பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பூசி விவகாரம்: தனி குழுவை அமைத்தது மத்திய அரசு

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
 குழு!

புதுடில்லி :கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் வேகமெடுத்துள்ள நிலையில், தடுப்பூசி விவகாரத்தை கவனிக்க தனி குழுவை, மத்திய அரசு அமைத்துள்ளது. சரியான தடுப்பூசியை இறுதி செய்வது, அதை வாங்குவது, அதற்கான நிதியை ஒதுக்குவது, நம் நாட்டுக்கு கொண்டு வருவது, பாதுகாத்து வைத்திருப்பது,மக்களுக்கு செலுத்துவது வரையிலான அனைத்தையும் இந்தக் குழு கவனிக்கும். 'நிடி ஆயோக்' அமைப்பைச் சேர்ந்த, டாக்டர் வி.கே.பால் தலைமையில், இந்த சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு டிசம்பரில் சீனாவில் துவங்கிய, கொரோனா வைரஸ் பரவல், தற்போது உலகெங்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தடுப்பூசி கிடையாது, மருந்து கிடையாது என்பதால், உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.நேற்று முன்தினம் நிலவரப்படி, உலகெங்கும், 1.93 கோடி பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உள்ளது. அதில், 7.20 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். நம் நாட்டில், 20.83 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டு, அதில், 42 ஆயிரத்து, 566 பேர் உயிரிழந்துள்ளனர்.


200 வகை தடுப்பூசிகள்



தற்போதைய நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சிகள், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட நாடுகளில் நடந்து வருகின்றன. உலகெங்கும், 200 வகையான தடுப்பூசிகள் பரிசோதனை நிலையில் உள்ளன.அதில், இந்தியாவில் நடந்து வரும் ஆராய்ச்சிகள் இரண்டாம் நிலையை எட்டியுள்ளன. மனிதர்களுக்கு பரிசோதனை செய்யும் இரண்டாம் கட்டப் பரிசோதனை நடந்து வருகிறது. 'சைடஸ் கெடிலா ஹெல்த்கேர்' நிறுவனம் மற்றும் 'பாரத் பயோடெக்' ஆகியவை உருவாக்கியுள்ள தடுப்பூசிகள், மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையின் இரண்டாம் கட்டத்தில் உள்ளன. இதைத் தவிர, உலகெங்கும், ஆறு தடுப்பூசிகளுக்கான பரிசோதனைகள், மூன்றாம் கட்டத்தில் அல்லது ஒருங்கிணைந்த இரண்டு மற்றும் மூன்றாம் கட்டப் பரிசோதனையில் உள்ளன.அதில், இரண்டு, சீனாவில் நடந்து வருகின்றன. அமெரிக்காவில் இரண்டு, பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில், தலா, ஒரு தடுப்பூசி இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன.இவை எந்த நேரத்திலும் ஒப்புதல் அளிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும் சூழ்நிலை உள்ளது.இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்போது, அவற்றை பெறுவதில் இருந்து, மக்களுக்கு அளிப்பது வரையிலான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை, மத்திய அரசு ஏற்கனவே துவக்கி விட்டது.


latest tamil news



இது குறித்து, மத்திய அரசின் உயரதிகாரிகள் கூறியதாவது:தடுப்பூசி தொடர்பாக, நிதி ஒதுக்கீடு செய்வது முதல், அது மக்களுக்கு சென்றடைவது வரையிலான அனைத்து விஷயங்களையும் கவனிக்கும் வகையில், சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.நிடி ஆயோக் அமைப்பைச் சேர்ந்த, டாக்டர் வி.கே.பால் தலைமையிலான இந்தக் குழுவில், மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் துணைத் தலைவராக உள்ளார்.கேபினட் செயலரால் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில், எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா, வெளியுறவு, உயிரி தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் போன்ற மத்திய அரசு துறைகளின் பிரதிநிதிகளும் இருப்பர்.மேலும், சுகாதார சேவையின் டைரக்டர் ஜெனரல், இந்திய எய்ட்ஸ் ஆராய்ச்சி மையம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் பிரதிநிதிகளும், இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இதைத் தவிர, மாநிலங்களின் சார்பிலும் பிரதிநிதிகள் சேர்க்கப்பட உள்ளனர்.

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலை தயாரித்துள்ள தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கு, நம் நாட்டைச் சேர்ந்த, 'சீரம்' மையம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதனால், முதல் கட்டத்தில் அதிக அளவில் தடுப்பூசிகள் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


எது மிகச் சிறந்தது



அதேபோல், 'மைக்ரோசாப்ட்' நிறுவனர் பில் கேட்ஸ், அவருடைய மனைவி மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளையின் சார்பில் துவக்கப்பட்டுள்ள, 'காவி' என்ற சர்வதேச தடுப்பூசி கூட்டமைப்பிலும், நம் நாடு இடம்பெற்றுள்ளது. அதனால், நம் நாட்டைச் சேர்ந்த, 20 சதவீத மக்களுக்கு இந்த கூட்டமைப்பின் மூலம் மருந்து கிடைக்கும்.இந்நிலையில், உற்பத்தி செய்யப்பட உள்ள தடுப்பூசிகளில், எது மிகச் சிறந்தது என்பதை, மத்திய அரசு நியமித்துள்ள குழு அடையாளம் காணும்.அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட உள்ளதால், அதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வது போன்ற, நிதி தொடர்பான பிரச்னைகளையும், இந்தக் குழு கவனிக்கும்.மாநில அரசுகள் நேரடியாக கொள்முதல் செய்ய அனுமதிக்கலாமா அல்லது மத்திய அரசே கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு வினியோகிக்கலாமா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அவ்வாறு வாங்கப்படும் மருந்துகளை, குறிப்பிட்ட சீதோஷ்ண நிலையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அதற்கான வசதிகளை ஏற்படுத்துவது, மாநிலங்களுக்கு அனுப்புவதற்கான போக்குவரத்து நிர்வாகம், மக்களுக்கு தடுப்பூசி அளிக்கும் நிர்வாகம் ஆகியவற்றுக்கான வழிமுறைகளையும், இந்தக் குழு நிர்ணயிக்கும்.இதற்கான அடிப்படை திட்டமிடல் ஏற்கனவே துவங்கி விட்டது. தடுப்பூசி தயாரிக்கப்படும் வரை காத்திராமல், அதற்கு முன்பாகவே, சரியான முறையில் திட்டமிட்டு, மத்திய அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது.அதை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறை வகுத்து, செயல்படுத்துவதே, இந்தக் குழுவின் முக்கிய பணியாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohanamurugan - panruti,இந்தியா
09-ஆக-202018:38:59 IST Report Abuse
mohanamurugan வெளிநாடுகளிலிருந்து ஏன் வாங்க வேண்டும் நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசி சுதந்திர தினத்தன்று வெளியிடப்படும் என்ற செய்தி வந்திருந்ததே.
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
09-ஆக-202015:29:51 IST Report Abuse
vnatarajan சென்ட்ரல் கவீரமெண்டு முன்கூட்டியே திட்டமிட்டு நடவடிக்கை எடுத்திருப்பதை நாம் பாராட்டியே ஆகவேண்டும். மருந்தை நடுவண் அரசே கொள்முதல் செய்து மாநிலங்களின் தேவைக்கேற்ப அனுப்பிவைக்கவேண்டும் . அதுவே சிறந்த முறையாகயிருக்கும்
Rate this:
Cancel
Mohan Chintalapalli - Chennai,இந்தியா
09-ஆக-202013:44:07 IST Report Abuse
Mohan Chintalapalli GOOD GOVERNANCE
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X