தமிழகத்தின் 2ம் தலைநகராக மதுரையை உருவாக்குவது அவசியம்! காலத்தின் கட்டாயத்தை உணருமா அரசு?

Updated : ஆக 18, 2020 | Added : ஆக 15, 2020 | கருத்துகள் (158)
Advertisement
தமிழகத்தின் தலைநகரான சென்னையில், மக்கள் தொகைபெருக்கம் உட்பட, பல்வேறு நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், எதிர்கால நலன் கருதி, மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை, தமிழக அரசு இப்போதே மேற்கொள்ள வேண்டும் என, நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.தமிழகத்தின் தலைநகரான சென்னை, வந்தோரை வாழ வைக்கும் நகரமாக திகழ்கிறது.
Madurai, TN second capital, Tamil Nadu, TN, மதுரை

தமிழகத்தின் தலைநகரான சென்னையில், மக்கள் தொகைபெருக்கம் உட்பட, பல்வேறு நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், எதிர்கால நலன் கருதி, மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை, தமிழக அரசு இப்போதே மேற்கொள்ள வேண்டும் என, நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

தமிழகத்தின் தலைநகரான சென்னை, வந்தோரை வாழ வைக்கும் நகரமாக திகழ்கிறது. சென்னை சென்றால், எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலிருந்தும், தொழிலாளர்கள் சென்னைக்கு படையெடுக்கின்றனர்.

விமான நிலையம், துறைமுகம், ரயில் நிலையம், உயர்தர மருத்துவமனைகள், உயர் கல்வி நிறுவனங்கள் என, அனைத்து வசதிகளும் இருப்பதால், சென்னை உலக அளவில் பிரசித்தி பெற்ற நகரமாக திகழ்கிறது. தமிழகத்தில் தொழில் துவங்க முன்வரும் தொழில் முதலீட்டாளர்கள், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில், தொழில் துவங்கவே விரும்புகின்றனர்.இதன் காரணமாக, சென்னை மாநகரத்தில், நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்து வருகிறது.விரிவாக்கம்


சென்னையை சுற்றியுள்ள பகுதிகள், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, வார்டுகள் எண்ணிக்கை, 200 ஆக மாற்றப்பட்டுள்ளது.ஆனால், மூன்றில் இரு பங்கு பகுதிகளில், இன்னும் முறையான குடிநீர், கழிவு நீர் கட்டமைப்புகளை, ஏற்படுத்த முடியவில்லை.கோடை காலம் வந்தால், குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் என, குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, ஏரிகள் இருந்தாலும், கோடை காலத்தில் ஏமாற்றி விடுகிறது.

இதனால், வீராணம் ஏரியையும், கிருஷ்ணா நதி நீரையும் நம்பியிருக்க வேண்டியுள்ளது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், தாகம் தீர்க்கும் தண்ணீர் தட்டுப்பாடு, முழுமையாக தீர்வதாக இல்லை.வருங்காலத்தில், இதுபோன்ற சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்து, 1983ல், தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., தலைநகரை திருச்சிக்கு மாற்றும் திட்டத்தை அறிவித்தார்.


latest tamil news


மாநிலத்தின் மையப்பகுதியாக, திருச்சி திகழ்வதால், அனைத்து மாவட்ட மக்களும், வந்து செல்ல வசதியாக இருக்கும் எனக் கருதி, திருச்சி தேர்வு செய்யப்பட்டது. ஆனால், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஒத்துழையாமை, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு உட்பட பல்வேறு காரணங்களால், அந்த திட்டம் நிறைவேறவில்லை.

எம்.ஜி.ஆருக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள், தலைநகரம் மாற்றம் குறித்து சிந்திக்கவில்லை. தலைமைச் செயலகத்தை, சென்னைக்கு வெளியே கொண்டு செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பிறகு, அதுவும் கைவிடப்பட்டது. தற்போது, கொரோனா தொற்று பரவல், தலைநகரம் மாற்றத்திற்கான அவசியத்தை, மீண்டும் உணர்த்தி உள்ளது.

தற்போது, சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு மட்டுமின்றி, போக்குவரத்து நெருக்கடி, மக்கள் தொகை பெருக்கம், நிலத்தடி நீர் மட்டம் குறைவு, சுற்றுச்சூழல் மாசு போன்றவை அதிகரித்துள்ளன. நிலத்தின் மதிப்பு கோடிகளை தொட்டு விட்டதால், நடுத்தர மக்களுக்கு சொந்த வீடு கனவாகி விட்டது.

சென்னையில் இடம் இல்லாததால், அருகில் உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், மக்கள் அதிக அளவில் குடியேறி வருகின்றனர். இதனால், சென்னையை சுற்றிய மாவட்டங்களிலும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.சென்னையில், குடிசைப்பகுதி என்றாலும் சரி, அடுக்கு மாடிகள் என்றாலும் சரி, வாடகை வீடுகளில் குடியிருப்போர், தாங்கள் பெறும் சம்பளத்தின் பெரும்பகுதியை, வாடகைக்கு செலவிட வேண்டியுள்ளது.

தொழிலாளர் முதல் அதிகாரிகள் வரை, வாழ்க்கையை நடத்த, திணறி வருகின்றனர். தற்போதே, இந்த நிலை என்றால், இன்னும், 10 அல்லது, 20 ஆண்டு களில் நிலைமை என்னவாகும் என, நினைத்து பார்க்க வேண்டும்; அதற்கேற்ப திட்டமிடல் அவசியம்.ஆந்திரா அடித்தளம்


இதுபோன்ற சூழலை உணர்ந்த ஆந்திர அரசு, மூன்று தலைநகரங்களை உருவாக்கும் திட்டத்தை அறிவித்து, செயல்படுத்த களமிறங்கி உள்ளது. கர்நாடகாவில், சில அரசு துறைகளின் தலைமையகத்தை, வடக்கு கர்நாடகா பகுதிகளுக்கு மாற்ற, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுபோன்ற திட்டமிடலை, தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தமிழகத்தின் தலைநகர் சென்னை என்பதில், எந்த மாற்றமும் வேண்டாம். அதற்கு இணையாக, இரண்டாம் தலைநகர் ஒன்றை உருவாக்க வேண்டும். இந்த தலைநகர், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மக்கள் எளிதாக வந்து செல்லும் மையப்பகுதியில் இருப்பது அவசியம்.இதற்கு, திருச்சியை விட, மதுரை சரியான தேர்வாக கருதப்படுகிறது. திருச்சியின் வளர்ச்சி வேகத்தை விட, மதுரையின் வளர்ச்சி தற்போது வேகமாக உள்ளது.

மதுரையில், சென்னை உயர் நீதிமன்றம் கிளை; சர்வதேச விமான நிலையம் ஆகியவை அமைந்துள்ளன. மத்திய அரசின் உயரிய, 'எய்ம்ஸ்' மருத்துவமனை கிளை, மதுரையில் அமைக்கப்படுகிறது. தென் மாவட்ட மக்களின் வசதிக்காக, இவையெல்லாம் மதுரையில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து, 150 கி.மீ.,ரில், துாத்துக்குடி துறைமுகம் அமைந்துள்ளது. தென் மாவட்டங்களை இணைக்கும் சாலை கட்டமைப்பு வசதிகளும் தேவைக்கேற்ப உள்ளன.

நிர்வாக நகரம் அமைக்க வேண்டும் என்றால், 10 ஆயிரம் ஏக்கர் வரை நிலம் தேவைப்படும். மதுரை புறநகர் பகுதியில், தேவையான நிலத்தை எளிதாக தேர்வு செய்யமுடியும்.எனவே, தமிழகத்தின் நிர்வாக நகரை மதுரையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

தென் மாவட்டங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும், எதிர்கால தேவை கருதியும், தமிழக அரசு இதற்கான முயற்சிகளை உடனடியாக துவக்க வேண்டும். அரசு சரியாக முடிவெடுத்தால், சென்னையில் நெருக்கடி நிலை குறையும்; மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களும் வேகமாக வளர்ச்சி பெறும் என்பதில் சந்தேகமில்லை.தலைநகரை மாற்ற வேண்டாம்!


தமிழகத்தின் தென் பகுதியில், 10 மாவட்டங்கள் உள்ளன. இங்கிருந்து தொழில், வேலைவாய்ப்பு, அரசுப்பணி என்று எதற்கெடுத்தாலும், சென்னை நோக்கி மக்கள் குடிபெயர்ந்த வண்ணம் உள்ளனர். ஒரு கோடி மக்கள் தொகை உள்ள சென்னையில், இன்னும் மக்கள் தொகை பெருகினால் தாங்காது. சென்னையில் இப்போது வளர்ச்சி என்பதை விட, 'வீக்கம்' தான் உள்ளது.

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்கள் வளர்ச்சி பெற, தொழில் வளம் பெருக, நிர்வாக ரீதியாக, சென்னையின் பளு குறைக்கப்பட வேண்டும்.சென்னையின் துறைமுக வசதிகளை கருத்தில் வைத்து, பெரிய தொழிற்சாலைகளை, தென் மாவட்ட பகுதியில் துவங்க நிறுவனங்கள் விரும்புவதில்லை. எனவே நிர்வாகத்தை பிரித்து, தென் மாவட்டத்திற்கு கொண்டு சென்றால், குறைந்தது, 20 சதவீத மக்களாவது சென்னையை விட்டு வெளியேறுவர்.

சென்னையில் இன்னும் புதிய தொழிற்சாலைகள் துவங்க முடியும். சென்னைக்கு வந்து செல்லும் மக்கள் பெருக்கத்தை பெருமளவு குறைத்தால், சென்னையில், சுற்றுப்புற மாவட்டங்களில், போக்குவரத்து நெரிசல் குறையும். சென்னையை இன்னும் வளர்க்க இயலும். தலைநகரை சென்னையை விட்டு மாற்ற வேண்டிய அவசியம் எழவில்லை; இரண்டாவது தலைநகராக, தென் மாவட்டங்களின் தலைநகர் என்று போற்றப்படும் மதுரையை மாற்றலாம்.

சட்டசபை, கவர்னர் மாளிகை போன்றவற்றை சென்னையில் இருக்குமாறு செய்து விட்டு, அரசின் துறைகளில் பாதியை மதுரைக்கு மாற்றி, அதற்கான செயலகங்களை அமைக்கலாம். கல்வி, பொதுப்பணி, விவசாயம், கால்நடைத் துறை, கூட்டுறவு, அறநிலையத் துறை என, பல்வேறு துறைகளின் தலைமை அலுவலகங்களை இரண்டாவது தலைநகருக்கு மாற்றலாம்.

தமிழகத்திற்கான மத்திய அரசின் தலைமை அலுவலகங்கள் அனைத்தும் சென்னையிலேயே உள்ளன. மதுரையை இரண்டாவது தலைநகர் ஆக்கினால், அதில் கணிசமான அலுவலகங்களை மதுரைக்கு மாற்ற முடியும்.இது புதுசு அல்ல!


ஒரு மாநிலத்திற்கு, இரண்டு தலைநகர் என்பது புதிதல்ல. ஜம்மு - காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது, இரண்டு தலைநகர் இருந்தது. குஜராத்தில் அருகருகே இருந்தாலும் காந்திநகரில் பாதியும், அகமதாபாத்தில் பாதியும் என, அரசு அலுவலகங்கள் உள்ளன. ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் அமைய உள்ளன. தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில், மூன்று தலைநகரங்கள் உள்ளன. பல வெளிநாடுகளில் இரு தலைநகரங்கள் உள்ளன.மதுரையில் இருக்கு எல்லா வசதிகளும்!


தமிழகத்தின் இரண்டாம் தலைநகராகும் அனைத்து தகுதிகளும், வசதிகளும் மதுரையில் உள்ளன. அரசு அலுவலகங்கள் அமைக்க தேவையான, இட வசதி உள்ளது.விமான நிலையம், ரயில், சாலை போக்குவரத்து வசதிகள் சிறப்பாக உள்ளன. கப்பலுாரில் சாட்டிலைட் சிட்டி அமைய உள்ளது.

மதுரையில் இருந்து துாத்துக்குடி துறைமுகத்திற்கு நான்கு வழிச்சாலை உள்ளது.திருச்சி முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்கள் வந்து செல்ல வசதியான இடமாக மதுரை அமைந்திருக்கிறது. புதிய இரண்டாவது நிர்வாக தலைநகரை உருவாக்க மதுரையில் இடமுள்ளதா என்ற கேள்வி எழும்.

பாரம்பரிய மதுரை நகருக்குள் நெரிசலாக அலுவலகங்களை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை; மாறாக மலேஷியாவில் புத்ரஜெயா என்ற தனித் தலைநகரை உருவாக்கியது போல, மதுரை அருகே புதிய நகரை உருவாக்கலாம். மதுரை - காரைக்குடி சாலை; மதுரை - மேலுார் சாலை; மதுரை - விருதுநகர்; மதுரை - அருப்புக்கோட்டை சாலையில், அரசுக்கு சொந்தமான, பல்லாயிரம் ஏக்கர் புறம்போக்கு தரிசு நிலங்கள் உள்ளன. எனவே, நிலம் எடுப்பு பிரச்னையும் இல்லை.

மாவட்டத்தில் கிழக்கு மற்றும் மேலுார் தாலுகாவிற்கு உட்பட்ட திருமோகூரிலிருந்து, திருவாதவூர் வரை ஏராளமான இடங்கள் உள்ளன. அரசு அலுவலகங்களை இங்கு அமைத்தால், குடியிருப்புகள் பெருகும். மதுரை மாநகரும் விரிவடையும்.மதுரையில், இரண்டாவது தலைநகர் என்பது, தென் மாவட்டங்களின் வளர்ச்சியோடு, ஒட்டுமொத்த தமிழக வளர்ச்சிக்கும் காரணமாகி விடும் என்பதே உண்மை.அமைச்சர்கள் அலைய வேண்டாம்!


அமைச்சர்கள் எல்லாம் சென்னையில் இருந்தால் தான் நிர்வாகம் நடக்கும் என்ப தில்லை. ஐந்து மாதங்களாக பல அமைச்சர்கள், அவர்களின் சொந்த ஊரில் இருந்த போதும், துறை நிர்வாகங்கள் நடக்கவில்லையா...எனவே, அரசுத் துறைகள் பாதி மதுரையில் அமைக்கப்பட்டால் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், பொதுமக்கள், கன்னியாகுமரி முதல் சென்னை வரை, அங்குமிங்குமாக அலைய வேண்டிய அவசியம் இல்லைநிபுணர்களின் எதிர்பார்ப்பும் மதுரைதான்!
பொருளாதார வளர்ச்சி ஏற்படும்


* எஸ்.ரத்தினவேலு, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் :தென் தமிழகத்தின் தலைநகராக விளங்கும் மதுரையை, மற்றொரு தலைநகராக அறிவிக்க வேண்டும் என, தொழில் வர்த்தக சங்கம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. ஏற்கனவே உயர் நீதிமன்ற கிளை மதுரையில் அமைய வேண்டும் என, அதற்காக அமைக்கப்பட்ட ஜஸ்வந்த்சிங் கமிட்டியிடம், நான் சாட்சியமளித்திருக்கிறேன். அதன்படி உயர் நீதிமன்ற கிளை, 2004 முதல் மதுரையில் செயல்பட துவங்கியது.

உயர் நீதிமன்ற கிளை வரம்புக்குள், மதுரை உள்ளிட்ட, 13 தென்மாவட்டங்கள் வருகின்றன. இந்த மாவட்டங்களில், 2.40 கோடி மக்கள் உள்ளனர். தமிழகத்தின் மூன்றில் ஒரு பங்கினர், இந்த மாவட்டங்களில் உள்ளனர். பாண்டிய மன்னர்கள் காலத்தில், மதுரை தலைநகராக விளங்கியிருக்கிறது. 2500 ஆண்டுகள் பழமை, தொன்மை வாய்ந்த நகரம் மதுரை. புயல், சுனாமி, புகம்பம் போன்ற இயற்கை இடர்பாடுகளுக்கு அப்பாற்பட்டதாக மதுரை விளங்குகிறது. மதுரையில், தகவல் தொழில் நுட்பங்களை ஆவணப்படுத்த முடியும்.

சென்னைக்கு அடுத்தபடியாக, தலைநகராக மதுரையை உருவாக்க வேண்டும். தொழில் வளர்ச்சியை பொறுத்தவரை, தென்தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது என, சமீபத்தில் மதுரை வந்த முதல்வர் இ.பி.எஸ்.,சிடமும் சுட்டிகாட்டியிருக்கிறோம். தலைநகராக மதுரை மேம்பாடு அடைந்தால்,தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி சீராகும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.அடிப்படை கட்டமைப்புகள் உள்ளன


* கே.திருப்பதிராஜன், தொழில், வர்த்தக மைய ஏற்றுமதி மேம்பாட்டு மைய தலைவர்: மதுரையில் அடிப்படை கட்டமைப்பு வசதியுள்ளது. மதுரையில் இருந்து, வெளிநாடுகளுக்கு சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன. குடிநீர் வசதி உள்ளது. பெரியாறு அணையிலிருந்து குழாய்கள் வழியாக குடிநீர் கொண்டு வரப்படவுள்ளது. மாநிலத்தின் வட மூலையில் சென்னை உள்ளது. திருச்சி முதல் கன்னியாகுமரி வரை, தென் மாவட்டங்களில் இருந்து எளிதாக மதுரையை அடையலாம்.

மதுரையை தலைநகராக மாற்றுவதன் வாயிலாக, சென்னையில் நெருக்கடி தவிர்க்கப்படும். தற்போது எல்லா தொழிற்சாலைகளும் சென்னை தலைநகராக இருப்பதால் அதை சுற்றியே அமைகின்றன. மக்களும் அங்கு குடிபெயர்வதால் நெருக்கடி நிலவுகிறது. அதை தவிர்க்க தலைநகரத்தை பிரிப்பதில் தவறில்லை. எல்லா மாவட்டங்களிலும், சமச்சீர் வளர்ச்சி ஏற்பட தலைநகரங்களை பிரித்து வைப்பதில் தவறவில்லை. மற்றொரு தலைநகராக்க மதுரையை தவிர வேறு நகரங்கள் இருப்பதாக தெரியவில்லை.அதிகார பரவல் தேவை


* டாக்டர் எஸ்.ராமகுரு, ஓய்வுபெற்ற டீன், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை:தமிழகத்தின் அதிகாரமையமாக சென்னை உள்ளது. தற்போதைய கொரோனா காலத்தில், அவசரம் கருதி கூட மற்ற மாவட்டங்களில் இருந்து, சென்னைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், 'இ - பாஸ்' கிடைப்பதில் சிரமம், ரயில், பஸ் போக்குவரத்து இல்லாதவற்றால் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

தற்போது, சென்னைக்கு நிகராக மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களை கொண்டு வரவேண்டியது காலத்தின் கட்டாயம். குறிப்பாக, வருவாய்த் துறை, காவல் துறையில் உள்ளவர்கள் தினமும் முறைவைத்து, சென்னைக்கு பயணிப்பதை பார்க்கிறேன். எனவே, தென்மாவட்டத்தினர் மதுரைக்கு வந்துசென்றால், ஒரே நாளில் பணியை முடித்துக்கொண்டு ஊர் திரும்பிவிடலாம். இதைப்போலத்தான், கிழக்கு மாவட்டத்தினருக்கு திருச்சியும், மேற்கு மாவட்டத்தினருக்கு கோவையும் உள்ளன.

அதற்கு சிறந்த உதாரணம் மதுரையில் உயர் நீதிமன்ற கிளை உருவாகியிருப்பதுதான். இதைப்போல சுகாதாரத்துறையில், அனைத்திற்கும் சென்னையின் முடிவிற்காக காத்திருக்க வேண்டியுள்ளது. இத்தகைய அதிகார பரவலால், மற்ற மாவட்டங்கள் வளர்ச்சிபெறும்; காலதாமதம் தவிர்க்கப்படும்எல்லாம் சென்னையில் குவியுது


* எஸ்.ஆர்.ஸ்ரீராம், தலைவர், கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கம்:தமிழகத்துக்கு இரண்டாவது தலைநகரம் என்பது முக்கிய தேவையாக மாறி விட்டது. எல்லா அலுவலகங்களும் சென்னையில் குவிந்து கிடக்கிறது. ஒவ்வொரு தேவைக்கும் தென் மாவட்ட மக்கள், ஒவ்வொரு முறையும் நீண்ட பயணம் செல்ல வேண்டியுள்ளது. நேர விரயம், சிரமங்கள் இதனால் ஏற்படுகிறது.

சென்னையில் தொழில்களுக்காக மக்கள் குவிந்து கிடக்கின்றனர். இதனால் இடப்பற்றாக்குறை, குடிநீர் பற்றாக்குறை போன்றவை, சென்னையில் பெரிதாக உள்ளது. குறிப்பாக, எவ்வளவு மக்கள் இருக்க முடியுமோ, அதை விட, 10 மடங்கு மக்கள் கூடுதலாக உள்ளனர். அதனால்தான் அங்கு கொரோனா வேகமாக பரவியது. அரசு அலுவலர்கள் சென்னையிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. குமரி மாவட்ட மக்கள், 700 கி.மீ., பயணம் செய்ய வேண்டி உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். கொரோனா இப்போது நமக்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளது. இடைவெளி எல்லாவற்றுக்கும் நல்லது என்பதை உணர்ந்துள்ளோம்.

இரண்டாவது தலைநகரம் கட்டாயமாகியுள்ளது. அதற்கு சரியான இடம் மதுரை. இது, தென் மாவட்டங்களின் மையப்பகுதி. இங்கு அலுவலகங்கள் கட்டவும், தொழிற்சாலை தொடங்கவும் போதுமான இடங்களும், கட்டமைப்பும் உள்ளது மட்டுமல்ல, 15-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் சுலபமாக, ஒரே நாளில் மதுரை சென்று காரியங்களை முடித்து வீடு திரும்ப முடியும்.

- நமது நிருபர் குழு -

Advertisement
வாசகர் கருத்து (158)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay - Bangalore,இந்தியா
21-ஆக-202014:55:21 IST Report Abuse
Vijay சும்மா வளர்ச்சி வளர்ச்சி னு கருத்து போடுறவங்க எந்த மாதிரி வளர்ச்சி என்று சேர்த்து கூறினால் நல்லாயிருக்கும் .. 5 ஆயிரம் வாடகை 10 ஆயிரம் ஆகும் .. வேற ஒன்னும் ஆக போறது இல்லை ..
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
18-ஆக-202011:45:02 IST Report Abuse
oce தர்மவான்கள் சென்னையில் அதிகம். கெட்டு பட்டணம் சேர் என்று சொன்னார்கள். ஒட்டு மொத்த தமிழகத்தின் மலர்ந்த அழகிய முகமே சென்னை பட்டினம். அதன் முக்கியத்துவம் இழந்தால் தமிழகம் களை இழந்து விடும்.டெல்லியின் நெருக்கம் மதுரை வரை எட்டாது.
Rate this:
Cancel
Suresh - Narita,ஜப்பான்
18-ஆக-202010:54:55 IST Report Abuse
Suresh நிர்வாக வசதிக்காக தினம் ஒரு மாவட்டமாக பிரிப்பது சரி என்றால், அதே வசதிக்காக பல சிறு மாநிலங்களாக பிரிப்பது என்ன தவறு. நாடெங்கும் வளர்ச்சி சீராக இருக்கும் அல்லவா?. எமோஷனல் ஆகா பார்த்ததால் தவறாக தெரியலாம், மற்றபடி பொது மக்கள் வசதி என்று பார்த்தால் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
21-ஆக-202014:53:08 IST Report Abuse
Vijayஅப்படிவாது சுடலை எதாவது ஒரு மாநிலத்துக்கு முதல்வர் ஆகா வாய்ப்பு இருக்கா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X