பொது செய்தி

இந்தியா

புத்தக அறிமுகம்: சீனாவின் கொரோனா அரசியல்

Updated : ஆக 09, 2020 | Added : ஆக 09, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புத்தக அறிமுகம்: சீனாவின் கொரோனா அரசியல்

சென்னை: வாசகர்களே, தமிழில் எத்தனையோ நல்ல புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவை பற்றி பெரும்பாலான வாசகர்களுக்கு தெரிவதில்லை. அதற்காகவே தமிழில் வெளிவரும் சிறந்த புத்தகங்களை தினமலர் இணையதள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த வாரம் கீழ்க்கண்ட புத்தகங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். வாசிக்கும் தாகமுள்ள வாசகர்கள் தேவையான புத்தகங்களை தேர்வு செய்து படிக்கலாம். வாசிக்கும் இன்பத்தை அனுபவிக்கலாம். ஒவ்வொரு ஞாயிறும் தினமலர் இணையதளத்தில் இந்தப் பகுதி வெளிவரும்.


01. சீனாவின் கொரோனா அரசியல்



ஆசிரியர்: கோலாகல ஸ்ரீநிவாஸ்
வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்,
21, 'லட்சுமி' சத்யசாய் நகர்,
மதுரை - 625 003.
டோல்ப்ரீ: 1800 425 7700
பக்கம்: 68 விலை: ரூ.70

மனிதரிடம் இருந்து மனிதருக்கு கொரோனா வைரஸ் பரவாது என, ஜன., 14ம் தேதி சீன அரசு, உலக சுகாதார நிறுவனத்துக்கு அறிக்கை கொடுக்கிறது. அதை மீளாய்வு செய்யாமல் அப்படியே காப்பியடித்து உலகத்துக்கு அறிவிக்கிறது, WHO. இங்கே தான் வைரஸால் மனிதப் பேரழிவு துவங்கியது. இப்படித் தான் சீனா, உலக நாடுகளை ஏமாற்ற ஆரம்பித்தது என்ற, வேரில் இருந்து துவங்குகிறார் ஆசிரியர் கோலாகல ஸ்ரீநிவாஸ்.
வைரஸால், 184 நாடுகள் பாதிக்கப்பட்டது, உயிரி ஆயுதமாக கொரோனா வைரசை தயாரித்தது சீனா தான் என, பத்திரிகைகள் வெளியிட ஆரம்பித்தன.
தொடர்ந்து அமெரிக்கா, ஜெர்மனியில் நஷ்ட ஈடு கேட்டு எழுந்த குரல்கள், வூஹானில் உள்ள, 'லெவல் - 4' ஆய்வகத்துக்கான நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தியது என, சீனாவின் கிரைம் பட்டியலை ஆதாரங்களுடன் ஆசிரியர் வெளியிட்டுள்ளார். 2019, டிச., 8ல் வூஹானில் முதல் நபர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார்.
அதிலிருந்து துவங்கிய ஆய்வுகள், தர்க்கங்கள், கேள்விகள், பிற நாடுகளின் வாதங்கள் என புலன் விசாரணை செய்துள்ளார்.
இந்த புத்தகத்தை படிக்கும் போது, சீனாவின் ஒட்டு மொத்த ஆதிக்க மனப்பான்மையும், உயிரி ஆயுதத்தின் மூலம் உலகை அசைத்து பார்க்க நினைத்த அதிகாரத் திமிரும் புலப்படும். இந்த ஆய்விற்காக, ஆசிரியர் மெனக்கெட்டுள்ளதை பக்கத்திற்கு பக்கம் பார்க்க முடிகிறது.
- எம்.எம்.ஜெ.,


02. முருகா... ஆறு படையின் புராணக்கதை



ஆசிரியர்: பிரபுசங்கர்
வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமி்டெட்,
21, 'லட்சுமி' சத்யசாய் நகர்,
மதுரை - 625 003.
டோல்ப்ரீ: 1800 425 7700
பக்கம்: 116 விலை: ரூ.120


latest tamil news




குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்றாலும், முருகனின் ஆறு படை வீடுகள் தனிச்சிறப்பும், வரலாறும் பெற்றவை. முருகனின் ஆறு படை வீடுகளைப் பற்றிய முழுமையான தொகுப்பை நுாலாசிரியர் பிரபுசங்கர் தொகுத்து வெளியிட்டுள்ளார். வீடு பேறு தரும் ஆறு படை வீடுகளின் வரலாறு, அவற்றின் தொன்மை, சுவாமியின் அலங்கார ரூபம், வீற்றிருக்கும் திருக்கோலம், கோவிலுக்கு செல்லும் வழி, அங்கு நடைபெறும் பூஜை முறைகளின் எண்ணிக்கை, கோவில் நடை திறந்திருக்கும் நேரம் மற்றும் திருவிழாக்கள் என, அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய வழிகாட்டி புத்தகமாக உள்ளது.
கடற்கரையில் அமையப் பெற்றுள்ள ஒரே படை வீடு திருச்செந்துார் தான். இங்கு, முருகனின் பாதத்தில் இருந்து பெறப்படும் பத்ர விபூதி பிரசாதம் பிரசித்தம். திருச்செந்துார் கோவிலில் பிள்ளைத்தமிழ் இன்றளவும் பாடுகின்றனர். பழநி மலைக்கோவிலில் போகர் சித்தர் உருவாக்கிய நவபாஷாண சிலை, அதன் சிறப்புகள் விளக்கப்படுகின்றன.
மலையில்லா தஞ்சையில் சுவாமிமலையாய் வீற்றிருக்கும் முருகன். 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையுடைய திருத்தணிகை மலை முருகன் கோவிலின் அழகு விளக்கப்பட்டுள்ளது.
ஆண்டில் இரு முறை பிரமோற்சவம் நடைபெறும் திருத்தணிகை மலை என்றழைக்கப்படும் திருத்தணி கோவில், மலை மீது அமர்ந்த அழகர்மலை முருகன் கோவில் என, ஆறு படைகளின் சிறப்புகளை விளக்குகிறார். அறிவியலும், ஆன்மிகமும் இரண்டற கலந்து சமைக்கப்பட்டுள்ள இந்த புத்தகத்தை முருக பக்தர்கள் கொண்டாடுவர். கந்தசஷ்டி கவசம் இயற்றிய தேவராயரின் முருகனைப் பற்றிய பிற கவச பாடல்களையும் விவரித்துள்ளார் ஆசிரியர்.
'அறு படை முருகனை ஆராதனை செய்தால்
அருகினில் ஓடி வருவான்...
அன்பு பெருகி அருள்புரிவான்...'
என்ற பாடலுக்கேற்ப, முருகனை நினைந்து உருகுபவர்களுக்கு முருகா... என்ற இந்த புத்தகம், கவசமாக விளங்கும்.
- எம்.எம்.ஜெ.


03. அருள்மழை தாராயோ



ஆசிரியர்: வரலொட்டி ரெங்கசாமி
வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமி்டெட்,
21, 'லட்சுமி' சத்யசாய் நகர்,
மதுரை - 625 003.
டோல்ப்ரீ: 1800 425 7700
பக்கம்: 216 விலை: ரூ.220


latest tamil news


Advertisement



இந்த எண்ணம் நமக்கும் அடிக்கடி வரும். கோவிலுக்குள் செல்லும் போது சிலர் சிறப்பு தரிசனம் செல்ல, பலர் விழிபிதுங்கி கூட்ட நெரிசலில் சிக்கி வரிசை நகராதா என ஏங்கிக் கொண்டே செல்வர்.
ஆசிரியர் வரலொட்டி ரெங்கசாமிக்கும் இந்த சிந்தனை வந்தது.
தாயே… மீனாட்சி… ஒரு நாளாவது நீயா சிறப்பு தரிசனத்துக்கு வழி பண்ண மாட்டியா என, உள்ளுக்குள் கோபமும் சலுகையுமாய் கேட்க, மகனின் அசைவுக்கு இசையும் தாயாய், அர்ச்சகர் வடிவில் வந்து தரிசனத்துக்கு அழைத்துச் செல்கிறாள் தாய்.
எழுத்தாளராய், அறிவாளியாய், எஜமானனாய், இடத்துக்கு இடம் மனிதருக்கு மனிதர் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அன்னையின் முன், பிள்ளை தான். பித்தனாய், பிதற்றலாய், கதறி அழத் தான் முடியும். ஒருவாய் சோறுாட்டும் போது, கைவழி அமுதம் சுரந்து பிள்ளையின் வயிறை நிறைப்பது போல, ஆசிரியரின் வாழ்வில் அன்றாடம் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் அன்னையின் ஒவ்வொரு அசைவாய், ஆசிரியரை புரட்டி போடுகிறது.
இது தாய்க்கும், பிள்ளைக்குமான பந்தம். இந்த பந்தத்தை வெறும் வார்த்தைகளால் மதிப்புரை தர முடியாது; உள்ளார்ந்து அனுபவிக்க வேண்டும். அதற்கு புத்தக வரிகளின் வழியே ஆசிரியரை புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு வித்தியாசமான அனுபவம்.
- எம்.எம்.ஜெ.,


04. சித்த மருத்துவ போட்டித் தேர்வு வினா - விடை தொகுப்பு நுால்



ஆசிரியர்: டாக்டர் ஒய்.ஆர்.மானக்சா
வெளியீடு: செண்பகா பதிப்பகம்
32பி, கிருஷ்ணா தெரு, தி.நகர்,
சென்னை - 17.
தொலைபேசி: 044 - 2433 1510
பக்கம்: 1,560 விலை: ரூ.1,500


latest tamil news




மருத்துவத் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கு உதவும் வகையில், தயாரிக்கப்பட்டுள்ள பயிற்சி நுால். கேள்வி - பதில் தொகுப்பாக உள்ளது.
மத்திய, மாநில அரசு பணிகளில் சேர தேர்வு எழுதுவோருக்கும் உதவும். சுலபமாக பயன்படுத்த வசதியாக மூன்று புத்தகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்ந்த மருத்துவக் குழு தயாரித்துள்ளது.
சித்த மருத்துவம் தொடர்பான துல்லிய விபரங்கள், கேள்வி - பதில் வடிவில் உள்ளது. தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் எளிமையாக தொகுக்கப்பட்டுள்ளது.
சித்த மருத்துவத்தில் எம்.டி., படிப்புக்கான நுழைவுத் தேர்வு, உதவி மருத்துவ அலுவலர் பணிக்கான தேர்வு, சித்த மருத்துவ ஆராய்ச்சியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு, மத்திய, மாநில அரசு மருத்துவப் பணியில் சேர நுழைவுத் தேர்வு எழுதும் சித்த மருத்துவர்களுக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
சித்த மருத்துவ உலகில் முதன்முறையாக இந்த வினா - விடை பயிற்சி நுால் உருவாக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு தயாராவோர், உரிய பாடப் புத்தகங்களுடன், இந்த பயிற்சி நுாலையும் பயன்படுத்தினால், வெற்றி இலக்கை சுலபமாக அடையலாம்.


05. நுரையீரலை வலுப்படுத்தும் யோகா



ஆசிரியர்: பி.கிருஷ்ணன் பாலாஜி
வெளியீடு: ஸ்ரீபதஞ்சலி மஹரிஷி யோகாலயம் டிரஸ்ட்
37, காமாட்சியம்மன் நகர் அனெக்ஸ்,
மாங்காடு, சென்னை - 122.
அலைபேசி: 63699 40440
பக்கம்: 48 விலை: ரூ.100


latest tamil news




நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கும் எளிய யோக முறையை விளக்கும் நுால். கொரோனா போன்ற வைரஸ் நோய்களை தடுக்கும் வழிமுறை என அறிமுகமாகி உள்ளது.
வண்ணப் படங்களுடன், யோகா, முத்திரை, தியானம், உணவு முறை என பல விளக்கங்கள் உள்ளன.
பயம் களைந்து, வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவும் வகையில் பயிற்சி முறை பற்றி விளக்கம் தரப்பட்டு உள்ளது.


06. காலவெளிக் கதைஞர்கள்



தொகுப்பாசிரியர்: சுப்பிரமணி இரமேஷ்
வெளியீடு: சாகித்ய அகாடமி
443, அண்ணா சாலை
தேனாம்பேட்டை, சென்னை - 18.
தொலைபேசி: 044 - 2431 1741
பக்கம்: 356 விலை: ரூ.300


latest tamil news




பிரபல எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், மவுனி, க.நா.சுப்ரமண்யம், லா.ச.ரா., சி.சு. செல்லப்பா, எம்.வி.வெங்கட்ராம், கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, ஆர்.சூடாமணி, அசோகமித்திரன், ஆதவன், ஜெயந்தன், கந்தர்வன், கோபிகிருஷ்ணன் ஆகியோரின் கதைகள் பற்றிய பார்வையை வெளிப்படுத்தும், 20 கட்டுரைகள் கொண்ட தொகுப்பு நுால்.
பல கால கட்டங்களில், நுால், இதழ்களில் வெளியானவை. தமிழ்ச் சிறுகதை வரலாற்றை வெளிப்படுத்தும் மதிப்பீடாக அமைந்துள்ளது நுாலின் முன்னுரை. 21ம் நுாற்றாண்டு வாசகர்கள், முந்தைய படைப்பாளர்களையும், படைப்பின் போக்கையும் தெரிந்து கொள்ள உதவும்.
- முகிலை ராசபாண்டியன்

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
09-ஆக-202014:59:38 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு கொரோனா கிருமியால் புத்தக வெளியீட்டாளர்களுக்கும் நல்ல வியாபார வாய்ப்பு
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
09-ஆக-202012:11:04 IST Report Abuse
sundarsvpr திருக்கோயில்களுக்கு செல்தல் நூலகம் சென்று படித்தல் விளையாட்டு திடலுக்கு காலாற நடந்து பொய் விளையாடுதல் மாணவ சமுதாயத்தில் குறைத்துவிட்டது. அறவே இல்லை என்று கூறலாம். இவைகளை வீட்டில் செய்யலாம் என்பதை தவிர்த்து வெளிடம் சென்று செய்திடல் மன அழுத்தம் குறையும் மற்றும் மன நிறைவு கூடும் செல்வந்தர்கள் நல்ல புத்தகங்கள் படிக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு வழங்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X