பண்ருட்டி : தமிழக அமைச்சர் சம்பத் பெயரை கூறி, மோசடி செய்து, கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் மீது பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 48; தொழில்துறை அமைச்சர் சம்பத்தின் உதவியாளராக உள்ளார்.இவரை, கடந்த 4ம் தேதி, கடலுாரில் உள்ள தனியார் கம்பெனி நிர்வாக இயக்குனரின் உதவியாளர் தொடர்பு கொண்டு, 'திட்டக்குடிக்கு வழங்குவதற்காக அமைச்சர் சம்பத் கேட்டிருந்த 5000 முககவசங்கள் தயாராக உள்ளது' என்றார்.'அமைச்சர் யாரிடமும் முக கவசம் கேட்டிருக்க மாட்டார்' என செந்தில்குமார் கூறினார்.
அதனால், முக கவசம் கேட்டு தொடர்பு கொண்ட நபரின் தொலைபேசி எண்ணை, அவரிடம் தெரிவித்தனர்.செந்தில்குமார் அந்த எண்ணிற்கு பேசியபோது, அமைச்சர் சம்பத் பேசுவதாக கூறினார். அவரிடம், அமைச்சர் குரலாக இல்லையே என கூறியதற்கு, 'நீங்கள் யார்' என்றார். 'அமைச்சர் உதவியாளர் பேசுகிறேன்' என கூறிய செந்தில்குமாரை, அந்த நபர் ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதே நபர், நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை, கடலுார் தனியார் மருத்துவமனை ஆகிய இடங்களில் அமைச்சர் பேசுவதாக கூறி, முக கவசம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் உதவியாளர் செந்தில்குமார், நேற்று முன்தினம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ்விடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் வழக்கு பதிந்து, விசாரித்து வருகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE