அயோத்தியில், ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா, பிரதமர் மோடி தலைமையில் நடந்து முடிந்தது. பல கோடி மக்கள் இந்த விழாவை, 'டிவி'யில் பார்த்து பரவசமாயினர்.
இந்த நிகழ்ச்சிக்கு எந்த ஒரு குறையோ, பிரச்னை யோ வரக் கூடாது என்பதற்காக, பல வேலைகள் நடந்துள்ளன. இது வெளியே யாருக்கும் தெரியாது.இந்த விவகாரத்தில் இரவு - பகலாக செயல்பட்டது, பிரதமர் அலுவலகம். என்னென்ன, எப்படி நடக்க வேண்டும் என்பதை, பிரதமர் தீர்மானித்தார். அதை செயல்படுத்தியது, பிரதமர் அலுவலகம். உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் கலந்து ஆலோசித்து, ராமர் கோவில் டிரஸ்ட் அங்கத்தினர்களுக்கு மட்டும் விழா தொடர்பான விபரங்களை தெரிவித்துள்ளனர். யார் யாரை விழாவிற்கு அழைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.மத தலைவர்கள், சாதுக்கள் ஆகியோரோடு, அயோத்தியில் உள்ள சன்னியாசிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
'அரசுக்கு எதிராக பேசிய சாதுக்களையும் விழாவிற்கு அழையுங்கள்; விழாவுக்கு பின், யாரும் என்னை அழைக்கவில்லை என பேச்சு வரக் கூடாது' என பிரதமர் கூறியதால், அவர்களும் அழைக்கப்பட்டனர். உத்தர பிரதேச அதிகாரிகளையும் ஒருங்கிணைந்து செயல்படுத்துவதற்கு, பிரதமரின் முன்னாள் தலைமை செயலர் நிருபேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டார். அயோத்தியின் கலெக்டர் அனுஜ் குமார் ஜாவிடம், 'விழாவில் எந்த பிரச்னையும் வரக் கூடாது; அது உங்கள் பொறுப்பு' என, அவருக்கு உத்தரவிடப்பட்டது.முக்கியமாக, 'கொரோனா தொடர்பான பாதுகாப்பு அனைத்தும் மேற்கொள்ள வேண்டும்; இதில் எந்த பிரச்னையும் வரக் கூடாது' எனவும் கலெக்டருக்கு சொல்லப்பட்டது. விழா முடியும் வரை, படு டென்ஷனில் இருந்தவர் அயோத்தி கலெக்டர் தான்.
காங்கிரசின் ஆதங்கம்
ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா, பா.ஜ.,வினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 'கோவில் கட்டுவோம்' என, ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் சொல்லி வந்த பா.ஜ., ஒரு வழியாக அதை நிறைவேற்றிவிட்டது.
உத்தர பிரதேசத்தில், 2022ம் ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில், 'பா.ஜ.,வை மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்போவது, இந்த ராமர் கோவில் தான்' என்கின்றனர், பா.ஜ., தலைவர்கள். இதில் அதிகம் பாதிக்கப்பட்டது, காங்கிரஸ் தான். பிரச்னையால் பல ஆண்டு களாக பூட்டப்பட்டிருந்த அயோத்தி கோவிலை, 1986ல் திறந்தது, ராஜிவ் தலைமையிலான அப்போதைய மத்திய அரசு. இப்படி கோவிலுக்காக முதலில் பிள்ளையார் சுழி போட்டது, காங்கிரஸ். ஆனால், 'அதை பெருமையாக சொல்ல முடியவில்லையே; அடக்கி வாசிக்க வேண்டியதாக இருக்கிறதே' என, காங்., தலைவர்கள் நொந்து போயுள்ளனர்.
அப்படி பெருமையடித்தால், சிறுபான்மையினர் ஓட்டுகள் காங்கிரசுக்கு கிடைக்காது என்கிற பயம் தான் இதற்கு காரணம். 'இப்போது சிறுபான்மையினரும் கூட, காங்கிரசுக்கு ஒட்டு மொத்தமாக ஓட்டளிப்பதில்லை; எனவே, ராமர் கோவில்விவகாரத்தில் சற்று வெளிப்படையாகவே பேசியிருக்கலாம். இப்படிப்பட்ட விஷயங்களால் தான், பெரும்பான்மையினர் ஓட்டும் எங்களுக்கு கிடைப்பதில்லை. இரண்டும் கெட்டான் நிலையில் தவிக்கிறோம்' என ஆதங்கப்படுகின்றனர், காங்கிரசார்.இந்தியாவே ராமரை பாராட்டிக் கொண்டிருக்கும் போது, அமைதியாக இருந்தால் சரியில்லை என்பதால் , ராகுல், பிரியங்கா மற்றும் காங்., சீனியர் தலைவர்கள், கோவிலை பற்றி பேசாமல் ராமரை புகழ்ந்தனர். ராமர் கோவில் விவகாரத்தில், வாக்காளர்களை தன் பக்கம், பா.ஜ., இழுத்துக் கொண்டதால், என்ன செய்வது என தெரியாமல், எதிர்க்கட்சிகள் திண்டாடிக் கொண்டிருக்கின்றன.
தமிழருக்கு மரியாதை
ரபேல் போர் விமானங்களை வாங்க, இந்திய அரசுக்கு பெரிதும் உதவியவர், முன்னாள் விமானப் படைத் தலைவர், ஏர் மார்ஷல் கிருஷ்ணசாமி. தமிழகத்தைச் சேர்ந்த இவர், விமானப் படையில் பணியாற்றிய போது, பிரான்சில் ரபேல் விமானத்தை ஓட்டியிருக்கிறார். 'இது இந்தியாவிற்கு மிகவும் அவசியமான போர் விமானம்; இந்த விமானங்கள், இந்திய விமானப் படைக்கு வர வேண்டும்' என, ஆசைப்பட்டவர், அவர்.ரபேல் விமானங்களை வாங்க, இந்தியா முயற்சி எடுத்த போது, முழு மூச்சாக ஆதரவு அளித்தவர் கிருஷ்ணசாமி. இந்த விவகாரத்தில், மோடியை கடுமையாக விமர்சித்து, 2019 லோக்சபா தேர்தலில் பிரசாரமாகவே மாற்றினார், ராகுல். அப்போதும், 'ரபேல் விமானங்கள் இந்திய விமானப் படைக்கு தேவை' என உறுதியாக சொன்னவர், கிருஷ்ணசாமி.இந்தியா வந்துள்ள, ஐந்து ரபேல் விமானங்கள், விரைவில் விமானப் படையில் சேர்க்கப்பட உள்ளன. இதை ஒரு விழாவாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளார், மோடி. இந்த விழாவில், ரபேல் விமானங்களை வாங்க முழு ஆதரவு அளித்த, ஏர் மார்ஷல் கிருஷ்ணசாமியை அழைத்து மரியாதை செய்யவும், பிரதமர் திட்டமிட்டுள்ளார். இதற்காக, 'நீங்கள் அவசியம் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும்' என, கிருஷ்ணசாமியை போனில் கேட்டுக் கொண்டாராம் மோடி. இம்மாத இறுதியில், இந்த விழா,ஹரியானாவின் அம்பாலா நகரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீதியில் அமைச்சர்கள்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனக்கு கொரோனா தொற்று உறுதியானதும், மருத்துவமனையில் சேர்ந்து விட்டார். இதற்கு முன்னதாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டதால், பல அமைச்சர்கள் பீதிக்குள்ளாயினர். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அமைச்சர்களும் பரிசோதனை செய்து கொண்டனர். பலருக்கு, தொற்று இல்லை என்பதற்கான, 'நெகடிவ்' என, முடிவுகள் வந்தது. ஆனால் அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, தொற்று உறுதியானது.அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கும், நெகடிவ் ரிசல்ட் வந்தது. ஆனால், அவர் வீட்டிற்கு சில கட்சி தலைவர்கள் வந்திருந்தனர். அவர்களில் ஒருவருக்கு தொற்று இருந்தது உறுதியானதால், மீண்டும் பரிசோதனை செய்து கொண்டார் நிர்மலா. அதிலும் நெகடிவ் என தெரிய வர, நிம்மதிப் பெருமூச்சு விட்டாராம், அமைச்சர்.பல அமைச்சர்கள் கொரோனா பயத்தால் வீட்டை விட்டு வெளியே வருவதேயில்லை. வீட்டிலிருந்தே அனைத்து வேலைகளையும், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாகவே செய்து வருகின்றனர்.பிரதமரை பொறுத்த வரை, அவருக்கென, தனியாக டாக்டர்கள் குழுவே இயங்கி வருகிறது. தினமும் பிரதமருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. ரத்த அழுத்தம் உள்ளிட்ட அனைத்து விபரங் களையும், தினமும் பரிசோதித்து வருகிறது, டாக்டர்கள் குழு.பிரதமரின் பாதுகாப்பை கவனிப்பது, எஸ்.பி.ஜி., என்கிற சிறப்பு பாதுகாப்புக் குழு கமாண்டோ வீரர்கள். எந்தவித தாக்குதலில் இருந்தும் பிரதமரை பாதுகாப்பது இந்த குழுவின், பொறுப்பு. பிரதமரின் பொதுக் கூட்டங்களில், சபாரி உடையில், இவர்கள் நின்று கொண்டிருப்பதை பார்க்கலாம்.இப்போது கொரோனாவிலிருந்து பிரதமரை பாதுகாப்பதும், இந்த அதிரடிப் படையின் வேலையாகிவிட்டது. யாரையும், பிரதமரை நெருங்கவிடுவதில்லை, இந்த குழுவினர்.