மதுரை :
ஐ.டி.ஐ., முடித்து சிவில் வரைபட அனுபவம் இருப்பின் பொறியாளராக பதிவு செய்யும் கட்டட விதி திருத்தத்திற்கு எதிரான வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.கோவில்பட்டி மதிவாணன் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழ்நாடு ஒருங்கிணைந்த மேம்பாடு மற்றும் கட்டட விதிகள் 2019 ல் கொண்டுவரப்பட்டது. அதில் திருத்தம் செய்து 2020 ஜனவரியில் அரசாணை வெளியானது. அதன்படி ஐ.டி.ஐ.,(சிவில்) முடித்து 5 ஆண்டுகள் சிவில் வரைபட அனுபவம் இருப்பின் அங்கீகரிக்கப்பட்ட பொறியாளராக பதிவு செய்ய முடியும். இது சட்டவிரோதம்.ஐ.டி.ஐ.,(சிவில்) பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 ஆண்டுகள் தொழிற்கல்வி தகுதியாகும். இதைக் கொண்டு கட்டட விதிகளை புரிந்து, வரைபடம் வரைவது அல்லது கட்டுமானம் மேற்கொள்வது சாத்தியமற்றது. ஐ.டி.ஐ.,(சிவில்) படித்தவர்கள் பொறியியல் பட்டம் அல்லது பட்டயம் பெற்றவர்களின் ஆலோசனையில் வரைபடம் தயாரிக்கின்றனர். ஐ.டி.ஐ.,முடித்து 5 ஆண்டுகள் வரைபட அனுபவம் பெற்றிருப்பின் அவர்களை அங்கீகரிக்கப்பட்ட பொறியாளராக பதிவு செய்யும் விதி திருத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மதிவாணன் குறிப்பிட்டார். நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி, செப்.,10 க்கு ஒத்திவைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE