சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலுார் மீனவ கிராமத்தில் கலவரம்: வாலிபர் கொலை; படகுகள் தீக்கிரை

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 02, 2020
Share
Advertisement
 கடலுார் மீனவ கிராமத்தில் கலவரம்: வாலிபர் கொலை; படகுகள் தீக்கிரை

கடலுார்; கடலுார் அருகே, தேர்தல் முன்விரோத தகராறில், மீனவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் ஏற்பட்ட கலவரத்தில், வீடுகள், படகுகள், வலைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

கடலுார் அடுத்த தாழங்குடா மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி; முன்னாள் ஊராட்சித் தலைவர். கடந்த உள்ளாட்சித் தேர்தலில், குண்டு உப்பலவாடி ஊராட்சித் தலைவர் பதவிக்கு, மாசிலாமணி மனைவி பிரவீனா, அதே பகுதியைச் சேர்ந்த, மதியழகன் மனைவி சாந்தி போட்டியிட்டனர்.

இதில், சாந்தி, ஊராட்சி தலைவர் ஆனார். இதனால், மாசிலாமணி, மதியழகன் தரப்பினர் இடையே விரோதம் ஏற்பட்டது. கடந்த மாதம் மாசிலாமணி, 10து வார்டில் கிருமி நாசினி தெளித்தார். இதற்கு, ஊராட்சி தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன் எதிர்ப்பு தெரிவித்தார். தகராறில், ஒருவரை ஒருவர் தாக்கினர்.இந்நிலையில், மாசிலாமணியின் தம்பி மதிவாணன், 36, நேற்று முன்தினம் இரவு, 9:30 மணியளவில் பைக்கில் சென்றார். அப்போது, கண்டக்காடு - தாழங்குடா இடையே மர்ம கும்பல் வழிமறித்து, அவரை வெட்டி கொலை செய்து தப்பியது.

படகுகள் எரிப்பு

ஆத்திரமடைந்த மாசிலாமணி ஆதரவாளர்கள், மதியழகன் தரப்பினர் வீடுகளை சூறையாடினர். எட்டு வீடுகள் சேதமடைந்தன. சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இரண்டு கார், 12 பைக்குகள் சேதப்படுத்தப்பட்டன.ஒரு கோஷ்டியினர், கடற்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 26 படகுகள், மீன்பிடி வலைகளை பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இதில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.

போலீசார் குவிப்பு

போலீசார் விரைந்து வந்து, கலவரத்தை கட்டுப்படுத்தினர். அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, 600 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வஜ்ரா வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் கூறியதாவது:தாழங்குடா கிராமத்தில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட, 17 பேரில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பாக, 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வீச்சரிவாள் போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கிராமம் முழுதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொலை மற்றும் கலவரத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க, மூன்று டி.எஸ்.பி.,க்கள் தலைமையில், ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

ரூ.5 கோடி சேதம்

நேற்று காலை, மீன் வளம் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், கலவரம் நடந்த இடத்தில் ஆய்வு செய்து, சேத மதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தினர்.இதில் சேத மதிப்பு, 5 கோடி ரூபாய் என, கணக்கிடப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட மதிவாணன் உடல், விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பிரேத பரிசோதனை முடிந்து, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தாழங்குடாவில், போலீஸ் பாதுகாப்புடன், நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X