புதுடில்லி: இந்தியாவின் மிகச்சிறந்த பிரதமர் நரேந்திர மோடி என்று 'Karvy Insights Mood of The Nation' என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆய்வு முடிவில் 44 சதவீத இந்தியர்கள் நரேந்திர மோடியை சிறந்த பிரதமர் என்று ஓட்டளித்துள்ளனர். மோடிக்கு அடுத்தபடியாக 14 சதவீத ஓட்டுகளுடன் வாஜ்பாய் இரண்டாம் இடத்தில் உள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா 12 சதவீத ஓட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும், மன்மோகன்சிங் 7 சதவீத ஓட்டுகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளனர். மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு 5 சதவீத ஓட்டுகளுடன் 5ம் இடம் கிடைத்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்பட்ட ஆய்வை விட 10 சதவீத ஓட்டுகள் பிரதமர் மோடிக்கு கூடுதலாக கிடைத்துள்ளது. கடந்த ஆய்வில் பிரதமர் மோடிக்கு 34 சதவீத ஓட்டுகளும், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவுக்கு 16 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன. வாஜ்பாய்க்கு 13 சதவீத ஓட்டுகள் கிடைத்ததால் அவர் மூன்றாம் இடத்திற்கு சென்றார். ஜவஹர்லால் நேருவுக்கு 8 சதவீத ஓட்டுகளும், ராஜீவ் காந்திக்கு 5 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன.
2016 ம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்திரா 23 சதவீத ஓட்டுகளுடன் முதலிடத்தில் இருந்தார். 18 சதவீத ஓட்டுகளுடன் வாஜ்பாய் இரண்டாம் இடத்திலும், 17 சதவீத ஓட்டுகளுடன் பிரதமர் மோடி மூன்றாம் இடத்திலும் இருந்தனர். கடந்த 4 ஆண்டுகளில் மக்கள் மத்தியில் மோடியின் செல்வாக்கு அதிகரித்ததால் அவர் தற்போது கூடுதலான ஓட்டுகள் பெற்று முதலிடத்தில் உள்ளார்.
இந்தியாவின் பிரதமராக மோடியே வருவார் என்று 66 சதவீத மக்கள் ஓட்டளித்துள்ளனர். ராகுல் பிரதமராக வருவார் என்று 8 சதவீதம் பேரும், சோனியா வருவார் என்று 5 சதவீதம் பேரும், அமீத்ஷா பிரதமராக வருவார் என்று 4 சதவீதம் பேரும் ஓட்டளித்துள்ளனர்.

கொரோனா பேரிடர் காலத்தில் இந்திய சுகாதாரத்துறை மீது 77 சதவீதம் பேர் நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 18 சதவீதம் இந்திய சுகாதாரத்துறை மீது நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியை வழிநடத்த ராகுலே சரியானவர் என்று 23 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
டில்லியைச் சேர்ந்த 'Karvy Insights Mood of the Nation' என்ற அமைப்பு சார்பாக கடந்த ஜூலை 15 முதல் ஜூலை 27 வரை ஆய்வு நடந்தது. இந்தியாவின் 19 மாநிலங்களில் உள்ள 97 எம்.பி., தொகுதிகள், 194 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 12,201 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த முடிவு வெளியாகி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE