அமிதாப் பச்சன் டிஸ்சார்ஜ் அபிஷேக்கிற்கு சிகிச்சை நீடிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அமிதாப் பச்சன் 'டிஸ்சார்ஜ்' அபிஷேக்கிற்கு சிகிச்சை நீடிப்பு

Added : ஆக 02, 2020
Share

மும்பை; கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், 77, நேற்று மருத்துவமனையிலிருந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.

அவரது மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனுக்கு கொரோனா அறிகுறி நீடிப்பதால், சிகிச்சை தொடர்கிறது.பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு, சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவரது மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அபிஷேக்கின் மனைவியும், நடிகையுமான ஐஸ்வர்யா, அவரது மகள் ஆரத்யா ஆகியோரும் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஐஸ்வர்யாவும், ஆரத்யாவும், கொரோனாவிலிருந்து குணமடைந்ததை அடுத்து, சமீபத்தில், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமிதாப் பச்சனுக்கு, நேற்று காலை மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில், அவருக்கு கொரோனா அறிகுறி இல்லை என, உறுதி செய்யப்பட்டதால், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். வீடு திரும்பிய அவர், தொடர்ந்து சில நாட்களுக்கு தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

சமூக வலைதளத்தில் அவர் கூறியுள்ளதாவது: கடவுளின் ஆசிர்வாதம், ரசிகர்கள், பொதுமக்களின் பிரார்த்தனை, அன்பு ஆகியவை காரணமாக, கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளேன். என் மீது அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றி. நானாவதி மருத்துவமனை டாக்டர்கள், நர்ஸ், ஊழியர்களுக்கும் நன்றி.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார். இதற்கிடையே, நடிகர் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா அறிகுறி தொடர்வதால், மருத்துவமனையில், அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X