'டிவி' விவாதம் என்ற பெயரிலோ அல்லது சமூக ஊடகங்களிலோ நுாதனமான, 'தெருச்சண்டை' நடந்து கொண்டு இருக்கிறது. அந்த சண்டையில் ஈடுபட்டுள்ளோரில், பெரும்பாலானோரின் ஒரே பணி, மத்திய அரசு அல்லது மாநில அரசு, எந்த புதிய, நல்ல திட்டத்தை அறிமுகப்படுத்தினாலும், அதை எதிர்ப்பது தான்.உதாரணமாக, மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள, புதிய கல்வித் திட்டத்தை, மாநில அரசு ஏற்பதா, இல்லை நிராகரிப்பதா என முடிவு எடுப்பதற்குள், இந்த சண்டைக்காரர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊடகங்களில், காரசாரமாக பேசுகின்றனர்.
மூளை சலவை
அந்த புதிய திட்டத்தின் சாராம்சத்தை கூட, முழுமையாக படிக்காமல், நுனிப்புல் மேய்ந்து வந்து, அப்பாவி பொது ஜனங்களை, மூளை சலவை செய்வது தான், அந்த சண்டைக்காரர்களின் வேலை.புதிய கல்வித் திட்டம் என்னவென்றே தெரியாமல், அது பற்றிய தவறான கருத்துகளை பரப்புவது, நிச்சயம் நமக்கான சாபம் தான்.ஆளுங்கட்சியாக இருக்கும் போது, அந்த கட்சியினர் அறிமுகம் செய்த திட்டத்தை, எதிர்கட்சியாக மாறியதும், அவர்களே எதிர்ப்பது தான், நம் நாட்டின் வேடிக்கையான வேதனை.சுதந்திர போராட்ட காலத்திற்கு முன், பெரும்பாலான மக்கள் பயணத்திற்கு நம்பி இருந்தது, தங்கள் கால்களையும் கால்நடைகளையும் தான். அந்த கால கட்டத்தில்,பேருந்துகள், புகைவண்டிகள் போன்ற வசதிகள், நகரங்களில் மட்டுமே இருந்தன.காடுகளாகவும், மேடுகளாகவும் இருந்த இந்த நாட்டை, ரோடுகள் மூலம் இணைந்த பின் தான், 'நாம் இந்தியர்' என்ற பிணைப்பு, நம் மனதில் தோன்றியது. கடந்த, 20ம் நுாற்றாண்டின் இறுதியிலும், இப்போதைய, 21ம் நுாற்றாண்டிலும், எத்தனை மாற்றங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
சாப கேடு
கரி இஞ்சின் இழுத்த ரயில்கள், மின்சாரத்தில் பறக்கின்றன; சாலைகள் அனைத்தும் அகலமாகி விட்டன; பேசுவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசி, அலைபேசியாக மாறிய பிறகு, இணையத்தால் உலகத்தையே நம் உள்ளங்கைக்குள் கொண்டு வந்து விட்டது.ஒவ்வொரு மாற்றத்தின் போதும், அரசு கொண்டு வரும் புதிய திட்டங்களை நடைமுறை படுத்தும் போதும், அதற்கு எதிர்ப்பு பலத்த எதிர்ப்பு வரத் தான் செய்தது.சின்ன வயதில், என் பாட்டியிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது, முதன் முதலில், அவர்கள் ஊருக்கு, 'ரைஸ்மில்' வந்த போது, அந்த ஊர் பெண்கள், 'இந்த ரைஸ் மில், நம்ம பொழைப்பை எல்லாம் கெடுக்க வந்து இருக்கு; அதை வர விடக் கூடாது' என்று பயங்கரமாக எதிர்ப்பு தெரிவித்ததை சொல்லியிருக்கிறார்.
ஏன், கணிப்பொறி அறிமுகமான புதிதில், 'அதை வாங்கக்கூடாது; வாங்கினால் நிறைய பேரின் வேலைவாய்ப்பு பறிபோய் விடும்' என்று கொடி பிடித்தோர் எத்தனை பேர் என்பதை, நாமே அறிவோம்.ஆனால் இன்று, கணிப்பொறி இல்லாமல், நம்மால் எந்த வேலையாவது செய்ய முடிகிறதா... கணிப்பொறி வேண்டாம் என, அன்று போராடியோர் கூட, இன்று அதில் உள்ள இணையத்தின் மூலம் தான், தங்களது புதிய போராட்டத்திற்கான களத்தை தேடிக் கொண்டு இருக்கின்றனர்.நம் நாட்டின், 130 கோடி மக்களின் ஒப்புதலுடன் தான், ஒரு திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால், கடவுளால் கூட நிறைவேற்ற முடியாது..அரசின் எந்த திட்டத்தையும், மேம்போக்கான எதிர்ப்பால், நிறுத்தி விட வேண்டும் என நினைப்பது, அறிவுபூர்வமான செயல் அல்ல. மேலும், எல்லா திட்டங்களையும் அரசியல் என்னும் கண்ணாடி அணிந்து பார்ப்பதும் சாப கேடே.
இப்போது, சுயநல அரசியல் தலைவர்களின், எதிர்ப்பு பட்டியலில், புதிதாக இடம் பிடித்திருப்பது, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை.சாராயம் விற்றோர், சட்ட விரோதமாக சம்பாதித்தோர், அரசியலில் நுழைந்து, அந்தப் பணத்தில், கல்வி தந்தையாக அவதாரம் எடுத்து, துவக்கிய கல்வி நிறுவனங்களால், இன்று கல்வி நிலையங்களும், பொறியியல் கல்லுாரிகளும் பெருகி விட்டன.
எண்ணிக்கை அதிகரிப்பு
பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. ஆனால், எண்ணிக்கை அதிகரிப்பு மட்டுமே போதுமா?கிட்டத்தட்ட, 600 பொறியியல் கல்லுாரிகளும், அவற்றின் மூலம் வெளியே வந்துள்ள பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கையையும் பார்த்தால், கண்டுபிடிப்புகளின் தலைமையகமாக, நம் மாநிலம், என்றோ மாறியிருக்க வேண்டும்.ஆனால், எத்தனை கண்டுபிடிப்புகள் நடந்து இருக்கின்றன?பொறியியல் படித்த ஒரு மாணவனிடம், தொழில் குறித்த புரிதல் இருக்கிறதா என்றால், நிச்சயம் இல்லை. வெறும் ஏட்டு சுரைக்காயாக இருக்கும், நம் கல்வி திட்டத்தில், எலக்ட்ரிகல் படித்த மாணவனுக்கு, வீட்டில் உள்ள மின் கருவிகளில் ஏற்படும், சிறிய பழுதை நீக்கும் அடிப்படை அறிவு கூட இருப்பதில்லை.தன் படிப்பு சார்ந்த தொழில் அறிவு தான் இல்லையென்றால், மொழி பற்றிய தேர்ச்சியாவது இருக்கிறதா என்றால், அதுவும் நிச்சயம் இருப்பதில்லை. திறமை வளர்க்கும் திட்டம்தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ, சுயமாக ஒரு விண்ணப்பம் எழுதச் சொன்னால் கூட, அவர்களில் பெரும்பாலானோருக்கு, நிச்சயம் எழுத தெரியாது.விதிவிலக்காக சிலர் இருக்கலாம்; அங்கொன்றும், இங்கொன்றுமாக, சில கண்டுபிடிப்புகள் இருக்கலாம். ஆனால், இன்று தமிழகத்தில் இருக்கும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கையை, ஒப்பிட்டு பார்க்கும் போது, கண்டுபிடிப்புகளில் எண்ணிக்கை மிக சிறிய அளவே.கொசு அடிக்கும் மட்டை கூட, சீனாவில் இருந்து தான் வர வேண்டியது இருக்கிறது.
இவ்வளவு பொறியில் பட்டதாரிகளை உருவாக்கியதில், நம் மண்ணுக்கும், நம் மக்களுக்கும் என்ன பயன் இருக்கிறது?இப்போதைய கல்வி முறை, நமக்கு என்ன சொல்லிக் கொடுத்து இருக்கிறது என்றால், மனப்பாடம் பண்ணி, 'மார்க்' வாங்கும் உத்தியை மட்டும் தான் கற்றுக் கொடுத்திருக்கிறது.இன்று நடைமுறையில் இருப்பது, ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டபோது, அவர்களுக்கு என, திறமையான, 'கிளார்க்'குகளை தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட, 'மெக்காலே' கல்வித்திட்டம். அதாவது, மனப்பாடம் பண்ணும் திறமையை மட்டும் வளர்க்கும் திட்டம்.அதனால் தான், படித்தவுடன் நாம் எதிர்பார்ப்பது, சம்பளம் தரும் ஒரு வேலையைத் தான். ஏனென்றால், நம்மால் சுயமாக சம்பாதிக்கும் அளவிற்கு, தன்னம்பிக்கையை நம் கல்வி, நமக்கு கற்றுத் தரவில்லை.அதற்கு காரணம், இனம், மொழி என்ற வெறியைத் தவிர, வேறெதுவும் கற்றுக்கொள்ள விடாத நம் அரசியல்வாதிகள் தான்.நான் எந்த துறையிலும் வல்லுனர் கிடையாது; ஒரு சராசரி நபர் தான்; சில சராசரி மனிதருக்கான கேள்விகள் எனக்கும் எழுகிறது.
படிப்பதற்கு எதிர்ப்பு ஏன்?
இன்று எந்த கல்லுாரியை எடுத்துக் கொண்டாலும், விருப்ப மொழியாக, இந்தியாவில் உள்ள எந்த மொழியை எடுத்துக் கொள்ளலாம்.பிரெஞ்சு போன்ற பிறநாட்டு மொழிகளைக் கூட படிக்கலாம். ஆனால், இந்தியாவில் உள்ள ஒரு தொன்மையான, சமஸ்கிருதம் மொழியை, விருப்ப பாடமாக படிப்பதற்கு எதிர்ப்பு ஏன்?விருப்ப மொழி என்பது, விருப்பமிருந்தால் படிக்கலாம்; இல்லாவிட்டால் படிக்க வேண்டியதில்லை என்பது தானே... உங்களுக்கு விருப்பம் இருந்தால், அந்த மொழியை படியுங்கள்; இல்லையேல், வேறு மொழியை படித்துக் கொள்ளுங்கள்; இதை ஏன், நம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க விடாமல் செய்கிறீர்கள்?அதை விட வருத்தம் தரக் கூடியது, ஹிந்தி மறுப்பு. பல மொழிகள் பேசும் மக்களை கொண்ட உலக நாடுகள் அனைத்திற்கும், அவர்களுக்கு என பொது மொழி ஒன்று உண்டு.நம் இந்தியா என்பது, ஒரு தனிப்பட்ட நாடல்ல. பல சமஸ்தானங்கள் இணைந்து உருவான ஒரு உபகண்டம்.
இங்கு ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு மொழி, கலாசாரம் கொண்டவை. இவற்றை எல்லாம் இணைக்க சாலைகள் இருப்பது போல, நம் இந்தியாவை இணைக்க, பொது மொழி வேண்டும்.நம் மாநிலம் தவிர, பக்கத்தில் உள்ள மாநிலங்கள் எல்லாம், இணைப்பு மொழியாக, ஹிந்தியை, பள்ளிக் கூடங்களில் கற்றுக் கொடுக்கின்றனர். ஆனால், இணைப்பு மொழியான ஹிந்தியை, நம் தமிழக அரசு பள்ளிகளில், கற்றுக் கொடுக்கக் கூடாது என்பதில், தமிழக அரசியல்வாதிகள் மும்முரமாக இருக்கின்றனர்.அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ஹிந்தி கற்றால், தமிழ் அழிந்து விடும் என்பது தான்.தமிழில் பேசினால் அபராதம் விதிக்கும் பள்ளிகளால் அழியாத தமிழ், ஹிந்தி கற்பதால் அழிந்து விடும் என்பது, உண்மையிலேயே வேடிக்கையாக இருக்கிறது.
