சென்னை: 'தமிழகத்தில், இரு மொழி கல்வி கொள்கை, தொடர்ந்து பின்பற்றப்படும்' என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தது, தமிழக மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்மொழி கொள்கையை ஆதரிப்பவர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு, புதிய கல்வி கொள்கையை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து மாநிலங்களிலும், தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன், இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை, மாணவர்கள் படிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், தற்போது வசதி படைத்தவர்களின் குழந்தைகள், தனியார் பள்ளிகளில், மூன்று மொழிகளை கற்கின்றனர். அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மட்டும், மூன்றாவது மொழி கற்க முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், புதிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டதும், தமிழகத்தில் ஏழை மாணவர்களுக்கும், மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற, நம்பிக்கை ஏற்பட்டது. அந்த நம்பிக்கையை, முதல்வரின் அறிவிப்பு தவிடுபொடியாக்கி உள்ளது.முதல்வர் அறிவிப்புக்கு, மக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இரு மொழி கொள்கையை ஆதரிப்போரும், எதிர்ப்போரும், சமூக வலைதளங்களில், தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில:
* ஹரிகரன்: இதுவா கல்விக் கண் திறந்த காமராஜர் கண்ட கனவு. பணம் இருந்தால், பல மொழி கற்கலாம். ஏழையாக இருந்தால், இரு மொழியே கற்க முடியும்* ஆதித்யா: அ.தி.மு.க., -- தி.மு.க., இரண்டும் தமிழர்களை வஞ்சிக்கிறது
* சரவணன்: தமிழகத்தில், இரு மொழி கொள்கை என்பது, அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் தானா? பணம் இருப்பவன், மெட்ரிக்குலேஷன், சி.பி.எஸ்.சி., என்று சேர்ந்து, பல மொழிகளை கற்றுக் கொள்கிறான். தமிழக ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்கு, நீதி வேண்டும்
* புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி மகன் ஷ்யாம்: ஹிந்தி மொழியை கட்டாயமாக்கி, திணிக்கக் கூடாது. விருப்பம் உள்ளவர்கள் படித்துக் கொள்ளட்டும் என்பது தானே உங்க வாதம்; விருப்பம் உள்ள மாணவர்களுக்கு, அரசு பள்ளிகளில், அந்த வாய்ப்பு வழங்குவதில் என்ன பிரச்னை? இல்லையெனில், தனியார் பள்ளிகளில், பணம் கொடுத்து தான் படிக்க வேண்டுமா; தமிழக அரசின் முடிவு தவறானது
* சந்திரசேகரன்: ஏற்கனவே, இரு மொழி கொள்கை என்ற, தவறான கொள்கையால், தமிழர்கள் கும்மிடிப்பூண்டி தாண்டி போக முடியாமல் இருக்கின்றனர். கேட்டால், முட்டாள்தனமாக, 'ஹிந்தி படித்தவனே, பானி பூரிதான் விற்கிறான்' என்கின்றனர், திராவிட பக்தர்கள். ஆனால், அவர்கள் பிள்ளைகளை, ஹிந்தி படிக்க வைத்து, மத்திய மந்திரிகளாக்கி விடுகின்றனர்
* மணிகண்டன்: உங்கள் முடிவு இதுவென்றால், தமிழகத்தில், தனியார் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் தவிர, பிற மொழி பாடத்தை நடத்த தடை விதிக்க வேண்டியது தானே. அதை தாங்கள் செய்ய முடியுமா?
* அருள்: மும்மொழி பாடக் கொள்கை, இன்றைய காலகட்டத்தில், மிகவும் அத்தியாவசியமான தேவை. பணமில்லா ஏழைகளுக்கான விடிவெள்ளி திட்டம்
* பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு செயலர் அஸ்வத்தாமன்: தமிழகத்தில், தெலுங்கு பேசும் மக்கள் பெருமளவு உள்ளனர். அவர்களின் நீண்ட நாளைய கோரிக்கை, அவர்கள் தெலுங்கு படிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே. இப்புதிய கல்விக் கொள்கை, அவர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. அவர்கள் இப்போது, மூன்றாவது மொழியாக, தெலுங்கு படிக்க முடியும். ஆனால், மும்மொழி கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்பவர்கள், தமிழகத்தில் வாழும், தெலுங்கு பேசும் மக்களை வஞ்சிக்கின்றனர். தெலுங்கு பேசும் மக்கள் யோசிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் பதிவிட்டுள்ளனர்.
குழு அமைக்க முடிவு!
புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து, ஆய்வு செய்து, மாநில அரசுக்கு அறிக்கை அளிக்க, குழு அமைக்க முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசு அறிவித்துள்ள, தேசிய கல்வி கொள்கை குறித்த, ஆலோசனை கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. முதல்வர் இ.பி.எஸ்., தலைமை வகித்தார். துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சீனிவாசன், செங்கோட்டையன், வேலுமணி, ஜெயகுமார், அன்பழகன், ராஜலட்சுமி, தலைமை செயலர் சண்முகம், பள்ளிக்கல்வி, உயர் கல்வித்துறை செயலர்கள் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்த பின், 'தமிழகத்தில் மும்மொழி கொள்கை அனுமதிக்கப்படாது. இரு மொழி கொள்கை தொடரும்' என, முதல்வர் அறிவித்தார். தேசிய கல்வி கொள்கையில் உள்ள, மற்ற அம்சங்கள் குறித்து, முதல்வர் எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால், புதிய தேசிய கல்வி கொள்கையை, தமிழக அரசு ஏற்கிறதா, எதிர்க்கிறதா என்ற, குழப்பம் ஏற்பட்டது. ஆனால், தேசிய கல்வி கொள்கை குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, குழு அமைப்பது; அந்த குழு தரும் அறிக்கை அடிப்படையில் முடிவெடுப்பது என்றும், நேற்று நடந்த கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE