பெரம்பலுார்; நீரில் மூழ்கி உயிருக்கு போராடிய, இரு வாலிபர்களை மீட்ட மூன்று பெண்களுக்கு, பாராட்டுகள் குவிகின்றன.
பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ளது கொட்டறை நீர்த்தேக்கம். கடந்த, 6ம் தேதி, சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்த, 12 வாலிபர்கள், இந்த நீர்த்தேக்கத்துக்கு குளிக்கச் சென்றனர். நீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் செல்லும் பகுதியில், 7 அடி அளவுக்கு தேங்கியிருந்த தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்த வாலிபர்களில், பவின்குமார், கார்த்திக், ரஞ்சித், பவித்ரன் ஆகிய நான்கு பேர் ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர்.
அவர்களுக்கு, நீச்சல் தெரியாததால், நீந்தி கரைக்கு வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்தனர். அவர்களுடன் வந்த மற்ற வாலிபர்கள், சத்தம் போட்டதை கேட்டு, அப்பகுதியில் துணி துவைத்துக் கொண்டிருந்த, ஆதனுார் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி செந்தமிழ் செல்வி, 38, சுந்தரபாலன் மனைவி முத்தம்மாள், 34, அண்ணாமலை மனைவி ஆனந்தவல்லி, 34, ஆகியோர், சிறிதும் தாமதிக்காமல் தண்ணீரில் குதித்து நீந்தி சென்றனர்.உயிரை பணயம் வைத்த பெண்கள், தாங்கள் அணிந்திருந்த சேலையை அவிழ்த்து, ஒன்றாக சேர்த்து கட்டி, நீரில் தத்தளித்த வாலிபர்களை நோக்கி வீசினர். சேலையை பிடித்து கொண்ட பவின்குமார், கார்த்திக் ஆகியோரை மீட்டு, கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
பின், மூவரும் மீண்டும் தண்ணீரில் நீந்திச் சென்று தேடி பார்த்த போது, கல்லுாரி மாணவர் பவித்ரன், பயிற்சி மருத்துவர் ரஞ்சித் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி விட்டனர். இதனிடையே தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், தண்ணீரில் மூழ்கி இறந்த பவித்ரன், ரஞ்சித் ஆகியோர் உடலை மீட்டனர்.உயிரையும், மானத்தையும் பெரிதாக கருதாமல், தண்ணீரில் தத்தளித்த வாலிபர்களில் இருவரை, உயிருடன் மீட்ட மூன்று பெண்களின் துணிச்சலையும், மனிதாபிமானத்தையும், பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும், பெண்களின் வீரதீர செயல் குறித்த பதிவுகள் வைரலாகி, அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சுதந்திர தின விழாவில், மூன்று பெண்களுக்கும் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்றும், கோரிக்கை எழுந்துள்ளது.வாலிபர்களை காப்பாற்றிய பெண்கள் கூறியதாவது:நீர்த்தேக்கத்தில் இறங்கி குளித்த வாலிபர்களிடம், 'ஆழம் அதிகம் இருக்கும்; படிக்கட்டில் இருந்து குளிக்க வேண்டும்' என, தெரிவித்தோம். அதன்பின், நாங்கள் துணி துவைத்து கொண்டிருந்த போது, மற்ற வாலிபர்கள் சத்தம் போட்டனர்.
நான்கு பேர் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்ததை பார்த்த உடன், எங்களுக்கு நீச்சல் தெரியும் என்பதால், நீரில் குதித்து, நாங்கள் அணிந்திருந்த சேலையை பயன்படுத்தி, இரண்டு பேரை காப்பாற்றி விட்டோம். மீண்டும், நீந்திச் செல்வதற்குள், மற்ற இருவரும் தண்ணீரில் மூழ்கி விட்டதால், அவர்களை காப்பாற்ற முடியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.