திருவனந்தபுரம்: அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதை வரவேற்று காங்கிரஸ் தலைவர்கள் பலர், ஆதரவு கருத்துக்களை கூறியுள்ள நிலையில், 'மதச் சார்பின்மை பற்றி காங்.,க்கு தெளிவான கருத்தில்லை' என, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்படவுள்ள ராமர் கோவிலுக்கான பூமி பூஜை, நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. உலக முழுவதும் உள்ள இந்துக்கள் இந்நிகழ்வை கண்டு களித்தனர். ராமர் கோவில் கட்டப்படுவதை உ.பி., கிழக்கு மாநில காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வரவேற்றிருந்தார். மேலும், 'ராமர் மற்றும் தாய் சீதையின் அருளால், ராமர் கோவிலின் பூமிபூஜை விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சார ரீதியான ஒரு நிகழ்வாக மாறி உள்ளது' என, பிரியங்கா கூறியிருந்தார்.

காங்கிரசின் இந்நிலைப்பாடு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளதாவது:
சி.பி.எம்., ஏற்கனவே தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. நான் அதை மீண்டும் சொல்ல தேவையில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பில் நம் நாடு 19 லட்சத்தை கடந்துள்ளது. இதை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றி தான் நாம் சிந்திக்க வேண்டும். இந்நெருக்கடியால் ஏராளமானோர் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பிரியங்கா காந்தியின் கருத்தில் எனக்கு ஆச்சரியமில்லை. இக்கருத்துக்காக நீங்களும் ஆச்சர்யப்பட தேவையில்லை. எல்லா நேரங்களிலும் காங்கிரசின் நிலைப்பாடு என்னவென்று எங்களுக்குத் தெரியும். ராஜிவ் மற்றும் நரசிம்ம ராவின் நிலைப்பாடு வரலாற்றின் ஒரு பகுதி. காங்கிரசுக்கு மதச்சார்பின்மை பற்றிய தெளிவான கருத்து இருந்திருந்தால், இந்த நிலைமை இந்தியாவுக்கு வந்திருக்காது. மென்மையான இந்துத்துவா கொள்கையை காங்., எப்போதும் கடைபிடித்தது. பாபர் மசூதியை இடிக்க வேண்டும் என, சங்பரிவார் அமைப்புகள் கோரிய போது, யார் கண்மூடி அலட்சியமாக இருந்தார்கள்.
இவ்வாறு அவர் காங்கிரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE