புதுச்சேரியில் வீடு வாடகைக்கு எடுத்து கொள்ளையடித்த சென்னைவாசி சிக்கினார் | Dinamalar

இந்தியா

புதுச்சேரியில் வீடு வாடகைக்கு எடுத்து கொள்ளையடித்த சென்னைவாசி சிக்கினார்

Added : ஆக 03, 2020
Share

புதுச்சேரி : புதுச்சேரியில் வாடகைக்கு வீடு எடுத்து, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சென்னை ஆசாமியை பெரியக்கடை போலீசார் கைது செய்து, ரூ. 22 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி, வெங்கட்டா நகர் ரோஸ் அப்பார்ட்மென்ட் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர் ரகனாபேகம்,60; டில்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். மாதம் ஒருமுறை புதுச்சேரியில் உள்ள வீட்டிற்கு வந்து செல்வார்.கொரோனா ஊரடங்கினால் அவரால் கடந்த 3 மாதமாக புதுச்சேரிக்கு வரமுடியவில்லை. வீடு நீண்ட நாட்களாக பூட்டிக் கிடப்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், கடந்த 21ம் தேதி, வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த 60 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் ரொக்கத்தை திருடிச் சென்றனர்.

இது குறித்து பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., பிரதீக் ஷா கொடரா உத்தரவின்பேரில், கிழக்கு எஸ்.பி., மாறன் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து, விசாரணை நடத்தி வந்தனர்.அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த மார்க்கெட் சுரேஷ்,42, தலைமையிலான கும்பல் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. காலாப்பட்டு பகுதியில் பதுங்கியிருந்த சுரேஷை போலீசார் கைது செய்தனர்.அவரிடமிருந்து 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 40 சவரன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளியை பறிமுதல் செய்தனர்.

கொரோனா பரிசோதனைக்காக சுரேஷை, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.போலீசார் கூறியதாதவது:சென்னை கோடம்பாக்கம் காமராஜர் காலனி, 9வது குறுக்கு தெருவை சேர்ந்த பிரபல கொள்ளையன் மார்க்கெட் சுரேஷ் மீது, தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து கொள்ளையடித்த வழக்குகள் உள்ளன. அண்மையில் சென்னை மீஞ்சூர் கொள்ளை வழக்கில் கைதான சுரேஷ், கடந்த 2 மாதத்திற்கு முன் ஜாமினில் வெளியே வந்தார்.

புதுச்சேரி அடுத்த மாத்துாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த சுரேஷ், பின்னர் காலாப்பட்டு நடுத் தெருவில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கி இருந்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அவரது காதலி கங்கா, கூட்டாளி ஸ்ரீதர் ஆகியோரை தேடி வருகிறோம்.இவ்வாறு போலீசார் கூறினர்.உளவாளிகொள்ளை கும்பலில் ஸ்ரீதர் முக்கிய புள்ளியாக இருந்துள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு, தகவல் சொல்லி வந்துள்ளார்.கொள்ளை நடந்த ரோஸ் அப்பார்ட்மென்ட் குடியிருப்பிற்கும் அடிக்கடி வந்து நோட்டம் பார்த்துள்ளார். அப்போது செக்யூரிட்டிகள் விசாரித்து, விரட்டியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X