தேக்கடி; தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பெரியாறு அணை நீர்பிடிப்பில் பெய்த கன மழையால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3.5 அடி உயர்ந்தது.சில நாட்களாக நீர்பிடிப்பில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து 1032 கன அடியில் இருந்து 4784 கன அடியாக அதிகரித்தது. 115.75 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3.5 அடி உயர்ந்து நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி 119.25 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது.
தமிழகப்பகுதிக்கு நீர்திறப்பு 300 கன அடியில் இருந்து 900 கன அடியாகஅதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 2249மில்லியன் கன அடியாகும். பெரியாறு அணையில் திறக்கப்படும் நீரின் அளவைப் பொறுத்து லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்படும். முதலாவது ஜெனரேட்டரில் 40 மெகாவாட், 3வது ஜெனரேட்டரில்42 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்புபெரியாறு அணையில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 600 கன அடியாக உள்ளது. இதனால் வைகை அணைக்கு வரும் நீரின் அளவும் உயர்ந்துள்ளது. ஆக.2ல் 29.89 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 30.09 அடியாக உயர்ந்தது( மொத்த உயரம் 71 அடி). நீர் வரத்து வினாடிக்கு 199 கன அடியாக இருந்தது. 72 கன அடி குடிநீருக்கு வெளியேறுகிறது.காவிரி நீர்பிடிப்பில் மீண்டும் மழை காவிரி நீர்பிடிப்பில் மீண்டும் தீவிரம் அடைந்த பருவ மழையால் கர்நாடகாவின் கபினி கே.ஆர்.எஸ். அணைகளின் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கிறது.
நேற்று முன்தினம் வினாடிக்கு 3287 கனஅடியாக இருந்த கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். அணை நீர்வரத்து நேற்று 5056 கனஅடியாகவும் வினாடிக்கு 6133 கனஅடியாக இருந்த கபினி நீர்வரத்து 10 ஆயிரத்து 500 கனஅடியாகவும் அதிகரித்தது.நேற்று முன்தினம் வினாடிக்கு 7200 கனஅடியாக இருந்த கபினி கே.ஆர்.எஸ். நீர்திறப்பு நேற்று 8200 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
மேட்டூர் அணையில் பாசனத்துக்கு 3000 கனஅடி நீர் திறக்கும்நிலையில் நேற்று 3532 கனஅடி நீர் வந்தது. திறப்பை விட வரத்து கூடுதலாக இருந்ததால் நீர்மட்டம் 64.10 அடியாக உயர்ந்தது.சிறுவாணியில் 300 மி.மீ., கோவைக்கு மிக முக்கிய நீராதாரமாக விளங்கும் சிறுவாணி அணையில், 300 மி.மீ., மழை பெய்தது; நீர் மட்டம், ஒரே நாளில், 7.49 அடி அதிகரித்து, 24.14 அடியாக உயர்ந்தது. பில்லுார் அணை முழு கொள்ளளவான, 100 அடியில், 97 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து, 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 18 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE