தனியா கூட்டீட்டு போனாரு நேரு - உடன்பிறப்பு கிட்ட கேட்டாரு டீட்டெய்லு!| Dinamalar

தனியா கூட்டீட்டு போனாரு நேரு - உடன்பிறப்பு கிட்ட கேட்டாரு டீட்டெய்லு!

Added : ஆக 11, 2020
Share
வடகோவைக்குச் சென்றிருந்த சித்ராவும், மித்ராவும், ஸ்கூட்டரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். டாடாபாத் பகுதியில் தி.மு.க., கொடி கட்டிய கார்கள் வரிசையாக நின்றிருந்தன. அதைப்பார்த்த சித்ரா, ''தி.மு.க.,வும் சட்டசபை தேர்தலுக்கு தயாராக ஆரம்பிச்சுடுச்சாமே,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.''ஆமாக்கா, பிரசாந்த் கிேஷார் கொடுத்த ரிப்போர்ட்டுல, கோவையில் ஒரு தொகுதி கூட தி.மு.க.,
தனியா கூட்டீட்டு போனாரு நேரு - உடன்பிறப்பு கிட்ட கேட்டாரு டீட்டெய்லு!

வடகோவைக்குச் சென்றிருந்த சித்ராவும், மித்ராவும், ஸ்கூட்டரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். டாடாபாத் பகுதியில் தி.மு.க., கொடி கட்டிய கார்கள் வரிசையாக நின்றிருந்தன. அதைப்பார்த்த சித்ரா, ''தி.மு.க.,வும் சட்டசபை தேர்தலுக்கு தயாராக ஆரம்பிச்சுடுச்சாமே,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.
''ஆமாக்கா, பிரசாந்த் கிேஷார் கொடுத்த ரிப்போர்ட்டுல, கோவையில் ஒரு தொகுதி கூட தி.மு.க., ஜெயிக்காதுன்னு சொன்னதுனால, தலைமை அதிர்ச்சியாகி இருந்ததா, பேசியிருந்தோமே. அதனால, முதன்மை செயலாளர் நேரு, கொறடா சக்கரபாணி, மதுரை மாவட்ட செயலாளர் மூர்த்தின்னு சில நிர்வாகிகளை, உண்மை நிலவரத்தை ஆய்வு செய்றதுக்கு, ஸ்டாலின் அனுப்பி வச்சிருக்காரு,''
''பகுதி கழக செயலாளர், மூத்த நிர்வாகிகளை அழைச்சு பேசியிருக்காங்க. பாராளுமன்ற தேர்தல்ல, கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, சிங்காநல்லுார் தொகுதியில, தி.மு.க.,வுக்கு அதிகமான ஓட்டு விழுந்திருக்கு. அதனால, விருப்பு வெறுப்பு இல்லாம, தேர்தல் பணியாற்றணும். கோஷ்டி பூசல் இருக்கக்கூடாது. அடிமட்ட தொண்டர்களின் மனசை புரிஞ்சுக்கணும். மூத்த நிர்வாகிகளின் ஆலோசனையை கேட்டு, நடந்துக்கிடணும்னு 'அட்வைஸ்' செஞ்சிருக்காரு,''
''கட்சியில என்ன நடந்துக்கிட்டு இருக்குன்னு, 20 நிர்வாகிகளை பேசச் சொல்லி, குறிப்பெடுத்தாங்களாம். பலரும் தங்களது மனக்குறையை கொட்டிட்டாங்களாம். உள்ளடி வேலை செஞ்சு, கட்சியில ஓரங்கட்டப்பட்டவங்கள, தனியறைக்கு அழைச்சு நேரு பேசியிருக்காரு. அவுங்க மேலே சொன்ன புகார் உண்மையானது தானான்னு விசாரிச்சிருக்கிறாரு,''
''கொஞ்ச நேரத்துல, ஸ்டாலினே, தொலைபேசியில தொடர்பு கொண்டு, ஓரங்கட்டப்பட்ட நிர்வாகிகள் ஒவ்வொருத்தரிடமும் பேசியிருக்காரு. மனசுல எதையும் வச்சுக்காதீங்க; 'வெயிட்' பண்ணுங்கன்னு சொல்லியிருக்காரு,''
''அப்ப, அடுத்த வருஷம் நடக்கப் போற சட்டசபை தேர்தல்ல, அ.தி.மு.க.,வுக்கு தி.மு.க., கடும் போட்டியா இருக்கும்னு சொல்றீயா,''
''அக்கா, தி.மு.க.,வுல அதிருப்தியா இருக்கற நிர்வாகிகளை துாண்டில் போட்டு, பா.ஜ., இழுத்துட்டு இருக்கு. நம்மூர்ல இருக்குற மூத்த நிர்வாகியை துாக்குறதுக்கு பிளான் போட்டு, காய் நகர்த்திட்டு இருக்காங்க. ஊரடங்கு சமயத்திலும், பா.ஜ., மாநில தலைவர், கோயமுத்துாருக்கு வந்துட்டு போனாரு. யாராச்சும் கட்சி தாவிடக்கூடாதுன்னு, இப்பவே, அணை கட்டுறாங்க,''
''ஆளுங்கட்சியிலும் அதிருப்தி இருக்குதே,''
''ஆமாக்கா, எந்த கட்சியா இருந்தாலும், போஸ்டிங் கெடைச்சவங்க சந்தோஷப்படுவாங்க; கெடைக்காதவங்க, வருத்தப்படுவாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, இதய தெய்வம் மாளிகையில், ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடந்துச்சு.
''அதுல, மினிஸ்டர் வேலுமணி கலந்துக்கிட்டு, வெளிப்படையா பேசினாராம். யாரும் எதுக்காகவும் அதிருப்தியில இருக்கக்கூடாது; ஏதாச்சும் குறை இருந்தா, வெளிப்படையா சொல்லிடுங்க; பேசித் தீர்த்துக்கலாம். மனசுக்குள்ளேயே வச்சிருந்து, கட்சி வேலை செய்யாம இருக்காதீங்கன்னு சொல்லியிருக்காரு,''
''ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., ஒருத்தரு, தொகுதி கை விட்டு போனதுனால, 'அப்செட்'டுல இருந்தாரே,''
''அவரிடம் பேச்சு நடத்தி, இப்போதைக்கு சமாதானம் செஞ்சிட்டாங்களாம். ஆடி முடிஞ்சதுக்கப்புறம், புது நிர்வாகிகள் கூட்டம் நடக்கப் போகுதாம். அப்ப, அதிருப்தியை கொட்டுவாரா அல்லது, 'அட்ஜஸ்ட்' பண்ணி போவாரான்னு தெரியும்,''
''அதெல்லாம் இருக்கட்டும், சூலுாரை சேர்ந்த ஆளுங்கட்சி 'மாஜி' ஒருத்தரு, வேலைக்கு ஆள் பிடிச்சுக் கொடுக்கறதுக்கும் பங்கு வாங்குறாராமே,'' என, 'ரூட்' மாறினாள் சித்ரா.
''அதுவா, சூலுார் ஏரியாவுல ஏகப்பட்ட விசைத்தறி குடோன் இருக்கு. துணிகளை வட மாநிலங்களுக்கு கன்டெய்னருல அனுப்புறது வழக்கம். ஒரு கன்டெய்னர்ல, 20 டன் வரைக்கும் துணி ஏத்துவாங்க. வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு போயிட்டதால, உள்ளூர்க்காரங்களுக்கு வேலை கொடுக்கச் சொல்லி, நெருக்கடி கொடுக்குறாங்களாம். கூலியும் இரண்டு மடங்கு கேக்குறாங்க. அதுல, பாதித்தொகையை, ஆளுங்கட்சி பிரமுகர் பங்கா வாங்குறாராம்,''
மேம்பாலத்தில் இருந்து இறங்கி, வனத்துறை அலுவலகத்தை கடந்து, சிக்னலில் காத்திருந்தபோது, போலீஸ் ஜீப் நின்றிருந்தது.
அதைப்பார்த்த சித்ரா, ''நம்மூர்ல உளவுத்துறை இருக்கான்னு சந்தேகமா இருக்குப்பா,'' என, அங்கலாய்த்தாள்.
''ஏங்கா, அப்படிச் சொல்றீங்க! உளவு பார்த்துச் சொல்லாம, ஜாலியா ஊர் சுத்துறாங்களா,''
''இலங்கை தாதா விவகாரத்தைதான் சொல்றேன். அவரு, 2018ல, சென்னையில இருந்து நம்மூருக்கு வந்திருக்காரு. ரெண்டு வருஷமா இங்கிருந்தும், உளவுத்துறைக்காரங்க விசாரணை செய்யாம இருந்திருக்காங்க,''
''அவரை பார்க்க, மூணு தடவை, இலங்கையில இருந்து ஒரு லேடி வந்துட்டு போயிருக்காங்க. கடந்த பிப்., மாசம் வந்த லேடி, இன்னும் இலங்கைக்கு திரும்பி போகலை. இப்படி, ஏகப்பட்ட விசயங்களை உளவுத்துறை போலீஸ்காரங்க கோட்டை விட்டுருக்காங்க.