இந்திய அரசின் பல அறிக் கைகள், செயல்கள், திட்டங்கள், பிரதமரின் உரை யாவும் ஹிந்தியிலேயே உள்ளது. அதை, தமிழகத்தின் ஏழை, சாதாரண மனிதன் அறிந்து விடக் கூடாது என்பது தான், அதை எதிர்ப்பவர்களின் நோக்கமாக இருக்க வேண்டும்.ஏனென்றால், ஹிந்தியை எதிர்ப்போர் தங்களது குழந்தைகளுக்கு ஹிந்தியை, மறைமுகமாக கற்றுக் கொடுக்கின்றனர்.சில கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில், தமிழில் பேசினால், அபராதம் விதிக்கின்றனர்; அந்த பள்ளிகளில், ஹிந்தி மொழி கட்டாய பாடமாக உள்ளது.அரசியல்வாதிகளும், அவர்களின் உறவினர்களும், தங்கள் பிள்ளைகளை, மத்திய அரசின், ஹிந்தியை முதன்மை பாடமாக கற்றுக் கொடுக்கும், கேந்திரிய வித்யாலயாக்களில் படிக்க வைத்து, ஹிந்தியை நன்கு படிக்க வைத்து விடுகின்றனர்.இது தவிர, தனியாக பணம் செலுத்தியும், ஹிந்தி படிக்க வைத்து விடுகின்றனர். இதனால், பல மாநிலங்களில், அவர்களால் தொழில் செய்ய முடிகிறது; வருமானம் ஈட்ட முடிகிறது; கோடிகளில் பணத்தை குவிக்க முடிகிறது.
அற்புதமான அம்சங்கள்
ஆனால், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, தமிழ், ஆங்கிலம் தவிர்த்து, பிற மொழிகளை தெரிய விடாமல், போராட்டங்கள் நடத்தி, அவர்களின் எதிர்காலத்தை முடக்குகின்றனர்.ஆனாலும், தமிழகத்தில், ஆண்டுக்கு ஆண்டு, ஹிந்தி படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஹிந்தி பிரசார் சபா மூலம், ஹிந்தி படிக்கும் மாணவர்களில், தமிழகத்திலிருந்து தான் அதிகமானோர் படிக்கின்றனர்.அரசு பள்ளிகளில், தங்கள் வாரிசுகளை படிக்க வைப்போர், பெரும்பாலும் ஏழைகள் மற்றும் நடுத்தரத்திற்கும் கீழானவர்கள் தான். அவர்கள் தான், எதிர்ப்பு அரசியல் செய்வோரின் ஓட்டு வங்கி. அத்தகையோர் தான், தேர்தல்களின் போது, ஓட்டு சேகரிப்போர்.அவர்களுக்கு, உலக ஞானம் தெரியாமல் இருந்தால் தான், கட்சித் தலைவர்கள் கொடுக்கும், நுாறு ரூபாய், குவார்ட்டர் மது பாட்டில், அரை பிளேட் பிரியாணிக்கு, 'போஸ்டர்' ஓட்டுவர்; 'கட் - அவுட்' வைப்பர்; அரசியல் தலைவர்கள் சுற்றுப்பயணத்தின் போது, 'வாழ்க' கோஷம் போடுவர்; தேவைப்பட்டால் தீக்குளிப்பதற்கும் தயாராக இருப்பர்.சமஸ்கிருதம், ஹிந்திக்கு எதிரான அரசியல் தலைவர்களை இனம் காண வேண்டிய கட்டாயத்தில், இப்போது நாம் இருக்கிறோம்.
மேலும், ஒருவர் எதை படிக்க வேண்டும்; எதை படிக்கக் கூடாது என்பதை, படிப்போர் தான் முடிவு செய்ய வேண்டும்; அரசியல்வாதிகள் முடிவு செய்யக் கூடாது. பொதுவெளியில் ஹிந்தியை எதிர்த்து விட்டு, அதை தங்கள் குழந்தைகளுக்கு மறைமுகமாக கற்றுக் கொடுக்கும் அரசியல்வாதிகளை நம்பி, உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பலி கொடுத்து விடாதீர்கள்.உங்கள் குழந்தைகளின் கல்வியை நீங்களே தீர்மானியுங்கள்; புதிய கல்வி கொள்கையை ஆதரியுங்கள்; அவ்வளவு அற்புதமான அம்சங்கள் அதில் உள்ளன!தொடர்புக்கு:98432 69178இ -- மெயில்: vagaiselvi@gmail.com-வாகைச்செல்விசமூக ஆர்வலர்