பொது செய்தி

இந்தியா

கொரோனா பரிசோதனையை அதிகரிக்க பிரதமர் அறிவுறுத்தல்!

Updated : ஆக 12, 2020 | Added : ஆக 11, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
PM, Modi, Cms Meeting, Coronavirus, Corona, Covid-19, Coronavirus crisis, Corona in india, india fights Covid-19, பிரதமர், மோடி, முதல்வர்கள், ஆலோசனை

புதுடில்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து, தமிழகம் உள்ளிட்ட, 10 மாநிலங்களின் முதல்வர்களுடன் நேற்று, பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, ''நாட்டில் உள்ள மொத்த பாதிப்பில், 80 சதவீதம், இந்த, 10 மாநிலங்களில் தான் உள்ளது. இங்கு கொரோனாவை ஒழித்து விட்டால், ஒட்டு மொத்த நாடும் கொரோனாவிலிருந்து மீண்டு விடும்; எனவே, பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்,'' என, பிரதமர் மோடி பேசினார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மஹாராஷ்டிரா, தமிழகம், டில்லி, பீஹார், உத்தர பிரதேசம், பஞ்சாப், ஆந்திரா, மேற்கு வங்கம், தெலுங்கானா, குஜராத் உள்ளிட்ட, 10 மாநிலங்களின் முதல்வர்களுடன், பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று கலந்துரையாடினார். அப்போது, கொரோனா பாதிப்பு, மேற்கொள்ளப்படும் சிகிச்சை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை, அந்த மாநிலங்களின் முதல்வர்களிடம் கேட்டறிந்தார்.

இதில், பிரதமர் மோடி பேசியதாவது: கொரோனா இறப்பு விகிதம், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, நம் நாட்டில் மிகவும் குறைவாக உள்ளது; இது, ஆறுதலான விஷயம். பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தினமும், நாடு முழுதும், ஏழு லட்சம் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இதன் வாயிலாக, வைரஸ் பாதித்தோரை முன் கூட்டியே கண்டறிய முடிகிறது.

கொரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது; இது, நாட்டு மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இறப்பு விகிதத்தை, 1 சதவீதத்துக்கும் கீழ் கொண்டு வர, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; விரைவில் இது சாத்தியமாகும். பீஹார், குஜராத், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பரிசோதனை எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே, இந்த மாநிலங்களில் பரிசோதனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும்.

கொரோனா தடுப்பு விஷயத்தில், அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு, மக்கள் ஒத்துழைப்பு தருகின்றனர்; இது, அரசின் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு கிடைத்த வெற்றி. வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் நடைமுறை, வெற்றிகரமாக செயல்படுகிறது. உ.பி., ஹரியானா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களின் சில மாவட்டங்களின் நிலைமை கவலை அளிக்கிறது. பரிசோதனைகளை அதிகரிப்பது, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை அறிவிப்பது, மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை இங்கு தீவிரப்படுத்த வேண்டும்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களை, 72 மணி நேரத்திற்குள் அடையாளம் கண்டு, அவர்களுக்கு சிகிச்சையை துவக்கிவிட்டால், அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு வைரஸ் பரவுவது, கட்டுப்படுத்தப்பட்டு விடுவதாக, மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். வைரஸ் பாதிப்பவர்களை அடையாளம் காண்பது, அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை அடையாளம் கண்டு, தனிமைப்படுத்துவது ஆகியவை தான், கொரோனாவுக்கு எதிரான முக்கியமான ஆயுதம். கைகளை அடிக்கடி கழுவுதல், முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளி ஆகியவையும் மிக முக்கியம். கொரோனாவை கட்டுப் படுத்தும் விஷயத்தில், மத்திய - மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

நாட்டில் கொரோனா பாதித்து, சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை, ஆறு லட்சமாக உள்ளது. இவற்றில், 80 சதவீத பாதிப்பு, இந்த, 10 மாநிலங்களில் தான் உள்ளது. இந்த மாநிலங்களில் கொரோனாவை ஒழித்துக் கட்டினால், நம் நாடு, கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு விடும். எனவே, இந்த மாநில அரசுகள், கொரோனாவை கட்டுப்படுத்த, இன்னும் தீவிரமாக செயலாற்ற வேண்டும்; பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.

கொரோனாவை கட்டுப்படுத்த, இதுபோன்ற ஆலோசனை கூட்டங்களை அவ்வப்போது நடத்த வேண்டும். மருத்துவமனைகள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது; இது, அவர்களுக்கு புதுவிதமான சவாலை ஏற்படுத்தி உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள இந்த, 10 மாநில அரசுகளும், ஒருங்கிணைந்து ஆலோசனை நடத்தி, ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்பட்டுள்ள பாதிப்பு, அதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை, ஆகியவற்றை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாநிலமும், கொரோனாவால் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து, அதற்கேற்ப செயல்படுவது தான், இந்த நோயை ஒழிப்பதற்கான மிகச் சிறந்த பயிற்சியாக இருக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.


கொரோனா பாதிப்பில் இருந்து 69.80 சதவீதம் பேர் மீண்டனர்

நாட்டில், கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வோர் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று வரை, 69.80 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.

இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சக அறிக்கை: நேற்று வரை, 2.46 கோடி பேரிடம், கொரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை நடந்துள்ளது என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த, 24 மணி நேரத்தில், 4.77 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவில், 53 ஆயிரத்து, 601 பேரிடம் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், நாட்டில் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானோர் எண்ணிக்கை, 22.68 லட்சத்தை கடந்துள்ளது.

கடந்த நான்கு நாட்களாக, தினமும், 60 ஆயிரம் பேருக்கு மேல் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று, அந்த எண்ணிக்கை, 54 ஆயிரமாக குறைந்துள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து, நேற்று வரை, 15.83 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து, தொற்றில் இருந்து மீண்டோர் விகிதம், 69.80 சதவீதமாக உயர்ந்துள்ளது; இறப்பு விகிதம், 1.99 சதவீதமாக குறைந்துள்ளது.

மஹா.,வில், 293 பேர்; தமிழகம் மற்றும் கர்நாடகாவில், தலா, 114; ஆந்திராவில், 80; உ.பி.,யில், 51; மே.வங்கத்தில், 41 பேர் உள்ளிட்ட, 871 பேர் நேற்று இறந்துள்ளனர். இதனால், நாட்டில் இறந்தோர் எண்ணிக்கை, 45 ஆயிரத்து, 257 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், மஹா.,வில், 18 ஆயிரத்து, 050 பேரும்; தமிழகத்தில், 5,041; டில்லியில், 4,131; கர்நாடகாவில், 3,312; குஜராத்தில், 2,672; உ.பி.,யில், 2,120; ஆந்திராவில், 2,116; மே.வங்கத்தில், 2,100 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தடுப்பூசி நிபுணர் குழு ஆலோசனை:

கொரோனா வைரசுக்கான, தடுப்பூசியை பகிர்ந்தளிப்பது தொடர்பாக, 'நிடி ஆயோக்' உறுப்பினர், டாக்டர் வி.கே.பால் தலைமையில், நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், மாநில அரசுகள், தடுப்பூசி தயாரிப்பாளர்கள் மற்றும் இந்த பணிகளில் தொடர்புடையோருடன், இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இதில் தடுப்பூசி கொள்முதல், அவற்றை வினியோகம் செய்தல், நிர்வாகம், உள்நாட்டில் தடுப்பூசி உற்பத்திக்கான வழிமுறைகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து, ஆலோசனை நடத்த உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
12-ஆக-202008:09:17 IST Report Abuse
VENKATASUBRAMANIAN சில பேருக்கு எதாவது சொல்லவேண்டும். அதனாலதான் mask கீழே உள்ளது சட்டை மேலே உள்ளது. என்று பிதற்றுகின்றனர். இவர்கள் வேலையே மற்றவரை குறை சொல்வது ஒன்றே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X