வாஷிங்டன்: ஆண்ட்ராய்டு தளத்தில், ஒவ்வொரு பயனருக்கும் ஒதுக்கப்பட்ட தனித்துவ அடையாளமான, 'மீடியா அக்சஸ் கண்ட்ரோல்' (எம்.ஏ.சி.,) முகவரிகளை, கூகுள் தடையை மீறி, கடந்தாண்டு நவ., வரை டிக்டாக் செயலி கண்காணித்து வந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறலை தொடர்ந்து, இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக கண்டறியப்பட்ட டிக்டாக் உள்ளிட்ட, 59க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு, மத்திய அரசு தடை விதித்தது.
இந்தியாவை தொடர்ந்து, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிக்டாக் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்கும் உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். மேலும் டிக்டாக்கை ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க, அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸுக்கு 45 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 'வால்ஸ்ட்ரீட் ஜர்னல்' வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:எம்.ஏ.சி., முகவரிகள் தொடர்பான கூகுள் ஆண்ட்ராய்டு தளத்தின் கட்டுப்பாடுகளில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, டிக்டாக் தகவல்களை சேகரித்து வந்துள்ளது. டிக்டாக் குறைந்தபட்சம் பயனர்களின் எம்.ஏ.சி., முகவரிகளை, 15 மாதங்கள் கண்காணித்து வந்துள்ளது. பயனர்களின் முக்கியமான தகவல்கள் விளம்பரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த தகவல்களைக் கொண்டு அச்சுறுத்தவும் உளவு பார்க்கவும் முடியும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு தளத்தில் உள்ள குறைபாடுகளைப் பயன்படுத்தியே, டிக்டாக் தகவல்களைக் கண்காணித்துள்ளது அம்பலமாகியுள்ளது. ஆனால், கூகுள் தனது ஆண்ட்ராய்டு தள கட்டுப்பாடுகளில் உள்ள குறைபாடுகள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த புதிய அறிக்கை குறித்து விசாரணை நடத்துவதாக மட்டும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE