கருப்பர் கூட்டம் என்ற அமைப்பினர், தமிழ் கடவுள் முருகனை வேண்டி பாடும், கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய, 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவியது.இதற்கு, தமிழக மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பா.ஜ., மற்றும் பல ஹிந்து அமைப்புகள் சார்பில், போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து, வீடியோ வெளியிட்ட, கருப்பர் கூட்டத்தை சேர்ந்தவர்களை கைது செய்தனர்.

தமிழகத்தில் உள்ள, கோடிக்கணக்கான ஆன்மிக பக்தர்கள், முருக பக்தர்கள், காவடி குழுக்கள், பாத யாத்திரை குழுக்கள் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று, நேற்று மாலை, 6:01 மணிக்கு, பக்தர்கள் அனைவரும், வீடுகள் தோறும் வேல் அல்லது முருகர் படத்தை வைத்து, பூஜை செய்ய வேண்டும் என, தமிழக பா.ஜ., வேண்டுகோள் விடுத்தது.

'கோடிக்கணக்கான பக்தர்களின் ஒற்றுமை உணர்வை, உலகிற்கு காட்டுவோம்' என்றும், வேண்டுகோள் விடுக்கப்பட்டது.அதன்படி, தமிழக பா.ஜ., நிர்வாகிகள், தங்கள் வீடுகளில், நேற்று மாலை வேல் பூஜை நடத்தினர். அதேபோல், முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்களும், வீடுகளில் விளக்கேற்றி, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து, வேல் பூஜை நடத்தினர். பல பகுதிகளில், பா.ஜ., நிர்வாகிகள், பொதுமக்கள் ஒன்றாக கூடி, வீடுகளின் முன் வேல் பூஜை நடத்தினர்.
திருநெல்வேலி, செண்பகம்பிள்ளை தெருவில் வேல் பூஜை நடத்தப்பட்டது. நேற்று மாலையில் மழை பெய்தது. இருப்பினும் வீடுகள் தோறும் குடைகளை பிடித்த படி பூஜை மேற்கொண்டனர். கந்தசஷ்டி கவச பாடல்கள் ஒலிக்க, மக்களும் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
சமூக வலைதளங்களில் டிரெண்டிங்
வேல் பூஜை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து, ஏராளமானோர், வேலுடன் புகைப்படம் எடுத்தும், பூஜை செய்தும் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனால், டுவிட்டரில் #vel_pooja என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE