கொடைக்கானல்: மூணாறு போன்று, கொடைக்கானலில் மழைக்காலத்தில் நிலச்சரிவு பாதிப்பு ஏற்படாதவாறு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானலில், வணிக நோக்கத்தால், விவசாய நிலங்கள் கான்கிரீட் காடுகளாக மாறியுள்ளன. மக்கள் தொகை அதிகரித்ததால், தகுதியில்லா இடங்களில் கட்டுமானங்கள் புற்றீசலாக உருவாகின.மலைப் பகுதியில், இயந்திர பயன்பாடுக்கு தடை உள்ளது. இருப்பினும், அதிகாரிகள் ஆசியால் இவை அரங்கேறுகின்றன. போர்வெல் போட்டு துளைத்தெடுத்ததால், பாறைகள் நழுவும் அபாயம் இருப்பதாக, புவியியல் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சரிவு பகுதியில் அடர்த்தியாக மக்கள் வசிப்பது, நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டுமானம் உருவாக்கியது போன்றவற்றால், சுற்றுலா நகருக்கு ஆபத்து இருக்கவே செய்கிறது.

கார்மேல்புரம், தந்திமேடு, ஆனந்தகிரி, பாத்திமா குருசரடி, எம்.எம்., தெரு, புதுக்காடு, பெருமாள்மலை, வடகவுஞ்சி பகுதிகள், ஏற்கனவே புவியியல் வல்லுனர்களால் பேரிடர் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த, 2018ல் ஏற்பட்ட 'கஜா' புயலின் கோரத்தில் ஏற்பட்ட மண்சரிவு இதற்கு உதாரணம்.மேலும் சின்னப்பள்ளம் நீரோடை பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்ட நான்கு தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர்.கனமழை நேரத்தில், ஆங்காங்கே சாலையோர மண் சரிவு வாடிக்கையானதாக உள்ளது. இந்நிலையில், மூணாறு சம்பவம், கொடைக்கானலில் பாதுகாப்பை அதிகரிக்க துாண்டுகிறது.
கன மழையில் பாதிக்கும்

சுற்றுச்சூழல் ஆர்வலர் ரவிக்குமார்: கொடைக்கானலில் நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் கட்டுமானங்கள் அதிகரித்துள்ளது. இதனால், கன மழை காலங்களில் பாதிப்பு அபாயம் உள்ளது. 2017ல், 20 செ.மீ., மழைக்கு பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி, அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். வெள்ளம் பெருக்கெடுக்கும் பகுதியில் வடிகால் வசதி வேண்டும்.
அபாய நிலை இல்லை

வானியியற்பில் விஞ்ஞானி செல்வேந்திரன்: ஊட்டி, மூணாறு பகுதிகளில் மண் பரப்பு அதிகம் உள்ளதால் நிலச்சரிவு ஏற்படுகிறது. கொடைக்கானல் பகுதி மண், பாறைகள் சூழ்ந்த கடின பாறைகளால் ஆனது. எனவே, இங்கு அபாய நிலை உள்ளதாக தெரியவில்லை.
நடவடிக்கைகள் எடுப்போம்
ஆர்.டி.ஓ., சிவகுமார்: கொடைக்கானலில் பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு குறித்து ஆராயப்பட்டுள்ளது. நிச்சயமாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE