உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில், கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்ட நபர் பள்ளி வாசல் இமாம் என தெரிய வந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அருகே பெரியப்பட்டு ஏரி உள்ளது. அங்கு நேற்று முன்தினம் மாலை, அடையாளம் தெரியாத நபர், கைகள் கட்டப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் வழக்குப் பதிந்து, இறந்தவர் யார் என விசாரணை நடத்தினர்.அதில், கொலை செய்யப்பட்டவர், கடலுார் மாவட்டம், பண்ருட்டி ரகமத் நகரைச் சேர்ந்த முகமது பராக் மகன் சதாம் உசேன், 33; என தெரியவந்தது. இவர், பீஹார் மாநிலத்தில் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன் பண்ருட்டிக்கு வந்தவர் அங்கு, ஆர்.எஸ்.சம்சுதீன் பள்ளி வாசலில் இமாமாக இருந்துள்ளார்.
இவரை கடந்த 13ம் தேதி இரவு முதல் காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், பெரியப்பட்டு ஏரியில் கொலை செய்யப்பட்டுள்ளார்.இறந்த சதாம் உசேனுக்கு மனைவி ஷல்பா பானு, 25; மகன்கள் யாகூப், 7; அப்துல், 3; மகள் ஆசியாபானு, 5; ஆகியோர் உள்ளனர்.இதற்கிடையே எஸ்.பி., ஜியாவுல் ஹக் நேற்று மதியம் சதாம் உசேன் கொலை செய்யப்பட்டு கிடந்த ஏரியை பார்வையிட்டார். தொடர்ந்து திருநாவலுார் போலீஸ் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டார்.
டி.எஸ்.பி., விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கொலையாளி யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.உடலை வாங்க மறுப்புவிழுப்புரம், முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சதாம் உசேன் உடல், நேற்று மாலை 5:15 மணிக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர் களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.கொலையாளியை கைது செய்யாதவரை உடலை வாங்க மாட்டோம் என, சதாம் உசேனின் உறவினர்கள் மறுத்தனர். போலீசார் பேச்சு நடத்தியும் சமரசம் ஆகாமல், உடலை வாங்காமல் சென்றனர்.