''பிரேத பரிசோதனை செஞ்சப்பவும், அந்த லேடி இருந்திருக்காங்க. விமானம் வழியா வந்தவங்க பட்டியலை சரிபார்த்திருந்தாலே, ஈசியா கண்டுபிடிச்சிருக்கலாம். எல்லா விசயத்திலும் கோட்டை விட்டுட்டு, உயரதிகாரிகளுக்கு பதில் சொல்ல முடியாம திண்டாடிட்டு இருக்காங்களாம்,''
''அவங்களுக்கு இதுக்கெல்லாம் எங்க நேரமிருக்கு; வசூல் செய்யவே நேரம் போதலைன்னு சொல்றாங்க,'' என்றாள் மித்ரா.
''ஆமா, மித்து, நம்ம வனக்கோட்டத்துல, யானைகள் இறப்பு அதிகமாகிட்டே போகுதே. நேத்து கூட, ஒரு பெண் யானை இறந்துச்சாமே,'' என, வனத்துறை விவகாரங்களை கிளறினாள் சித்ரா.
''ஆமாக்கா, நானும் கேள்விப்பட்டேன். ஆனா, யானைகள் இறந்ததற்கான போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வெளியே வர்றதே இல்லீங்க. இறப்புக்கான காரணங்களை மூடி மறைப்பதாக, வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில சந்தேகம் எழுந்திருக்கு. எந்த ஒரு தகவலும் வெளியே கசியக்கூடாதுன்னு, ஏ.சி.எப்., ஆக இருக்குற இளம் அதிகாரி ஒருத்தரு, ரேஞ்சர்களுக்கு கண்டிஷன் போட்டிருக்கிறாராம். டி.எப்.ஓ.,வை விட இவருடைய 'டாமினேஷன்' அதிகமாக இருக்குன்னு, சில ரேஞ்சர்கள் புலம்பிட்டு இருக்காங்க,''
''வனத்துறையை சேர்ந்த சில ஊழியர்கள் சீருடையே அணியறதில்லையாமே,'' என, கிளறினாள் சித்ரா.
''என்னக்கா, சாடிவயல் பக்கம் போயிருந்தீங்களா. அங்க இருக்க செக்போஸ்ட்டுல வேலைபார்க்குற அலுவலர்கள் சிலர், யூனிபார்ம் அணியறதில்லை. அதனால, வெளியே இருந்து வர்றவங்களுக்கும், அவுங்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுது. சில சமயங்கள்ல தாக்குதலும் நடக்குதாம்,'' என்ற மித்ரா, ''சிறுவாணி விவகாரத்துல, மறுபடியும், தமிழக அதிகாரிகள் கோட்டை விட்டுட்டாங்க, பார்த்தீங்களா,'' என, வருத்தப்பட்டாள்.
''ஆமா மித்து, இரவோடு இரவா, டேம்ல இருந்து, இரண்டு நாள் தண்ணீரை திறந்து விட்டுட்டாங்க. 2 நாள்ல, 12 அடி தண்ணீரை வெளியேத்தியிருக்காங்க. கேரள அமைச்சரிடம் பேசியும் கூட, நீர்ப்பாசனத்துறை அதிகாரிங்க, கண்டுக்காம இருந்திருக்காங்க. மழைப்பொழிவு குறைஞ்சதுக்கப்புறம் தான், ஷட்டரை மூடியிருக்காங்க,''
''ரெண்டு வருஷமா, இந்த பிரச்னை வந்திட்டு இருக்கு. தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், முன்கூட்டியே, கேரளாவுக்கு போயி பேசியிருக்கணும். அரசு தரப்புல நடவடிக்கை எடுப்பாங்கன்னு சொல்லி, இந்த விஷயத்துல அசால்ட்டா இருந்துட்டாங்க; மழை பெஞ்சும், தண்ணீர் வீணாப் போயிடுச்சு,'' என்ற சித்ரா, பேக்கரி முன், ஸ்கூட்டரை ஓரங்கட்டினாள்.
வெஜ் ரோல், காபி ஆர்டர் கொடுத்தாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X