பெங்களூரு: பெங்களூருவில் கலவரக்காரர்களிடம் இருந்து அனுமன் கோவிலை காக்க 100 முஸ்லிம் இளைஞர்கள் மனித சங்கலி அமைத்து நின்றனர்.
கர்நாடக மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ஸ்ரீநிவாசமூர்த்தி நேற்று இரவு பேஸ்புக்கில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தை தொடர்ந்து பெங்களூருவில் வன்முறை ஏற்பட்டது. புலிகேசிநகர், பாரதிநகர், உள்ளிட்ட தெருக்களில், வன்முறையாளர்கள் கடைகளை பூட்ட சொல்லி நெருக்கடி கொடுத்ததுடன், பல இடங்களில் சாலைகளில் டயர்களை போட்டு எரித்தனர். கட்டடங்களுக்கு தீவைக்கப்பட்டது. ஸ்ரீநிவாசமூர்த்தி வீடு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
சுமார் 5 மணி நேரம் கலவரம் நீடித்தது. நள்ளிரவு 12 மணிக்கு கலவரத்தை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர். 110க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் சமூக ஜனநாயக கட்சி நிர்வாகிகள் சிலரை விசாரணைக்காக போலீசார் பிடித்து சென்றுள்ளனர். சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட நபரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் டிஜி ஹலி பகுதியில், ஷமபுரா மெயின் சாலையில், அனுமன் கோயில் உள்ளது. பெங்களூரு கலவரத்தை தொடர்ந்து, அப்பகுதியினர் கோவிலுக்கு வந்தனர். அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் மனித சங்கிலி அமைத்து கோவிலுக்கு பாதுகாப்பு அளித்தனர்.

அந்த பகுதியில் வசிக்கும் முகமது காலித் என்பவர் கூறுகையில், சில இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் கற்களை வீசுவார்களோ என நாங்கள் நினைத்தோம். இதனால், கலவரம் பெரிதாக வாய்ப்பு உள்ளது. இதனால், அவர்களை தடுத்து நிறுத்தினோம். எங்கள் பகுதியை சேர்ந்த மூத்த குடிமக்கள் சிலர், கலவரக்காரர்கள், வந்து கோவிலை தாக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர். இதனால், நாங்கள் மனித சங்கிலி அமைத்து நின்றோம். இரவு 11:30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை பாதுகாப்புக்கு நின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE