பொது செய்தி

இந்தியா

செய்தி சில வரிகளில்...

Added : ஆக 10, 2020
Share
Advertisement
 செய்தி சில வரிகளில்...

ஹெராயின் பறிமுதல்

மும்பை: தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானிலிருந்து, மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள துறைமுகத்துக்கு கடத்தி வரப்பட்ட, 190 கிலோ ஹெராயின் போதைப் பொருளை, சுங்கத் துறை மற்றும் வருவாய் புலனாய்வு துறையினர், நேற்று பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு, 1,000 கோடி ரூபாய். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பசுவுக்கு செயற்கை கால்

புனே: மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள கோசாலையில் இருந்த பசுவுக்கு, காயம் காரணமாக, ஒரு கால், கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அந்த பசு, நடக்க முடியாமல் சிரமப்பட்டது. இதையடுத்து, புனேயில் உள்ள சன்செட்டி மருத்துவமனை டாக்டர்கள், அந்த பசுவுக்கு செயற்கை கால் பொருத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். கடுமையான முயற்சிக்குப் பின், சமீபத்தில் அந்த பசுவுக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டது. தற்போது அந்த பசு, நன்றாக நடப்பதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.

சுஷாந்த் தோழியிடம் விசாரணை

மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், சமீபத்தில் தற்கொலை செய்தார். தற்கொலைக்கு துாண்டியதாக, அவரது தோழி ரியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சுஷாந்தின் வங்கி கணக்கிலிருந்து சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதிலும் ரியாவுக்கு தொடர்புள்ளதாக கூறப்பட்டது. இது தொடர்பாக, அமலாக்கத் துறையும், அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இது குறித்து, மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், ரியா மற்றும் அவரது குடும்பத்தினரிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள், நேற்று விசாரணை நடத்தினர்.

கார் விபத்தில் போலீஸ் பலி

புதுடில்லி: டில்லியில், போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது, கல்லுாரி மாணவர் ஓட்டி வந்த கார் மோதி, விபத்து ஏற்பட்டது. இதில், ரோந்து வாகனத்தில் இருந்த வஜீர் சிங் என்ற போலீஸ்காரர் உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த மாணவர், மது போதையில் இருப்பது தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.

திருமலையில் 743 பேருக்கு தொற்று

திருப்பதி: ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலை தேவஸ்தான ஊழியர்கள், 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 402 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர்; மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X