பொது செய்தி

இந்தியா

65.44 சதவீதம்! கொரோனாவில் குணமடைந்தோர் அதிகரிப்பு

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 02, 2020
Share
Advertisement
coronaupdate,covid19India,Indiafightscorona,coronaviruscrisis,coronavirusupdate,lockdown,quarantine,curfew,india,coronavirus,covid19

புதுடில்லி: நாட்டில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து, நேற்று வரை, 11.45 லட்சம் பேர் மீண்டுள்ளனர்;இது, 65.44 சதவீதமாகும். தொற்றில் பலியானோர் விகிதம் மேலும் சரிந்து, 2.13 சதவீதமாக குறைந்துள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோருக்கு, நாடு முழுதும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், பாதிப்பில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


மேலும் குறையும்:


இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், நேற்று வெளியிட்ட அறிக்கை: நாட்டில், வைரஸ் பாதிப்பில் இருந்து, நேற்று, 51 ஆயிரத்து, 225 பேர் குணமடைந்துள்ளனர். இவர்களுடன், தொற்றில் இருந்து இதுவரை, 11.45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். இதனால், குணமடைந்தோர் விகிதம், 65.44 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நாட்டில், நேற்றைய நிலவரப்படி, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர், மருத்துவ சிகிச்சையில் இருப்போர் உள்ளிட்ட, 5.68 லட்சம் பேர், வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஒட்டுமொத்த பாதிப்பில், சிகிச்சை பெறுவோர் விகிதம், 32.43 சதவீதமாக உள்ளது.உலக நாடுகளுடன் ஒப்பிடும் நிலையில், நம் நாட்டில், இறப்பு விகிதம், 2.13 சதவீதமாக குறைந்து உள்ளது.

மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன், மத்திய அரசு ஒருங்கிணைந்து செயல்படுவது மற்றும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், நோய் பரவலை தடுக்க தீவிரமாக செயல்படுவோரின் நடவடிக்கைகளால், தொற்றில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், இறப்பு விகிதம் குறைந்துள்ளது. விரிவான சோதனை மற்றும் தரப்படுத்தப்பட்ட மருத்துவ சேவைகள் வாயிலாக, மீட்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்வதுடன், இறப்பு விகிதம் மேலும் குறையும்.

இதற்கிடையே, கடந்த, 24 மணி நேரத்தில், 4.63 லட்சம் பேரிடம், வைரஸ் தொற்று கண்டறிவதற்கான பரிசோதனை நடத்தப்பட்டது.இதில், 54 ஆயிரத்து, 735 பேரிடம், பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 17 லட்சத்து, 50 ஆயிரத்து, 723 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுதும், நேற்று வரை, 1.98 கோடி மக்களிடம், வைரஸ் பாதிப்பினை கண்டறியும், மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.


பலி எண்ணிக்கை:

வைரசால் பாதிக்கப்பட்டவர்களில், நேற்று, மஹா.,வில், 322 பேர், தமிழகத்தில், 99; கர்நாடகாவில், 98; ஆந்திராவில், 58 பேர் இறந்துள்ளனர்.மே.வங்கத்தில், 48; உ.பி.,யில், 47; டில்லியில், 26 பேர் நேற்று பலியாகி உள்ளனர்.குஜராத்தில், 23; பஞ்சாபில், 19; ராஜஸ்தானில், 16; பீஹாரில், 13; தெலுங்கானா மற்றும் ஜம்மு - காஷ்மீரில், தலா, 11 பேர் உள்ளிட்ட, மொத்தம், 853 பேர், நேற்று இறந்துள்ளனர்.

இதனால், நாட்டின் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை, 37 ஆயிரத்து, 364 ஆக உயர்ந்துள்ளது. இதில், 15 ஆயிரத்து, 316 பேருடன் மஹா., முதலிடத்தில் உள்ளது. தமிழகம், 4,034 பேருடன், இரண்டாம் இடத்திலும், டில்லி, 3,989 பேருடன், மூன்றாம் இடத்திலும் உள்ளன.கர்நாடகாவில், 2,412; ஆந்திராவில், 1,407; தெலுங்கானாவில், 530 பேர் இறந்துள்ளனர். குஜராத்தில், 2,464; உ.பி.,யில், 1,677; மே.வங்கத்தில், 1,629 பேர், இதுவரை பலியாகி உள்ளனர்.

ம.பி.,யில், 876; ராஜஸ்தானில், 690; ஹரியானாவில், 428; பஞ்சாபில், 405 பேர் இறந்துள்ளனர். ஜம்மு - காஷ்மீரில், 388; பீஹாரில், 309; ஒடிசாவில், 187; ஜார்க்கண்டில், 113; அசாமில், 101 பேர் இதுவரை இறந்துள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


பாதிக்கப்பட்டோர் தகவல்கள் பதிவு:

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில், மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் 'எய்ம்ஸ்' மருத்துவமனையுடன் இணைந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குறித்த, பதிவேட்டினை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து, அதிகாரிகள் கூறியது: நாடு முழுதும், கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோர் குறித்த தகவல்கள், பதிவு செய்யப்பட உள்ளது. இது, உண்மையான தகவல்களை அறியவும், சிகிச்சை முறைகளை மேம்படுத்தவும் உதவும். வைரஸ் தொற்றுக்குள்ளானோர் குறித்த புள்ளி விபரங்கள், மருத்துவ சிகிச்சை மற்றும் ஆய்வக முடிவுகள், அனைத்து வயதினருக்கும் உள்ள பாதிப்புகள் போன்றவை, பதிவு செய்யப்படும்.

கொரோனா வைரசின் தாக்கம், இதுவரை கண்டறியப்படாத பல்வேறு அடிப்படை அம்சங்களை கொண்டுள்ளது. இது, நோய் குறித்த புரிதலுக்கு தடையாக உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து சேகரிக்கப்படும் தகவல்கள், ஆராய்ச்சியாளர்களுக்கும், மருத்துவ கொள்கைகளை உருவாக்குவோருக்கும் நோய் குறித்த புரிதலை ஏற்படுத்தும். நோய் தாக்கத்தின் அடுத்த கட்டம் குறித்து அறிந்து, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


'வென்டிலேட்டர்' ஏற்றுமதிக்கு அனுமதி:

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோருக்கு, 'வென்டிலேட்டர்' உதவியுடன் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உருவானதால், அவற்றின் ஏற்றுமதிக்கு, மார்ச் மாதம் தடை விதிக்கப்பட்டது. கொரோனா இறப்பு விகிதம், தற்போது குறைந்துள்ளதுடன், 0.22 சதவீதம் பேர் மட்டுமே, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுகின்றனர்.

நாட்டில், 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், அதிக அளவில் வென்டிலேட்டர் உற்பத்தி செய்வதால், அவற்றை ஏற்றுமதி செய்ய, மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்தது. இதற்கு, மத்திய அரசின் உயர்மட்ட அமைச்சர்கள் குழு, ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X