சீனாவுடனான பேச்சில் முடிவில்லை; அடுத்த அதிரடி நடவடிக்கைக்கு மத்திய அரசு தயார்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சீனாவுடனான பேச்சில் முடிவில்லை; அடுத்த அதிரடி நடவடிக்கைக்கு மத்திய அரசு தயார்

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (22)
Share
India, China, LAC, இந்தியா, சீனா, எல்லை பிரச்னை, அதிரடி நடவடிக்கை, மத்திய அரசு, தயார்

புதுடில்லி: எல்லையில் வாலாட்டும் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயாராகி வருகிறது. சீன கல்வி நிறுவனங்களுடனான தொடர்புகளை துண்டிக்க, வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே, நேற்று நடந்த ஐந்தாவது கட்ட பேச்சிலும் சுமுக முடிவு ஏற்படவில்லை. ஏற்கனவே அளித்த வாக்குறுதிப்படி, படைகளை வாபஸ் பெற, சீன ராணுவம் மறுப்பதால், சர்ச்சை நீடிக்கிறது.

நம் அண்டை நாடான சீனா, சமீப காலமாக, காஷ்மீரின் லடாக் அருகேயுள்ள எல்லை பகுதியில் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. மே, 5ல், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், அத்துமீறலில் ஈடுபட்ட சீன வீரர்களை, நம் வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.


வீர மரணம்:

அப்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சீன வீரர்கள் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதனால், எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, இரு நாட்டு ராணுவ அதிகாரிகள், வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுக்கு இடையே தொடர்ந்து பேச்சு நடந்தது. இதில், எல்லையில் பதற்றத்தை குறைக்கும் வகையில், சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து, இரு நாட்டு படைகளையும் படிப்படியாக வாபஸ் பெறுவது என, முடிவு செய்யப்பட்டது.


நான்கு கட்டம்:

இதன்படி, லடாக்கின் சில பகுதிகளில் இரு நாட்டு வீரர்களும் வாபஸ் பெறப்பட்டனர். இதற்கிடையே, இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே, அடுத்தடுத்து நான்கு கட்ட பேச்சு நடந்தது. இதில், எந்த சுமுக முடிவும் ஏற்படவில்லை. லடாக்கின் பாங்காங் ஏரி, டெப்சாங் உள்ளிட்ட சில இடங்களில், சீன வீரர்களின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே அளித்த வாக்குறுதிப்படி, சீன ராணுவத்தினர் முழுமையாக வாபஸ் பெறப்படவில்லை.

பாங்காங் ஏரி பகுதியில், சீன வீரர்கள் படகுகளில் ரோந்து பணியில் ஈடுபடுவது, செயற்கைக்கோள் புகைப்படங்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது. நம் நாட்டின் உத்தரகண்ட் மாநிலத்தை நோக்கியும், எல்லை பகுதியில் சீன வீரர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர். சீன வாலாட்டத்தை ஒடுக்க, மத்திய அரசு அதிரடியாக மாற்று வியூகத்தை வகுத்துள்ளது.

இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:நம் நாட்டின் மூலமாக, சீனா பொருளாதார ரீதியாக லாபம் அடைவதை தவிர்க்கும் வகையில், ஏற்கனவே, சீன நிறுவனங்களின், 'டிக்டாக்' உள்ளிட்ட ஏராளமான செயலிகளுக்கு, மத்திய அரசு தடை விதித்தது. இதனால், சீனா கலக்கம் அடைந்தது. அடுத்ததாக, இந்தியாவில் செயல்படும் சீன கல்வி நிறுவனங்களுடனான தொடர்புகளை துண்டிப்பதற்கும் வியூகம் தயாராகி உள்ளது.

சீன கல்வி அமைச்சகத்தின் நிதி உதவியின் கீழ், கன்பியூசியஸ் கல்வி மையங்கள், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகின்றன. சீன மொழியையும், கலாசாரத்தையும் வெளிநாடுகளில் ஊக்குவிப்பதே, இந்த கல்வி மையத்தின் நோக்கம். ஆனால், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில், இந்த கல்வி மையங்கள் வாயிலாக, சீன கம்யூனிசத்துக்கு ஆதரவான பிரசாரங்கள் நடப்பதாக, அந்த நாடுகள் புகார் தெரிவித்துள்ளன.

இந்த விஷயத்தை, மத்திய அரசு தற்போது கையில் எடுத்துள்ளது. நம் நாட்டின் உயர் கல்வித் துறையில் சீன ஆதிக்கம் அதிகரித்து வருவதாக, பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன. சீனாவின் கல்வி நிறுவனங்களுக்கும், நம் நாட்டின், ஐ.ஐ.டி., பனாரஸ் ஹிந்து பல்கலை, ஜே.என்.யு., மற்றும் என்.ஐ.டி., உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களுக்கும் இடையே, 54 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இவற்றை மறு பரிசீலனை செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சீன கல்வி நிறுவனங்களுடனான தொடர்பை முற்றிலும் முறித்து, அந்த நாட்டுக்கு பதிலடி கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் துவங்கியுள்ளன. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


பலன் இல்லை:

இதற்கிடையே, இந்திய - சீன எல்லையில், சீனாவுக்கு சொந்தமான மோல்டோ பகுதியில், இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே, ஐந்தாம் கட்ட பேச்சு நேற்று நடந்தது. நம் தரப்புக்கு, லெப்., ஜெனரல் ஹரீந்தர் சிங்கும், சீனா தரப்பில், தெற்கு ஜின்ஜியாங் பிராந்திய கமாண்டர் லியு லின்னும் பங்கேற்றனர். நீண்ட நேரம் நடந்த இந்த பேச்சில், பெரிய அளவில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

ஆனாலும், 'ஏற்கனவே அளித்த வாக்குறுதிப்படி, பாங்காங் ஏரி உள்ளிட்ட, எல்லையில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளில், சீன ராணுவம் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும். இதற்கான கால வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்' என, நம் தரப்பில் தெளிவாக வலியுறுத்தப்பட்டது. ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான அடுத்த கட்ட பேச்சு, மீண்டும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சீன எல்லை பகுதியில் உள்ள நம் வீரர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், கடும் குளிரை தாங்கும் உடைகள் ஆகியவற்றை அதிக அளவில் இருப்பு வைப்பதற்கான நடவடிக்கையையும், நம் ராணுவம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X