அயோத்தி: இந்தியாவின் மூன்று பிரதமர்கள், அயோத்திக்கு வந்தும் நிலப்பிரச்சனையால் ராமஜென்ம பூமிக்கு வராமல் திரும்பியுள்ளனர். இதில், இந்திரா, ராஜிவ் ஆகியோருடன் பா.ஜ..,வின் வாஜ்பாய் பெயரும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அயோத்தியில் பல ஆண்டுகளாக நீடித்த நிலப்பிரச்சனை முடிவிற்கு வந்ததையடுத்து, அங்கு இன்று ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டுள்ளார். இதற்கு முன் அயோத்தி வந்திருந்தும், 3 பிரதமர்கள் ஸ்ரீராமஜென்ம பூமி பகுதிக்கு வரவில்லை. இதனால், அயோத்தியின் ராமர் கோவிலுக்கு வரும் முதல் பிரதமராக வரலாற்றில் இன்று பிரதமர் மோடி இடம் பெறுகிறார்.
இந்த மூன்று பிரதமர்கள் பட்டியலில் காங்கிரசின் இந்திரா, ராஜீவ் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்த பா.ஜ.க.,வின் அட்டல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். எனவே, தற்போதைய பிரதமர் மோடியின் வருகை முதல்முறை எனக் கருதப்படுகிறது.

கடந்த 1966ல் பிரதமராக இருந்த இந்திரா, அயோத்தியில் சரயு நதியின் பாலத்தை திறந்துவைக்க வந்திருந்தார். பின், 1979ல் அங்குள்ள ஆச்சார்யா நரேந்திர தேவ் பல்கலை விழாவிற்கும் பிரதமராக இந்திரா வந்திருந்தார். எனினும், அங்கிருந்து சில கி.மீ., தொலைவில் இருந்த ராமஜென்ம பூமி வளாகத்திற்கு இந்திரா வரவில்லை.
இவருக்கு பின் பிரதமரான அவரது மகன் ராஜீவ் மூன்று முறை அயோத்தி வந்திருந்தார். தன் தாயை போலவே ராஜீவும் ஸ்ரீராமஜென்ம பூமி வளாகம் செல்லவில்லை.
கடந்த 1984ல் நடைபெற்ற அயோத்தி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராஜிவ் கலந்து கொண்டார்.
அதன்பின், அயோத்தியை ஒட்டியுள்ள பைஸாபாத் நகரில் 1989ம் ஆண்டின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை துவங்கி வைத்தார்.
மூன்றாவது முறையாக ராஜிவ், 1990ல் கரசேவை தீவிரமான போது 'சத்பாவனா யாத்திரை' நடத்த வந்திருந்தார். இந்த மூன்று முறைகளிலும் ராஜிவ் ராமஜென்ம பூமி வளாகத்திற்கு வரவில்லை.

மத்தியில் பா.ஜ.க., தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் பிரதமரான வாஜ்பாய் இரண்டு முறை அயோத்திக்கு வந்திருந்தார். அவரும் ராமஜென்ம பூமிக்கு வரவில்லை. எனவே, நாடு சுதந்திரம் அடைந்த பின் அயோத்தியின் ராமர் கோவிலுக்கு வரும் முதல் பிரதமராக மோடி வரலாறு படைக்கிறார்.
'மூன்று பிரதமர்கள் ராமஜென்ம பூமிக்கு வராததன் பின்னணியில், இந்து மற்றும் முஸ்லிம்கள் இடையே நடைபெற்ற நிலப்பிரச்சனை வழக்கு காரணமாக இருந்துள்ளது. இங்கு செல்வதன் மூலம் அவ்விரு மதத்தினரின் வாக்குகளையும் தேர்தலில் பணயம் வைக்கும் அபாயம் ஏற்படும் என்பதால் அவர்கள் அங்கு செல்லவில்லை' என, அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE