சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

எங்கள் சோகம் யாருக்கு தெரியும்?

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கொரோனா, முதியோர், சோகம்

நொறுக்குத் தீனிக்கு ஆசைப்படும் போது, பல் இல்லாத தன்மை; நல்ல இசை கேட்க ஆசைப்படும் போது, செவித்திறன் குறைதல்; நல்ல புத்தகங்கள் வாசிக்க ஆசைப்படும் போது கண் பார்வை குறைவு. இவற்றுடன் சிரமப்படும் முதியோரை கொரோனா படுத்தும் கொடுமை, மிகவும் கூடுதல்.

இது, முதியோர் நிலை. குழந்தைகள் என்றால் படம் வரையலாம். வீட்டுக்குள்ளேயே விளையாடும் விளையாட்டுகள் விளையாடலாம்; கலைகளை கற்றுக் கொள்ளலாம்; தொலைபேசியில் நண்பர்களுடன் கதை பேசலாம். குழந்தைகளின் வழியில் பெரியவர்களும் தொலைபேசியில் பழைய நினைவுகளை பழகிய நட்பு, உறவினரிடம் அசை போடலாம். ஆனால், முதுமை அடைந்தவர்களும், பல வகையில், பல தரத்தில் இருக்கின்றனரே... அவர்களை பல விதங்களில் வாட்டுகிறது கொரோனா.

தினசரி எத்தனை பேரை கொரோனா பற்றிக் கொண்டது என்றும், எத்தனை பேர் பலியாயினர் என்றும், 'டிவி'க்களில், 'பிரேக்கிங்' செய்திகள் வருகின்றன. அதை பார்க்கும் முதியோர் மனநிலை, சொல்லி மாளாது. அதுவும், நான்கைந்து மாதங்களாக, தினமும், இதுபோன்ற செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும் போது, அதை தினமும் கேட்கும் முதியோர் மனநிலை பற்றி, செய்தியாளர்கள் யோசிப்பதில்லையோ என்ற சந்தேகம் வருகிறது.


நேர்மறைச் சிந்தனைகள் வளரும்:

அதற்குப் பதில், எத்தனை பேர் குணமாயினர்; எத்தனை நாளில் குணம் ஆயினர்; எந்த சிகிச்சை முறையில் குணம் ஆயினர்; பிற நோய்களுடன் குணம் ஆனோர் எத்தனை பேர் என்ற தகவலையும் சொன்னால், முதியோருக்கு நேர்மறைச் சிந்தனைகள் வளரும்; பயம் விலகி, தைரியம் கூடும்.அதுவே ஒரு நோய் எதிர்ப்பு சக்தி தானே! ஏனெனில், வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் முதியோருக்கு, கொரோனா எமனாக இருக்கும் என்கின்றனர். எளிதில் முதியோரை அந்த தொற்று தொற்றிக் கொள்ளும் என்கின்றனர். அதை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டிக் கொள்வது தான் சிறந்தது என்ற அறிவுரையும் உள்ளது.

எத்தனை மருந்துகள் சாப்பிட்டாலும், மனதில் உறுதி இல்லாவிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி எப்படி வேலை பார்க்கும்... இதை, ஆட்சியாளர்களும், கொரோனா செய்தியை பரப்பும் செய்தியாளர்களும் உணர்வதில்லை. கடந்த, 1914 - 1918ல் நடந்த முதலாம் உலகப் போரில், 22 கோடி பேர் பலி ஆனதும், 1939 - 1945ல் நடந்த இரண்டாம் உலகப் போரில், 60 கோடி பேர் பலி ஆனதும், காலரா, அம்மை, பொருளாதார பாதிப்பு என, முதியோருக்கு வடுக்கள், முந்தைய வலிகள்; அவற்றில் இருந்தும் மீண்டு வந்திருக்கிறோம்.

அதுபோல, 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனாவால் உயிர் பலி, பொருளாதார சீரழிவு வந்தாலும், அதிலிருந்து நம் முதியோரை பாதுகாக்கிறோம் என்ற நம்பிக்கையின் ஊட்டமே, நிச்சயமாக நிமிர்ந்து மீண்டு வாழச் செய்து விடும். ஆனால், இங்கு நிலைமை அப்படி இல்லையே. ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில், முதியோர் நலம், அரசால் பேணப்படுகிறது. முதியோருக்கு நல்ல ஆரோக்கியமான சூழ்நிலை அமைத்துக் கொடுக்கப்படுகிறது. ஆனால், நம் நாட்டில் அப்படியில்லையே!

தெருவோரங்களிலும், கடை வீதிகளிலும், வேண்டாத பொருட்களாக முதியோர் பெரும்பாலும் அவதிப்படுவதை காண முடிகிறது. இந்த லட்சணத்தில், கொரோனா, முதியோருக்கு பெரும் பிரச்னையாக மாறியுள்ளது.இந்த தொற்று சிக்கலில் இருந்து இளைஞர்கள் எளிதில் மீண்டும் விடுவர்; ஆனால், முதியோர் நிலை, மிகவும் பயங்கரமாகத் தான் இருக்கிறது. இந்த பயங்கரத்தை அரசோ அல்லது சுகாதாரப் பணியாளர்களோ நினைத்து பார்ப்பதில்லையோ என்ற அச்சமும் ஏற்படுகிறது.

கடல் சீற்றம், 'சுனாமி' சூறாவளி, புயல், வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம் இவை எல்லாம் கொஞ்ச நாட்கள் தான் தொந்தரவு தந்தன. ஆனால், முடிவு தெரியாத துாரத்தில் கொரோனா பரவல் இருக்கும் போது, முதியோர் பாடு திண்டாட்டம் தான் என்பதும் மறுப்பதிற்கில்லை .முதியோரில் தான் எத்தனை வகைப்பட்டவர்கள்... பிள்ளைகள், தங்கள் வீட்டில் வைத்துக் காப்பாற்றும் முதியோர், கொடுத்து வைத்தவர்கள். அதே சமயம், பணக்கார முதியோர் இல்லங்களில் இருக்கும் முதியோர்களும் பாதுகாப்பாக இருக்க முடிகிறது. இவர்களுக்கு எல்லாம் பொழுதை நெட்டித்தள்ள வாய்ப்பு கிடைத்து விடுகிறது.

சாதாரணமான காப்பகங்களில் வாழும் முதியோர், பொருளாதார சிக்கல் உள்ள முதியோர், ஆதரவற்ற முதியோர் போன்றோரின் நிலையை எண்ணும் போதே, கண்ணீர் வடிக்க வேண்டி உள்ளது. 'கஷ்டங்களும் நிரந்தரம் இல்லை; கஷ்டப்படுத்தியவர்களும் நிரந்தரம் இல்லை' என்ற வாசகத்தை உள் மூச்சாக வாங்கித் தான் வயதானவர்கள் வாழ வேண்டும்; இது காலத்தின் கட்டாயம்

.'மகன் குடும்பம், அமெரிக்காவில் என்ன பாடுபடுகிறதோ, மகள் குடும்பம் சென்னையில் எப்படி தவிக்கிறதோ...' என்று, கிராமத்தில் மன அழுத்தத்தில் இருக்கும் முதியோர் மிக அதிகம். வயது முதிர்ந்து, இறந்த தந்தையின் கடைசி காரியத்தில் பங்கு கொள்ள முடியாத வெளிநாட்டில் வசிக்கும் மகன், வாழும் தாய்க்கு போனில் தான் ஆறுதல் சொல்ல முடிகிறது. வயது முதிர்ந்து இறந்த தாயின் இறுதி சடங்கை செய்ய, மகனால் வர முடியவில்லை.

பெற்ற குழந்தைகள், உற்றார், உறவினர்களுடன் வாழும் முதியோருக்கு, இந்த நேரத்தில், 'தடா' தான். வெளியே போய் விடாதே; யார் வந்தாலும், பேசி விடாதே; சுத்தமாக இருக்க பழகிக் கொள் என, எத்தனை எத்தனையோ கட்டளைகள்... புகை பிடிப்போரை கொரோனா சீக்கிரம் பற்றிக் கொள்ளும் என்கின்றனர். புகைப்பவர் நிறுத்தி விடலாம். ஆனால், வாழ்வாதாரமே துாசியில் தான் எனும் போது, அதனுடன் வாழ்பவர்களை கொரோனா தொற்றும். ஏழ்மையில் இருப்பவர்கள் என்ன செய்வர்?

ஹைபர் டென்ஷன், டயாலிசிஸ் செய்வோர், ஈரல் நோய், புற்றுநோய், இதய நோய், நீரிழிவு, ஆஸ்துமா, அனீமியா, இதய வால்வு அடைப்பு, சுவாசக் கோளாறு உள்ளவர்கள் பாடு இந்த நேரத்தில் திண்டாட்டம் தான்.மன தைரியம் மெத்த அவசியம்எதையும் மனம் விட்டு பேசக்கூடிய முதியோர், நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

வயதானோருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அலோபதி, ஆயுர்வேதம், ஓமியோபதி, சித்த மருந்துகள் மட்டும் தராது; மன தைரியம் மெத்த அவசியம். ஆனால், இந்த காலத்தில், முதியோருடன் அன்பாக பேசத் தான் யார் தயாராக இருக்கின்றனர்; ஒரே வீட்டில் வசிக்கும் முதிய பெற்றோருடன், பேசியே பல மாதங்கள் பலருக்கு ஆகி இருக்கும். ஆனால், அந்த முதிய உள்ளம், எப்போதும், தன் வாரிசுகள் மீது தான் உயிரை வைத்துக் கொண்டிருக்கும்.

இந்த நேரத்தில், கொரோனா பீதி வேறு. கொரோனா வந்து விட்டால், இப்போது, அரையும், குறையுமாக பார்க்கும் வாரிசுகள், கைகழுவி விடுவரோ என்ற அச்சமும், பயமும் தான் ஏராளமான முதியோருக்கு இப்போது இருக்கும் பீதியே! இறக்க அஞ்சுவதில்லை; மருத்துவமனையில் கொண்டு போய், போட்டு விட்டு வந்து விடுவரே... சிகிச்சை முடித்து வந்தாலும், சகஜமாக பழகுவரா என்ற அச்ச உணர்வே, பல முதியோரை, இந்த கொரோனா காலத்தில் கொன்று விடுகிறது.

எனினும், அந்த காலத்தில் சாப்பிட்ட ஆரோக்கியமான உணவால், பெரும்பாலான முதியோர், சிறை வாழ்க்கை வாழ்ந்து, கொரோனாவை கொன்று, வென்று வருகின்றனர். அரசு சொல்லியபடி, கபசுர குடிநீர், சித்த வைத்திய முறையில் வருமுன் காக்க உதவும். அத்துடன் வீட்டில் உள்ள பொருட்களின் மூலம், ஒரு மூலிகை மருந்தும் தயாரித்து, முதியோர் அருந்தலாம்.

சுக்கு, 100 கிராம், அதிமதுரம், 100 கிராம், சித்தரத்தை, 30 கிராம், கடுக்காய் தோல், 30 கிராம், மஞ்சள், 10 கிராம், திப்பிலி, 5 கிராம், ஓமம், 5 கிராம், கிராம்பு, 5 கிராம், மிளகு, 5 கிராம் எடுத்து, இடித்து கலந்து, பொடி ஆக்கவும். 400 மி., தண்ணீரில் இந்த பொடியில், 10 கிராம் எடுத்து கலந்து கொதிக்க வைத்து, 100 மி., நீராக சுருங்கியதும், வடிகட்டி, நாட்டு சர்க்கரை அல்லது தேன் கலந்து குடிக்கலாம்.

முதியோர் மட்டுமல்ல, நோய் எதிர்ப்பு சக்தி தேவைப்படுவோர் இதை அருந்தலாம். கொரோனா காலத்திற்கு பிறகும் இதை அருந்தலாம். இதுபோக, வீட்டில் நெல்லிக்காய், எலுமிச்சை சாறு, மிளகுத்துாள், வெள்ளை பூண்டு, பெருங்காயம் சேர்ந்த உணவுகளை சேர்த்துக் கொள்வதும், துளசி, கற்பூரவள்ளி சாறு குடிப்பதும், எல்லாருக்கும் பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்.இவற்றை தயாரிக்க, தனித்திருக்கும் முதியோரின் முதுமை, அதனால் ஏற்பட்டுள்ள உடல் வலுவற்ற தன்மை இடம் தருவதில்லை.

எனினும், கொரோனாவின் கொடுமையை தவிர்க்க, எப்படியாவது செய்து சாப்பிட்டு தான் தீர வேண்டும் என்ற கட்டாயம். வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதன் கொடுமை, அனுபவித்து பார்த்தோருக்கு மட்டும் தான் தெரியும். வாழ்வே வெறுத்துப் போகும் அளவுக்கு வெறுமை உணர்ச்சி தலை துாக்கினால், மன அழுத்தம் கூடி விடும். மன அழுத்தம் என்பது, கொரோனாவை காட்டிலும் கொடிய நோய். அதை தவிர்ப்பது முக்கியம்.

அந்தக் காலத்தில், ஆற்றுப்படுத்துதல் என்று ஒன்று உண்டு. அதுபோல, மனசை பழைய, நல்ல நிகழ்ச்சிகளில் செலவிடுவது தான் வடிகால்.கணவன் - மனைவி இருவரும் வயதானவராக இருந்தால், பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், தனிமை தரும் எரிச்சல் இருவரிடமும் புகைச்சல் ஆவதும் தவிர்க்க முடியாதது. ஆனாலும், புகைச்சலை தவிர்க்க வேண்டியது அவசியமே. இதுவே, முதியோர் ஒற்றையாக இருந்தால், நல்ல புத்தகங்களை திரும்ப திரும்ப படித்தல், சிறந்த ஆற்றுப்படுத்தல்.


இதழின் கணிப்பு அதிர்ச்சி:

வங்கி அதிகாரியாக இருந்து நான் ஓய்வு பெற்று, 20 ஆண்டுகள் ஆகப் போகின்றன என்பதால், பங்கு சந்தை, மியூச்சுவல் பண்டு துறையில் இருந்தவன். நிறைய புத்தகங்கள் எழுதியவன் என்பதால், முன்பெல்லாம் வீடு தேடி, நண்பர்கள் அதிகம் வருவர்.இப்போது தொலைபேசியில் உரையாடல்; இருவருக்கும் நன்மை தான்.தற்போது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வாரம் மூன்று, நான்கு பேராவது வீட்டிற்கு வருகின்றனர். முக கவசத்துடன் அவர்களை நான் வீட்டிற்குள் அனுமதிப்பது இல்லை.

வராண்டாவில் அமர வைத்து, ஆறடி தள்ளி அமர்ந்து பேசி அனுப்புவேன். இது மாதிரி, தன் மனைவியுடன் வந்த நண்பரையும், வராண்டாவில் அமர்த்தி பேசினேன். அவருக்கு கோபம். மனைவியிடம் என்ன சொல்லி கூட்டி வந்தாரோ... நான் உதாசீனப்படுத்தி விட்டேன் என்று, இருவருக்கும் பொதுவான நண்பரிடம் கோப வார்த்தைகள் கொட்டி இருக்கிறார். இப்படிப்பட்ட அவலங்களையும் இந்த கொரோனா, சந்திக்க வைத்து வேடிக்கை பார்க்கிறது.

இன்னொன்று... வாட்டும் கொரோனாவின் கொடூரத்தால் வாடுகிற முதுமையை பற்றி எண்ணும் போது, இனி இந்த உலகத்தில் முதியோர் எண்ணிக்கை கூடும் என்று பிரிட்டன், 'லான்செட்' இதழின் கணிப்பு, அதிர்ச்சியை தருகிறது. வரப் போகிற முதியோர் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று, இப்போதே வேண்டுதலை வைக்கத் தோன்றுகிறது!

- சீத்தலைச்சாத்தன், சமூக ஆர்வலர்
தொடர்புக்கு: 98424 90447
இ - மெயில்send2subvenk@gmail.com

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
04-ஆக-202009:06:24 IST Report Abuse
கல்யாணராமன் சு. சமூக ஆர்வலர் நேர்மறையான எண்ணங்களை சொல்லியிருந்தாலும், இந்த கட்டுரையில் 80% எதிர்மறையான எண்ணங்கள்தான் வெளிப்படுகின்றன ............ இதை எப்படி எடுத்துக்கொள்வதென்று தெரியவில்லை ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X