ட உதவி செய்துள்ளது குறித்து, பா.ஜ., வட்டாரங்களில் ஆர்வமாக உரையாடிக் கொள்கின்றனர்.
அமைச்சர்களை ஓரங்கட்டிய மோடிபுதிய கல்வி கொள்கையை, சமீபத்தில் அறிவித்தது, மத்திய அரசு. இந்த புதிய கொள்கை, 2016லிருந்து கிடப்பிலேயே இருந்தது. மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர்கள், இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், மோடி இதில் ஆர்வமாக இருந்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கஸ்துாரிரங்கன் தலைமையிலான குழு, இந்த கொள்கைக்கு முழு வடிவம் கொடுத்து, இறுதி செய்தது.இந்த விவகாரத்தில், மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியாலை, மோடி கண்டுகொள்ளவே இல்லையாம். கொள்கைக்கு, இறுதி வடிவம் கொடுத்ததில், துறை அமைச்சரின் பங்கு எதுவுமே கிடையாது. இவருக்கு முன், இந்த துறை அமைச்சராக இருந்த, பிரகாஷ் ஜாவடேகருக்கும், இதில் பங்கு இல்லை. இந்த இரண்டு அமைச்சர்களும், புதிய கல்வி கொள்கையை கொண்டு வர, கால தாமதம் செய்கின்றனர் என்பதால், இந்த வேலையை, மனித வள மேம்பாட்டு துறை செயலரும், சீனியர் ஐ.ஏ.எஸ்.,அதிகாரியுமான அமித் கரேவிடம் ஒப்படைத்தார் மோடி.

இந்த விஷயத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்ட கரே, ஜார்க்கண்ட் கேடரை சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி. இப்போது கல்வித் துறை என பெயர் மாற்றப்பட்டுள்ள மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் என, இரண்டு துறைகளுக்கும் செயலராக பணியாற்றுகிறார், கரே. அதிரடியாக வேலை செய்வதில், கில்லாடி.பீஹாரில் கலெக்டராக இருந்த போது, லாலு பிரசாத்திற்கு எதிராக, மாட்டு தீவன ஊழலை, முதலில் வெளிக் கொண்டு வந்தவர், இந்த கரே. இதனால் இப்போது தேர்த லில் போட்டியிட முடியாமல் சிறையில் காலம் கழித்து வருகிறார், லாலு.

பிரதமரின் கண் அசைவுக்கு ஏற்ப, உடனே வேலையில் இறங்கிய கரே, புதிய கல்வி கொள்கைக்கு, இறுதி வடிவம் கொடுத்து, அதை வெளியிடவும் வைத்தார். இவரையும், இவருடைய திறமையையும், மோடிக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான், இந்த அதிகாரியை வைத்துக் கொண்டு, அமைச்சர்களை ஓரம் கட்டி, தான் விரும்பிய புதிய கல்வி கொள்கையை கொண்டுவந்து விட்டார், மோடி.
மோடியை நெருங்கும்தி.மு.க.,- எம்.பி.,க்கள்தி.மு.க., - எம்.பி.,க்கள் இருவர், சமீபத்தில் பிரதமர் மோடியை, மீண்டும் ஒருமுறை சந்தித்துள்ளனர். இவர்கள், அடிக்கடி மோடியை சந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த முறை நடந்த சந்திப்பு, அதிக நேரம் நீடித்ததாம். கொரோனா சமயத்திலும், மறுப்பு தெரிவிக்காமல் இவர்களை சந்தித்து பேசியுள்ளாராம் பிரதமர். இந்த சந்திப்பின் போது, தமிழக அரசியல் தொடர்பான பல விஷயங்கள்அலசப்பட்டதாம்.பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான சந்திப்பு என சொல்லப்பட்டாலும், பா.ஜ.,வினர், சந்தேகக் கண்களோடு தான் பார்க்கின்றனர்.

'இந்த எம்.பி.,க்கள் மீதுள்ள சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்குகள் குறித்து தான் அடிக்கடி பிரதமரை இவர்கள் சந்தித்து வருகின்றனர்; இந்த விவகாரம் ஸ்டாலினுக்கு தெரியுமா' என, கேள்வி எழுப்புகின்றனர், பா.ஜ.,வினர்.பிரதமரை சந்தித்ததோடு, அவரிடம் மனு கொடுப்பது போல புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் இந்த எம்.பி.,க்கள் விரும்பினார்களாம். ஆனால் பிரதமர் அலுவலக அதிகாரிகள் மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X