பொது செய்தி

இந்தியா

அயோத்தி கோவிலுக்கு அடிக்கல்: நனவானது 500 ஆண்டு கால கனவு!

Updated : ஆக 06, 2020 | Added : ஆக 06, 2020 | கருத்துகள் (37+ 151)
Share
Advertisement
Ayodhya, Ram Temple, Bhoomi pujan, Bhumi Pujan, Ram Janmabhoomi, Ram Mandir, PM, Modi, Narendra Modi

அயோத்தி: அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் மோடி, வேத கோஷங்கள் முழங்க, 40 கிலோ வெள்ளி அடிக்கல்லை, நேற்று மதியம், 12:45க்கு நாட்டினார். ''இந்தியர்களின், 500 ஆண்டு கால கனவு நனவாகியுள்ளது; ராமர் பிறந்த இடமான அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது,'' என, பிரதமர் மோடி கூறினார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட, கடந்த ஆண்டு நவம்பர், 9ல் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, 15 உறுப்பினர்கள் அடங்கிய, 'ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா' என்ற பெயரில், மத்திய அரசு, கடந்த பிப்ரவரியில், அறக்கட்டளை ஒன்றை அமைத்தது. இது, அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான பணிகளை, கடந்த மார்ச் மாதத்தில் துவங்கியது.


உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர் எஸ் எஸ் தலைவர் பாகவத் உட்பட 14 முக்கிய பிரமுகர்கள் மட்டும் பங்கேற்ற சிறப்பு பூஜையில், சுமார் நூறு முனிவர்கள், மடாதிபதிகள் கலந்து கொண்டனர். வரமாட்டார் என சொல்லப்பட்ட உமா பாரதியும் வந்திருந்தார். நூற்றாண்டுகளுக்கு மேலாக நீடித்த பிரச்னைக்கு தீர்வாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை அடுத்து, ராமர் பிறந்த இட்த்தில் அவருக்கு கோயில் கட்ட வாய்ப்பு கிடைத்தது. கோடிக்கணக்கான இந்துக்கள் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக நடந்த இந்த கோயில் அடிக்கல் நாட்டு விழாவை உலகம் முழுவதிலும் டீவி நேரடி ஒளிபரப்பு வழியாக மக்கள் பார்த்து மகிழ்ந்தனர். அடிக்கல் நாட்டி முடிந்ததும் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் அயோத்தி முழுவதும் எதிரொலித்தது.

latest tamil news



அயோத்தியின் ராம ஜென்மபூமியில், தற்காலிக கோவிலில் இருந்த குழந்தை ராமர் விக்கிரகம், வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. சீதை, பரதன், லட்சுணன், சத்ருக்னன் ஆகியோரின் விக்ரகங்களும், வேறு இடத்துக்கு மாற்றப்பட்டன. இதையடுத்து, அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவை, ஆக., 5ம் தேதி நடத்த, அறக்கட்டளை, கடந்த மாதம் முடிவு செய்தது. இதில் பங்கேற்க, பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து, அடிக்கல் நாட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை, அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வந்தனர். கொரோனா பரவல் காரணமாக, விழாவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான, வி.வி.ஐ.பி.,களை அழைக்க முடிவு செய்யப்பட்டது. நேற்று, அடிக்கல் நாட்டு விழாவை ஒட்டி, அயோத்தி நகரம் விழா கோலம் பூண்டது. பிரதமர் வருகையை முன்னிட்டு, அயோத்தியில் மூன்றடுக்கு பாதுகாப்புகள் போடப்பட்டன.

மேலும், 'அயோத்தி மக்கள் யாரும், விழா நடக்கும் இடத்துக்கு வரவேண்டாம்; வீட்டிலிருந்தே, 'டிவி' வழியாக விழாவை கண்டுகளிக்க வேண்டும்' என, கேட்டுக் கொள்ளப்பட்டனர். பூமி பூஜைக்காக, 2,000 புனித தலங்களிலிருந்து மண்ணும், 100க்கும் மேற்பட்ட புனித ஆறுகளிலிருந்து தண்ணீரும், வரவழைக்கப்பட்டன. அடிக்கல் நாட்டு விழாவை ஒட்டி, பூமி பூஜை சடங்குகள், 3ம் தேதி, கணபதி பூஜையுடன் துவங்கின. வாரணாசியிலிருந்து வேத விற்பன்னர்கள் வரவழைக்கப்பட்டு, பூஜைகள் நடந்தன.


latest tamil news


Advertisement


நேற்றைய அடிக்கல் நாட்டு விழாவுக்கான பூஜைகள், காலை, 8:00 மணிக்கு துவங்கின. விழாவில் பங்கேற்பதற்காக, டில்லியிலிருந்து, காலை, 9:30 மணிக்கு, பிரதமர் மோடி, லக்னோவுக்கு சிறப்பு விமானத்தில் புறப்பட்டார். லக்னோ விமான நிலையத்தில், காலை, 10:40 மணிக்கு வந்திறங்கினார். பின், ஹெலிகாப்டரில், அயோத்திக்கு புறப்பட்டு சென்றார். அங்கே பிரதமரை, உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட சிலர், சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரவேற்றனர்.

பின், பிரதமர் மோடி, அயோத்தியில் உள்ள, மிகப் பழைமை வாய்ந்த ஹனுமன் கோவிலுக்கு சென்றார். அங்கு ஹனுமனுக்கு பூஜை செய்து, தீபாராதனை காட்டி வழிபட்டார். அங்கிருந்து புறப்பட்ட அவர், குழந்தை ராமர் விக்ரகம் வைக்கப்பட்டுள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டார். அங்கு, இரவு நேரத்தில் மலர்ந்து நறுமணம் வீசும், பாரிஜாதம் என்றழைக்கப்படும் பவழமல்லி பூச்செடியை நட்டார்.


latest tamil news


இதைத் தொடர்ந்து, அடிக்கல் நாட்டு விழா நடக்கும் இடத்துக்கு, பிரதமர் வந்தார். அங்கு, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், அறக்கட்டளை தலைவர் நிருத்யா கோபால் தாஸ் மஹராஜ் மற்றும் பூஜை செய்யும் புரோகிதர்கள் காத்திருந்தனர். பிரதமர் உட்பட அனைவரும், முக கவசம் அணிந்திருந்தனர். மற்ற வி.ஐ.பி.,க்கள், சாதுக்கள், பீடாதிபதிகள் என, 100க்கும் அதிகமானோர், சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து, சற்று துாரத்தில், நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர்.

பூஜை நடக்கும் இடத்தில் விழுந்து வணங்கிய மோடி, தரையில் அமர்ந்து, பூஜை செய்ய துவங்கினார். புரோகிதர்கள் கூறிய மந்திரத்தை திரும்பக் கூறி, பூஜை செய்தார். பின், மதியம், 12:45 மணிக்கு, வேத கோஷங்கள் முழங்க, கோவில் கருவறை அமையும் இடத்தில், 40 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட கல்லை வைத்து, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்; 12:46க்கு தீபாராதனை காட்டினார்.

அப்போது அங்கிருந்தவர்கள், 'ஜெய் ஸ்ரீராம்... பாரத் மாதா கி ஜெய்...' என்ற கோஷங்களை எழுப்பி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கடந்த,1989-ம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் ராம பக்தர்கள் அனுப்பிய, 2.75 லட்சம் செங்கற்களில் இருந்து, 'ஸ்ரீராம்' என எழுதப்பட்டிருந்த, 100 கற்கள் தேர்வு செய்யப்பட்டு, பூமி பூஜைக்குப் பயன்படுத்தப்பட்டன. இதன்பின், அடிக்கல் நாட்டு விழாவுக்கான கல்வெட்டை திறந்து வைத்த பிரதமர் மோடி, சிறப்பு தபால் தலையையும் வெளியிட்டார்.

தொடர்ந்து நடந்த கூட்டத்தில், அவர் பேசியதாவது: சரயு நதிக்கரையில், வரலாற்று சிறப்பு மிக்க தருணம் நிறைவேறியுள்ளது. உலகம் முழுதும், ராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன. இந்த தருணம் வரும் என, கோடிக்கணக்கான மக்கள் நம்பவில்லை. பல ஆண்டு காத்திருப்பு, இன்று முடிவுக்கு வந்துள்ளது. அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது. குழந்தை ராமர், பல ஆண்டுகளாக குடிசையில் வைக்கப்பட்டிருந்தார்.


latest tamil news


ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்ற பலரது கனவு, இன்று நிறைவேறியுள்ளது. கோவிலுக்காக, பல தலைமுறையினர் தியாகம் செய்துள்ளனர். பலர், தங்களது உயிரை தியாகம் செய்து, ராமர் கோவிலுக்காக போராடியுள்ளனர். அவர்களுக்கு, 130 கோடி மக்கள் சார்பில், நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு, பிரதமர் பேசினார்.

முன்னதாக, உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், அறக்கட்டளை தலைவர் கோபால் தாஸ் ஆகியோர் பேசினர்.

அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டவர்களில் மோடியும் ஒருவர். அயோத்தி போராட்டத்துக்காக, 1990ல் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரையை ஒருங்கிணைந்து நடத்தியவர், மோடி. 29 ஆண்டுகளுக்கு முன், அவர் அயோத்திக்கு வந்த போது, 'அயோத்திக்கு மீண்டும் எப்போது வருவீர்கள்?' என, அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டனர்.

'கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடக்கும் போது வருவேன்' என, மோடி பதில் அளித்தார். அதன்படியே, கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்காக, பிரதமர் மோடி, 29 ஆண்டுகளுக்குப் பின், அயோத்திக்கு, தங்க நிறத்தினாலான குர்தா, பட்டு வேட்டி அணிந்து வந்தார். மேலும், அயோத்தி ராம ஜென்மபூமிக்கு வந்த, முதல் பிரதமர் என்ற பெயரும் மோடிக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன் பிரதமர்களாக இருந்த, இந்திரா, ராஜிவ், வாஜ்பாய் ஆகியோர் அயோத்திக்கு வந்துள்ளனர். ஆனால், ராமஜென்ம பூமிக்கு அவர்கள் செல்லவில்லை.

அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு, அயோத்தியில் பல்வேறு இடங்களில் பஜனைகளும், ஆராதனைகளும் நடந்தன. மாலையில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றபட்டு, தீபாவளி போல் மக்கள் கொண்டாடினர். நாடு முழுதும், ஹிந்துக்களுடன், பிற மதத்தைச் சேர்ந்த சிலரும் சிறப்பாக கொண்டாடினர். அமெரிக்கா உட்பட, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் சிறப்பாக கொண்டாடினர்.


latest tamil news



களைகட்டிய நகரம்:

அயோத்தியில் உள்ள, அனைத்து கட்டடங்களும், புதிதாக வண்ணம் தீட்டப்பட்டு, புதுப்பொலிவுடன் காட்சி அளித்தன. நகர் முழுதும், சாமந்தி மலர்கள் மற்றும் காவிக் கொடிகளால், அலங்கரிக்கப்பட்டன. ராமர் கோவிலுக்கு செல்லும் சாலைகள் முழுதும், அலங்கார வளைவுகள் மற்றும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டன.

அயோத்தியில் உள்ள அனைத்து வீடுகளிலும், 11 ஆயிரத்திற்கும் அதிகமான விளக்குகள் ஏற்றப்பட்டன. சரயு நதிக்கரை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விளக்குகளால் ஜொலித்தன.வெள்ளி கற்கள்ராமர் கோவில் கட்டுமானத்திற்காக, உலகம் முழுதும் உள்ள பக்தர்கள், 1989ல் அளித்த, ஒன்பது கற்கள், பூமி பூஜையின் போது, அங்கு வைக்கப்பட்டு இருந்தன.

'பக்தர்கள் பலர், வெள்ளியால் ஆன கற்களை, பரிசாக அளித்துள்ளனர். அவை அனைத்தும், நேற்றைய பூஜையில் வைக்கப்பட்டு, பின், கோவில் கட்டுமானத்திற்கு தேவையான நிதி திரட்ட பயன்படுத்தப்படும்' என, கூறப்படுகிறது.


பாரிஜாத செடி:

பிரதமர் நரேந்திர மோடி, பட்டு வேட்டி மற்றும் குர்தா அணிந்திருந்தார். அயோத்தியில், 10ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட, ஹனுமன் கோவிலுக்கு முதலில் சென்று, சிறப்பு வழிபாடு நடத்தினார். பூமி பூஜைக்கு முன்னதாக, மிகப் புனிதமாக கருதப்படும், பாரிஜாத செடியை, பிரதமர் நட்டுவைத்தார்.


வந்தார் உமா பாரதி:

'கொரோனா' அச்சுறுத்தல் காரணமாக, பூமி பூஜையில் பங்கேற்க மாட்டேன் என, மூத்த பா.ஜ., தலைவர், உமா பாரதி, நேற்று முன்தினம் தெரிவித்தார். ஆனால், பூஜையில் நேற்று அவர் பங்கேற்றார். விழா அரங்கில், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து, வாழ்த்து தெரிவித்தார். இருவரும், சற்று நேரம் உரையாடினர். ''அயோத்தி, அனைவரையும் ஒன்றிணைத்துள்ளது. நம் நாடு, எவ்வித பாகுபாடும் இல்லாதது என்பதை, இந்த உலகுக்கே, பெருமையுடன் நாம் தெரிவிக்கலாம்,'' என, உமா பாரதி கூறினார்.


அமெரிக்காவில் கொண்டாட்டம்:

அயோத்தியில், நேற்று நடைபெற்ற, ராமர் கோவில் பூஜை விழாவை, அமெரிக்க வாழ்இந்தியர்கள் அனைவரும், உற்சாகமாக கொண்டாடினர். வாஷிங்டனை சேர்ந்த, விஷ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர்கள், லாரியின் மீது, பிரமாண்ட ராமர் 'கட் அவுட்'களை வைத்து, நகர் முழுதும் ஊர்வலமாக வந்தனர். அப்போது, 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷம் எழுப்பினர்.

நியூயார்க்கின், பிரசித்தி பெற்ற டைம்ஸ் சதுக்கம் பகுதியில், ராமர் மற்றும் அயோத்தி கோவிலின் படங்கள், ராட்சத திரைகளில் வைக்கப்பட்டன. பிற பகுதிகளில், இந்தியர்கள் அனைவரும், வீடுகளில் விளக்கேற்றி வைத்து, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை கொண்டாடினர்.


டில்லி கோவில்களில் சிறப்பு பூஜை:

டில்லியில் உள்ள அனைத்து கோவில்களும், வண்ண விளக்குகள் மற்றும் காவி கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. காலை முதலே, கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. 'கொரோனா' அச்சுறுத்தல் காரணமாக, கோவில்களுக்குள், பக்தர்கள் படிப்படியாக அனுமதிக்கப்பட்டனர்.


நிர்மலாவின் ரங்கோலி:

மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், தன் வீட்டில் உள்ள சிறிய கோவிலின் முன், ராமரின் உருவம் கொண்ட, ரங்கோலி கோலத்தை, நேற்று வரைந்திருந்தார். அதை தன், 'டுவிட்டர்' சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார்.


பக்தி பரவசத்தில் அயோத்தி:


அயோத்தி நகரமே பக்தி பரவசத்தில் மூழ்கியிருந்தது. பலர், சங்குகளை முழங்கினர், மணிகள் அடித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர். எங்கு பார்த்தாலும், 'ஜெய் ஸ்ரீ ராம்' என, ராமரின் பெருமையை குறிப்பிட்டு கோஷங்கள் எழுப்பினர்.மக்கள், விழா நடைபெறும் இடத்துக்கு செல்ல அனுமதிக்கப்படாததால், கடைகளில் இருந்த, 'டிவி'க்களில், நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை பார்த்து ரசித்தனர். இதனால், கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. 'கடந்த, 1980களில், ராமாயணம் தொடர் வெளியானபோது, இதுபோல்தான் மக்கள் கடைகளில் குவிந்தனர். 'மீண்டும் ராமாயண காலத்துக்கு சென்றதுபோல் உள்ளது' என, மக்கள் புளங்காகிதம் அடைந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (37+ 151)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
06-ஆக-202014:57:55 IST Report Abuse
r.sundaram போன வருடம் ஆகஸ்ட் ஐந்தாம் தியதி ஷரத்து முன்னூற்றி எழுபது நீக்கம், இந்த வருடம் ராமர்கோவில் பூமி பூஜை, அடுத்தவருடம் பாகிஸ்தான் வசம் இருக்கும் காஷ்மீர் நம்மிடம் இருக்க வேண்டும்.
Rate this:
Sankar A - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06-ஆக-202016:03:18 IST Report Abuse
Sankar AYes. Let us wish that happen....
Rate this:
Cancel
Nallavan Nallavan இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா இட்ட குண்டம் ஏதடா, சுட்ட மண்கலயத்திலே சுற்று நூல்கள் ஏதடா. முட்டி நின்ற தூணிலே முளைத்தெழுந்து சோதியை பற்றி நின்றது ஏதடா. ஓசை உள்ள கல்லை நீர் உடைத்து இரண்டாய் செய்துமே வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர், பூசைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துறீர். ஈசனுக்கு உகந்த கல் எந்தக்கல்லு சொல்லுமே
Rate this:
Cancel
Nallavan Nallavan இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா இறைவா மக்களுக்கு அகத்தூய்மை என்பது ஏற்படாதா? அதை உருவாக்கத்தான் எத்தனை கோயில்கள்? எத்தனை தெய்வங்கள்? எத்தனை ஞானநூல்கள்? எத்தனை உபதேசங்கள்? எத்தனை இருந்தும் மக்கள் வீண்பொழுதை கழிக்கும் வேலையிலேயே ஈடுபடுகிறார்களே? இவர்களுக்கு நற்சிந்தனையை அளித்து கருணை அருளக்கூடாதா?' என்று வேண்டி நின்றதோடு, அதற்கான பல்லாயிரக்கணக்கான பாடல்களை இயற்றியவர் சிவவாக்கியர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X