சென்னை: திமுக எம்பி கனிமொழியிடம் இந்தி தெரியாததால் நீங்கள் இந்தியரா என சி.ஐ.எஸ்.எப்., அதிகாரி ஒருவர் கேட்டது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட ஸ்டாலின், இந்தி தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா என கேள்வியெழுப்பியுள்ளார்.
ரசாயனம் மற்றும் உரத் துறைக்கான லோக்சபா நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்க, சென்னை விமான நிலையத்தில் இருந்து, நேற்று மதியம், 1:50 மணி விமானத்தில், திமுக எம்பி கனிமொழி டில்லி சென்றார். அப்போது, விமான நிலையத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி (சி.ஐ.எஸ்.எப்.,) ஒருவர், இந்தியில் பேசினார். அதற்கு கனிமொழி, 'எனக்கு இந்தி தெரியாத காரணத்தால், ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள்' என, கூறியுள்ளார். அதற்கு அந்த அதிகாரி, 'நீங்கள் இந்தியர் தானா?' என, கேட்டுள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள கனிமொழிக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இந்தி தெரியாது என்று சொன்னதால், 'நீங்கள் இந்தியரா?' என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கனிமொழியை பார்த்துக்கேட்டுள்ளார். இந்தி தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா? பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE