சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

ஒரு பார்ப்பானின் பறைக்கொட்டு!

Updated : ஆக 11, 2020 | Added : ஆக 10, 2020 | கருத்துகள் (108) | |
Advertisement
'பிராமணர்கள், முருகன் என்ற பெயரை ஏன் வைத்துக் கொள்வதில்லை' என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சுமத்தும் குற்றச்சாட்டு சரியன்று. அது, அறியாமையாலும், ஆணவத்தாலும் சுமத்தப்படுகிறது.பார்ப்பான், அந்தணன், மறையவன், பிராமணன், வேதியன் எனும் சொற்கள், ஒரு குலத்தாரைச் சுட்டும் பரியாய நாமங்களே. பெரிய புராணம் என சொல்லப்படும் திருத்தொண்டர் புராணத்தில்
பார்ப்பான், பறைக்கொட்டு!

'பிராமணர்கள், முருகன் என்ற பெயரை ஏன் வைத்துக் கொள்வதில்லை' என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சுமத்தும் குற்றச்சாட்டு சரியன்று. அது, அறியாமையாலும், ஆணவத்தாலும் சுமத்தப்படுகிறது.

பார்ப்பான், அந்தணன், மறையவன், பிராமணன், வேதியன் எனும் சொற்கள், ஒரு குலத்தாரைச் சுட்டும் பரியாய நாமங்களே. பெரிய புராணம் என சொல்லப்படும் திருத்தொண்டர் புராணத்தில் காணப்படும், 63 தனியடியார்களில், 13 பேர் பிராமணர்கள்; அவர்களில் ஒருவர் பெயர், முருகர்.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் நன்னிலம் என்ற ஊரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழித்தடத்தில் உள்ளது திருப்புகலுார். அந்தப் புகலுாரில், முருகர் வசித்து வந்தார். அப்பரடிகள், திருஞானசம்பந்தர், சிறுத்தொண்டர், திருநீலகண்டர் எனும் நால்வரும், இந்த முருகர் இடத்தில் ஒரு சேரத் தங்கியிருந்தனர். அப்பரடிகள் முக்தி அடைந்த பதி, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு செங்கல், பொற்கட்டிகளான பதி இந்த
திருப்புகலுாரே.

முருகன் என பெயர் கொண்ட இந்தப் பிராமணர், நால்வகை மலர்களால் பல விதமான மாலைகளை கட்டி, மகேசுவரனுக்கு சாத்துவதும், திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தை ஓதுவதாகவும் இருந்தார்.


இது ஒன்று போதும்திருப்புகலுார் முருகர் பற்றி சொல்லும் நம்பியாண்டார் நம்பி, ஐயர். திருமுருகாற்றுப்படை அருளிய நக்கீரர், பார்ப்பனர். அதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், பிராமணர். பழைய வரலாற்றிற்கு, இது ஒன்று போதும்.பித்துக்குளி முருகதாஸ் என்று, தம் பெயரையே முருகனுக்கு அடிமை என்றும், முருகனிடம் தாம் பித்துக் கொண்டவர் என்றும் ஆக்கிக் கொண்டு, நம் கண்முன் உலாவிய பாடகர், ஒரு பிராமணரே.

தற்காலத்தில் அவரை அறியாதவர் உண்டா; இல்லையே. 'கந்தசாமியே என் சொந்த சாமியே' என, அவர் தம், ஹார்மோனிய பெட்டியை இசைத்துக் கொண்டே பாடும் போது, கந்தன் நம் காது வழியே புகுந்து, கருத்தில் படிந்து நிற்பானே! பிராமணர்களில், முருகனை குல தெய்வமாக கொண்டவர்கள் உண்டு. பங்குனி உத்திர நாளில் பழநிக்கும், குன்றக்குடிக்கும் காவடி எடுப்போரை நானறிவேன்.

ஆனால், அவர்கள் அலகு குத்தி செல்வதில்லை. அலகு குத்திக் கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு உடல் வலிமை கிடையாது என்பதே உண்மை. குன்றத்துக் குறவர்கள் அவர்கள் வழியில் முருகனை வழிபடுகின்றனர். சுவாமிமலை முருகனையும், பிராமணர்கள் அவர்கள் வழியில் வணங்குகின்றனர்.இரு வேறு வகைப்பட்டவர்களுக்கும், முருகன் அருள் ஒன்றாகவே இருக்கிறது.

'பிராமணர்கள் ஏன் ஆட்டுக்கிடா அறுக்கவில்லை' என, அறிவுடையவர்கள் கேட்பரா; கேட்க மாட்டார்கள்.ஆனால், வயிற்றுப் பிழைப்பிற்காக நாத்திகம் பேசுபவர்கள் கேட்பர்.ஏனெனில், இவர்கள் பகுத்தறிவு தனிப்பட்டது. ஒன்றிலிருந்து ஒன்றை பிரித்துக் காட்டுவதற்கு பெயர் பகுத்தறிவு. இந்தப் பொது நியதி, இவர்களுக்கு பொருந்தாது.'கள்ளத் தராசோடு வந்து, திருட்டு வியாபாரிகளை போல், முதலீடு இல்லாமல் லாபம் தேடியவர்கள் தங்களைத் தாங்களே சூட்டிக் கொண்ட பெயரே, பகுத்தறிவாளர்கள் என்பதாகும்' என்கிறார், கண்ணதாசன்.

இந்த பகுத்தறிவு பகலவர்களை, உன் பக்கத்தில் வந்து சேராமல் பார்த்துக் கொள் என, 3,000 ஆண்டுகளுக்கு முன், உறையூர் முதுகண்ணன் சாத்தனார் எனும் புலவர், சோழன் நலங்கிள்ளிக்கு அறிவுரை சொல்கிறார். ஏனெனில், இவர்கள், 'நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லை என்போர்; ஆதலால் சேர்த்துக்கொள்ளாதே' என்கிறார்.

இந்த குண போக்குள்ளோரை, மனிதன் என்று கருதாமல், பேய் என கருத வேண்டும் என்கிறார், திருவள்ளுவர்.உயர்ந்தோர் பலரும் உண்டு என்பதோர் பொருளை, தன் அற்ப அறிவால் இல்லை என்று சொல்லுவானை,மனிதன் என எண்ணாமல், பேய் என கருத வேண்டும் என்பது, இந்த குறளுக்கான பொருள்.

பேயை காண முடியாது; ஆனால், அதன் செயலை அறிய முடியும். அற்ப புத்தியுடையவனை காணவும் முடியும்; அவன் பிதற்றுதலை கேட்கவும் முடியும். பேய், தன் உடம்பை மறைத்து, இவன் உடம்பில் செயலாற்றுவதால், கடவுளும், மறுபிறப்பும் இல்லை என்று சொல்பவனை, பேய் நிலை கொண்டவன் என்கிறார் வள்ளுவர். திருவள்ளுவர் போட்டிருக்கும் இந்த சூட்டை விடவா, நாம் சூடு வைக்க முடியும்; முடியாது. ஆனால், இவர்களுக்கு சூடும் கிடையாது; சொரணையும் கிடையாது என்பதே எதார்த்தம்.

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில், 'சமயக்கணக்கர் தம்திறம் கேட்ட காதை' என்ற ஒரு பகுதி உண்டு.சேர நாட்டு, வஞ்சி நகரத்தில், மணிமேகலை இருக்கும் போது, பல்வேறு சமயங்களை சேர்ந்தோரைக் கூப்பிட்டு, அவரவர் சமயக் கோட்பாடுகளை கேட்டறிந்தார்.பத்து மதங்களை சார்ந்தோர் அதில் பங்கு கொள்கின்றனர். அவர்களில் உலோகாயதன், பூதவாதி என்பர், இறுதியில் பங்கு கொள்கின்றனர்.

நிலம், நீர், தீ, வளி, வெளி என, ஐந்து பூதங்களையும் உடன்பட்டு, பிரத்தியட்சப் பிரமாணம் எனப்படும், காட்சி அளவையை மட்டும் கொள்பவன் பூதவாதி.மேற்கண்ட ஐந்து பூதங்களில் ஆகாயம் எனப்படும் வெளியை உடன்படாமல், காட்சி அளவையை மட்டும் கொள்பவன், உலோகாயதன் எனப்படுவான்.இவர்கள் கருதல் எனப்படும், அனுமானப் பிரமாணத்தை ஏற்க மாட்டார்கள். அதாவது, கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்பர்.

'புத்த பீடிகையால், முற்பிறப்பை உணர்ந்தேன்' என, மணிமேகலை சொல்ல, 'நீ சொல்வது மயக்கம் கொண்டோர் மனநிலையை ஒத்தது. அது, பிரத்தியட்சம் அல்லாதது. ஆதலால், உன் கூற்று சந்தேகத்திற்குரியது' என, பூதவாதி சொல்கிறான். இனம் பற்றி, உலோகாயதனையும் கொள்ள வேண்டும்.எட்டு சமயவாதிகளின் கொள்கைகக்கும், கூற்றுக்கும் மறுப்பேதும் சொல்லாமல் வாளா கேட்டுக் கொண்டிருந்த மணிமேகலை, 'நீ சொல்வது நம்பும் படியாக இல்லை' என்ற பூதவாதியை நோக்கி, 'உன் அப்பாவையும், அம்மாவையும் அனுமானத்தால் அல்லாமல், இந்த உலகில் வேறு எந்த வகையால் அறிவாய்.


வேத காலத்திலேயே உண்டு


'சத்திய ஞானம் இல்லாமல், மேலான உண்மைகளை அறிய இயலாது. ஆதலால், என் கூற்றை சந்தேகம் என்று சொல்லாதே' என, கூறுகிறாள் மணிமேகலை.இவன் தான் என் தந்தை, இவள் தான் என் தாய் என ஒருவன், அனுமானத்தால் அறிய முடியுமே தவிர, ஆராய்ச்சியில் அறிய முடியாது என்பதே, நாத்திகருக்கான பதிலாக, மணிமேகலை கூற்று இருக்கிறது.நாத்திகவாதம் ஹிந்து மதத்திற்கு புதிதன்று. புறநானுாற்று காலம், மணிமேகலை காலம், அப்பரடிகள் காலம், மணிவாசகர் காலம், வடலுார் வள்ளலார் காலம் என, காலம் கடந்து வருகிறது.

'கடவுள் இல்லை' என்ற வாதத்தையும், ஒரு மதமாக கொண்டு, ஹிந்து மதம் ஏற்று பதில் சொல்லி வருகிறது. மற்ற மதங்களில் தலையெடுக்க விட மாட்டார்கள்.மணிமேகலை கேட்ட கேள்விக்கு, இன்று வரை நாத்திகர்களிடமிருந்து பதிலில்லை; பதில் தர முடியாது.நாத்திகம் பேசுவதை, ஹிந்து மதம் ஏற்று பதில் சொல்கிறது என்பதை விட்டு விட்டு, பிராமணர்களை தனியே பிரித்தெடுத்துப் பேசுவது,கயமைத்தனமல்லவா!

நாத்திகம் வேத காலத்திலேயே உண்டு. வேதத்தை ஏற்று, கரும காண்டமே உண்மையானது; ஞான காண்டமும் அதற்கு முதலாகிய தெய்வங்களும், கற்பனை எனச் சொல்லும் கருத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளது ஹிந்து மதம்.கருமத்தை முதன்மைப்படுத்திய இந்த மீகாஞ்சக மதத்திற்குச் சிறந்த நுால் செய்தவர் ஜைமினி எனும் முனிவர்.இதன் கிளை பற்றி சொல்ல இங்கே இடமில்லை. ஜைமினி முனிவரது நுாலே வேதம் என்று சொல்லப்பட்டது என்பதை அறிந்தால் போதும்.

கடவுள் உண்டு என்பதைக் கொண்டு, வேத வியாசர் ஞான காண்டத்தைப் பின்பற்றி, ஓர் ஆராய்ச்சி நுால் செய்தார். இதுவே, பிரம்ம சூத்திரம் எனப்பட்டது.ஜைமினி முனிவரது நுால், பூர்வபாகம் பற்றியது. ஆதலால், பூர்வமீமாஞ்சை என்றும், வியாசரது நுால் உத்தர பாகம் பற்றியது. ஆதலால், உத்தரமீமாஞ்சை என்றும் சொல்லப்படும்.பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதியவர்களே சங்கரர், ராமானுஜர், ஆனந்த தீர்த்தர் என்னும் மூவராவர்.இவற்றின் கொள்கைகளையே தர்மம் என்பர். இந்தக் கொள்கைகள்மிகப் பழைய காலத்திலியிருந்து வருவதால், சநாதனக் கொள்கைகள் அல்லது தர்மம் என்பர்.

வேதக் கொள்கைகளைப் பிராமணர்களே, இன்றளவும் கைக்கொண்டு வருகின்றனர். வேதங்களைச் சைவமும், வைணவமும் ஏற்றுக் கொண்டிருப்பினும், அவை தங்களுக்கென்றே ஆகமங்களை அமைத்துக் கொண்டதால், தத்துவத்தில் வேறுபட்டன. சநாதனக் கொள்கைகளை அழிப்பதே, தங்கள் நோக்கம் என்பர் நாத்திகர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாயினும் அவர்களால் அழிக்க முடியவில்லை; அழிக்க முடியாது. பணம் பண்ண வேண்டுமானால், சநாதன ஒழிப்பு மாநாடு நடத்துவர்.சநாதனம் என்ற சொல்லுக்கு, நித்திய நுாதனம் என்று பொருள் சொல்கிறார், யாஸ்கர் என்ற முனிவர்.

நித்தியம் நிலையானது; நுாதனம் புதுமை. அதாவது, பழைமை தன்னை தினந்தோறும் புதுப்பித்துக் கொள்கிறது என்பதாக பொருள் கொள்ளலாம்.


மரணம் தவிர்க்க முடியாதது


இதைத் தான், நம் மணிவாசகப் பெருமாள், 'முன்னை பழைமைக்கும் பழைமை; பின்னை புதுமைக்கும் புதுமை' என்கிறார்.ஒரு பார்ப்பானாக, ஓர் ஹிந்துவாகச் சில செய்திகளை யான் அறிந்த வகையில், பறை அறைந்து சொல்லியுள்ளேன்.இந்தக் கட்டுரையை முடிவாக்க, காலஞ்சென்ற, இறையருள் பெற்ற, மகாகவிஞன் கண்ணதாசனின் பறை ஒலியைக் கேளுங்கள்...'நான் அறிந்த வரையில், மரணத்திற்காக பிராமணர்கள் அதிகம் ஓலமிடுவதில்லை; கதறி அழுவதில்லை. காரணம், அவர்களுடைய பகுத்தறிவு தெளிவாகச் சொல்லிவிட்டது, மரணம் தவிர்க்க முடியாதது என்று.'அந்தச் சமூகத்தில் தான், அறிவாளிகள் அதிகம் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். வைதிக, மத நம்பிக்கையும் அந்தச் சமூகத்தில் தான் அதிகம்.

'அவர்கள் இன்ப, துன்பங்களை சமமாகப் பார்க்கும் போது மத நம்பிக்கையுள்ள பகுத்தறிவு, வாழ்க்கையை எவ்வளவு நிம்மதியாக ஓட்டிச் செல்கிறது என்பது புரிகிறது.இவ்வாறு கூறும் கண்ணதாசன், மேலும், 'பூஜை அறைக்கும், குளிக்கும் அறைக்கும் பேதம் தெரிந்தவன் ஆத்திகன்.'மல, ஜலம் கழிக்கும் இடத்திலேயே சாப்பிட்டுப் பழகியவன் நாத்திகன்.'தாய்க்கும், தாரத்திற்கும் பேதம் தெரிந்தவன் ஆத்திகன்; எதுவும், தாரம் தான் என்று கருதுகிறவன் நாத்திகன்.


'தர்மம், தர்மம் என்று பயப்படுகிறவன் ஆத்திகன்; அனுபவிப்பதே தர்மம் என்று நினைப்பவன் நாத்திகன். 'ஆத்திகன் மனிதனாக வாழ்ந்து தெய்வமாகச் சாகிறான். நாத்திகன் மனிதன் போலக் காட்சியளித்து மிருகமாகச் சாகிறான்.'பகுத்தறிவு ஒழுங்காக வேலை செய்யுமேயானால், அது கடைசியாக இறைவனைக் கண்டுபிடிக்குமே தவிர சூனியத்தைச் சரணடையாது!'இவ்வாறு, கண்ணதாசன் கூறுகிறார்.


latest tamil news
எஸ்.வேதாந்தம்

சர்வதேச முன்னாள் செயல் தலைவர்,

விஷ்வ ஹிந்து பரிஷத்

தொடர்புக்கு: svedantam1@gmail.com

Advertisement
வாசகர் கருத்து (108)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
11-ஆக-202014:51:16 IST Report Abuse
N Annamalai நல்ல பறை கொட்டு .இவர்கள் துரத்தி துரத்தி பிராமணர்கள் வேறு தேசங்களில் பெரிய பதவிகளில் நிம்மதியாக உள்ளனர்.டிவி சினிமா என அனைத்திலும் பிராமணர்களை கேலி செய்வது ஒன்றே கொள்கை என கொண்டுள்ளனர் .அவர்களை போல் படிப்பு உழைப்பு ஒழுக்கம் தவறுகளுக்கு பயம் என நல்ல குணங்களுடன் நீங்கள் ஒதுக்கீடு இல்லாமல் வந்து காட்டுங்கள் பாப்போம் .
Rate this:
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
13-ஆக-202017:00:45 IST Report Abuse
கதிரழகன், SSLCஇந்த பிராமணர்களை கொஞ்சம் நியாயமா நடத்தி இருந்தா நம்ம தமிழ் நாடு உச்சத்துக்கு போயிருக்கும். அவுங்களை நியாயமா நடத்தின காலத்தில தமிழ்நாட்டை சென்னை ராஜ்தானியை மிஞ்ச முடியாம இருந்துட்டு. அநீதி கட்சி அப்புறம் திக வந்தாவிட்டுத்தான் நாச காலம் தொடங்கிட்டு. விந்திய மலைக்கு தெற்கு பகுதி பிராமணர்களை குறிக்கும் சொல் திராவிடர். அது கூட தெரியாத, சூரபத்மனும் ராவணனுக்கு பிராமணர்கள் அதுகூட தெரியாத அறிவிலிகள் கிட்ட ஆட்சி கொடுத்திட்டு இப்ப அடிச்சுக்கிட்டு என்ன பிரயோசனம் ?...
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
11-ஆக-202012:23:09 IST Report Abuse
Sridhar மிக அருமையான கட்டுரை.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
11-ஆக-202011:52:35 IST Report Abuse
S.Baliah Seer ஒரு சிறு திருத்தம். பிராமணர்கள் தம் சாதியை மறைக்காததால் உயர்ந்து நிற்கிறார்கள். மாறாக யார் யாரெல்லாம் தம் சாதியை மறைத்தார்களோ அவர்கள் தாழ்ந்து நிற்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X