வாடகைக்கு வீடு எடுத்து கொள்ளை புதுவையில் சிக்கிய சென்னை திருடன்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாடகைக்கு வீடு எடுத்து கொள்ளை புதுவையில் சிக்கிய சென்னை திருடன்

Added : ஆக 02, 2020 | கருத்துகள் (1)
Share
 வாடகைக்கு வீடு எடுத்து கொள்ளை புதுவையில் சிக்கிய சென்னை திருடன்

புதுச்சேரி; புதுச்சேரியில் வாடகைக்கு வீடு எடுத்து, கொள்ளையில் ஈடுபட்டு வந்த, சென்னை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, வெங்கட்டா நகர் ரோஸ் அபார்ட்மென்ட் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ரகனாபேகம், 60; டில்லியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். மாதம் ஒருமுறை, புதுச்சேரி வீட்டிற்கு வந்து செல்வார். கொரோனா ஊரடங்கால், மூன்று மாதங்களாக வரமுடியவில்லை. வீடு நீண்ட நாட்களாக பூட்டிக் கிடப்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், கடந்த, 21ம் தேதி, வீட்டின் முன்பக்க கதவை உடைத்து, பீரோவில் இருந்த, 60 சவரன் நகை, 2 லட்சம் ரூபாயை திருடிச் சென்றனர்.

பெரியக்கடை போலீசார் விசாரணையில், சென்னை, கோடம்பாக்கத்தை சேர்ந்த, 'மார்க்கெட்' சுரேஷ், 42, தலைமையிலான கும்பல், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.காலாப்பட்டு பகுதியில் பதுங்கியிருந்த சுரேஷை, நேற்று கைது செய்தனர். அவரிடம், 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 40 சவரன் நகை, 1.5 கிலோ வெள்ளியை பறிமுதல் செய்தனர்.

போலீசார் கூறியதாவது:மார்க்கெட் சுரேஷ் மீது, தமிழகத்தில், 20க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளையடித்த வழக்குகள் உள்ளன.சமீபத்தில், சென்னை மீஞ்சூர் கொள்ளை வழக்கில் கைதான சுரேஷ், இரண்டு மாதங்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்தார்.புதுச்சேரி காலாப்பட்டு நடுத் தெருவில் வாடகை வீட்டில் தங்கி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். கொள்ளைக்கு உடந்தையாக இருந்த, அவரது காதலி கங்கா, கூட்டாளி ஸ்ரீதரை தேடி வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X