சட்டம் - ஒழுங்கை காக்கும் பணியில் ஈடுபடும் காவல் துறையினர், சில சமயங்களில் உயிர் தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாதது. குற்றவாளிகளுடனான சண்டையின் போது, சில சமயங்களில், இத்தகைய தியாகம் ஏற்படுகிறது.கடந்த சில மாதங்களாக, ஊரடங்கை முறையாக அமல்படுத்தும் பணியில், இரவு - பகல் பாராமல் பணியாற்றிய காவல் துறையினர் சிலர், கொரோனாவுக்கு பலியாகி, உயிர் தியாகம் செய்துள்ளனர்.மன உளைச்சல்ஆயிரக்கணக்கான காவல் துறையினர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சூழலில், காவல் துறையினர் சிலர், தற்கொலை செய்து கொள்கின்றனர். அதற்கு, அளவுக்கு அதிகமான வேலைப்பளுவும், அதைத் தொடர்ந்து ஏற்படும் மன உளைச்சலும் தான் காரணம் என, பொதுவாகக் கூறப்படுவது உண்டு.காவல் துறையில் பணியில் சேர, தேர்வு செய்யப்பட்டோருக்கு, அவர்களது பணிக்கேற்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. எனினும், பணியின் போது, சமூகத்தின் பண்புகள் அதிக அளவில் வெளிப்படும் நிலையைக் காண முடிகிறது.காவல் துறையினருக்கு வழங்கப்படும் பயிற்சிகளில் ஏற்பட்டுள்ள தொய்வு, இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
எனினும், இன்றைய கணினி உலகில், தான் அடைய விரும்பும் வாழ்க்கையின் உச்சத்தை, மிக விரைவில் எப்படியாவது அடைய வேண்டும் என்ற உந்துதல் பலருக்கு இருக்கிறது. அந்த எண்ணம், காவல் துறையில் சிலருக்கு இருப்பதே, தற்கொலையை நோக்கி, அவர்களை பயணிக்க வைத்து விடுகிறது. வரலாற்று ஏடுகளை புரட்டிப் பார்க்கும் போது, இயற்கைக்கு மாறான மரணங்களை, மனித சமூகம் தழுவியதற்கான சான்றுகள் தென்படுகின்றன. அந்த மரணங்கள் தோல்வி பயத்தாலோ அல்லது வாழ்க்கை சிக்கல்களை எதிர்கொள்ள முடியாத சூழல் காரணமாகவோ நிகழ்ந்ததாக கருத முடியாது. நியாயத்தை நிலைநாட்டுவதற்காகவோ அல்லது தன்மானத்தை காத்து கொள்வதற்காகவோ, அம்மாதிரியான மரணங்கள் ஏற்பட்டுள்ளன. புராண வாழ்க்கையில் வாழ்ந்தவர்கள் கூட, 'வடக்கிருந்து உயிர் நீத்த' சம்பவங்களையும் வரலாறு உணர்த்துகிறது.கோவலனுக்கு அநீதி இழைத்து விட்டதை உணர்ந்த பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், தன்னுயிரை மாய்த்துக் கொண்டான்.
'கணவனை இழந்தோருக்கு காட்டுவது இல்' என்று கூறி, பாண்டிய நாட்டு அரசி பாண்டியமாதேவியும், அரசவையிலேயே தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள். இவையும், இயற்கைக்கு மாறான மரணங்கள் தான்.தான் பெற்றெடுத்த, ஏழு குழந்தைகளை கிணற்றில் போட்டு, தானும் கிணற்றில் குதித்து உயிர் துறந்த நல்லதங்காள் செய்த செயலும், இயற்கைக்கு மாறான மரணம் தான்.ஆனால், அந்த மரணங்களை, வாழ்க்கையில் ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்ள முடியாமல் உயிரை மாய்த்துக் கொண்ட தற்கொலைகளாகப் பார்க்க முடியாது. அந்த மரணங்கள், நீதியின் வெளிப்பாடுகளாகும்.காலப்போக்கில், வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களும், நகரமயமாக்கலும், அதைத் தொடர்ந்து சமூகத்தில் நிலவி வரும் பொருளாதாரத்தின் ஆதிக்கமும், வாழ்வில் ஏற்படும் சிக்கலான பிரச்னைகளை எதிர்கொள்ளும் சக்தியை, பெரும்பாலானோரிடம் இழக்கச் செய்துவிட்டது.தற்கொலை தான், அம்மாதிரியான பிரச்னைகளுக்கான தீர்வு என்ற உணர்வை சமூகத்தில் ஊடுருவச் செய்துவிட்டது. அதன் விளைவு தான், இன்றைய சமுதாயம், தினம் சந்தித்து வரும் தற்கொலை நிகழ்வுகளாகும்.உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி, ஆண்டுதோறும் உலக நாடுகளில், எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதாவது, ஒவ்வொரு, 40 வினாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்கிறார். இவர்களின் எண்ணிக்கை போல, 20 மடங்கிற்கும் அதிகமானோர், தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
அதாவது, உலகில், ஆண்டுதோறும், 1.60 கோடிக்கும் மேற்பட்டோர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர் என, உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது.இந்தியாவின் நிலைஉலக நாடுகளிலேயே, அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் நிகழும் நாடாக, இந்தியா விளங்குவதோடு, உலக நாடுகளில் நிகழும் தற்கொலை நிகழ்வுகளில், நான்கில் ஒரு பங்கு, இந்தியாவில் நிகழ்கின்றன. தென் கிழக்கு ஆசிய நாடுகளின், 'தற்கொலை தலைநகரம்' எனவும், இந்தியா அழைக்கப்படுகிறது.இந்தியாவைப் பொறுத்தமட்டில், தற்கொலை நிகழ்வுகளில், மஹாராஷ்டிர மாநிலத்திற்கு அடுத்து, இரண்டாவது இடம் பிடிக்கும் தமிழகத்தில், 13 ஆயிரத்து, 896 தற்கொலைகள், 2018ல் நிகழ்ந்துள்ளன.
மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ள இன்றைய கணினி உலகில், முறையான பயிற்சி பெற்ற, நம் நாட்டை பாதுகாக்கும் முப்படைகள் மற்றும் காவல் துறையில், தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை கணிசமாகவே இருக்கிறது.தேசத்தைப் பாதுகாக்கும் ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் பணியாற்றுவோரில், 891 பேர், 2011 முதல், 2018 வரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குறிப்பாக, ராணுவத்தில் மட்டும், 707 பேர் தற்கொலை செய்து கொண்டுஉள்ளனர்.கடந்த, 2014 முதல், 2018 வரை, ஆயுதம் ஏந்திய மத்திய போலீஸ் பிரிவுகளைச் சேர்ந்த, 397 பேர், தற்கொலை செய்து உள்ளனர். 2010 முதல், 2014 வரை, தமிழக காவல் துறையைச் சார்ந்த, 166 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
மாணவர்களின் நிலைமாணவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்துக் கொள்ளும் நிலை, நம் நாட்டில் தொடர்கிறது. தேசிய குற்ற ஆவணக்கூட அறிக்கையின்படி, 2018ல், 10 ஆயிரத்து, ௧59 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். தமிழகத்தில், 953 மாணவர்கள், 2018ல் தற்கொலை செய்து, அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தற்கொலை செய்த மாநிலங்கள் பட்டியலில், இரண்டாவது இடத்தை, நம் மாநிலம் பிடித்துள்ளது.ஐ.ஐ.டி., உள்ளிட்ட, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களில் சிலரும், தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் தொடர்கின்றன.சிறுவர் - சிறுமியரும் தற்கொலையை நாடிச் சென்று, உயிரை மாய்த்துக் கொள்வதை, உலக நாடுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு உணர்த்துகிறது. 10 முதல், 14 வயது உடைய, 9,368 சிறுவர் - சிறுமியர், 2016ல், தற்கொலை செய்து இறந்துள்ளனர்.அதே ஆண்டில், 15 முதல், 19 வயதுடைய, 52 ஆயிரத்து, 750, வளரும் இளம் பருவத்தினரும் தற்கொலை செய்துள்ளனர். அப்படி தற்கொலை செய்த வளரும் இளம் பருவத்தினரில், 40 சதவீதத்திற்கும் சற்று அதிகமானோர், பெண் குழந்தைகள் என்பது வேதனை அளிப்பதோடு, அதற்கான காரணங்களையும் ஆராயத் துாண்டுகிறது.
காரணங்கள்
பெற்றோர் அரவணைப்பின்மை, கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இன்மை, கூடா நட்பும், அதன் தொடர்ச்சியாக ஏற்படும் போதைப் பொருட்களை பயன்படுத்தும் பழக்கமும், தற்கொலைக்கான காரணங்களாக சொல்லலாம்.மேலும், சமீப காலங்களில், இளம் பருவத்தினர் இடையே இணையதளம் மூலம் ஊடுருவும், 'நீலத் திமிங்கல சவால்கள்' போன்ற வீடியோ விளையாட்டுகளும் காரணங்களில் சேர்கின்றன.ஏழ்மை, வேலைவாய்ப்பு இன்மை, அன்பானவர்களின் இழப்பு, தன்மானத்திற்கு ஏற்படும் இழுக்கு, சமூக ஏற்றத்தாழ்வு, தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத மனநிலை, வாழ்வின் சோதனையான காலங்கள் போன்ற காரணங்கள், ஆரோக்கியமான நபர்களையும், தற்கொலையை நோக்கி நகர்த்தி சென்று விடுகின்றன.தற்கொலை முயற்சியில் ஈடுபடும் செயல், நம் நாட்டில், இந்திய தண்டனை சட்டப்பிரிவு, 309ன் கீழ் குற்றமாகக் கருதப்பட்டு வந்தது. அக்குற்றச் செயல் புரிந்தோருக்கு, நீதிமன்றத்தால் விசாரணைக்கு பின், ஓராண்டு வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் வழங்கப்படும்.ஆனால், தற்கொலை முயற்சியைத் தண்டனைக்குரிய குற்றச் செயலாகக் கருதக்கூடாது என்ற நிலையை நோக்கி, நம் சமூகம் பயணிக்கத் துவங்கிவிட்டது.வாழ்க்கை மீது நம்பிக்கை கொண்டு செயல்படுவது, தோல்வியை கண்டு பயப்படாமல் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்வது, சிறந்த நண்பர்களை அடையாளம் கண்டு கொள்வது, தரமான நுால்களை வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வது...மனம் விட்டு பேசும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது, போதையூட்டும் பொருட்களைத் தவிர்த்து விடுவது, உடற்பயிற்சியில் ஈடுபடுவது போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே, தற்கொலை தடுப்பு தினத்தின் அறைகூவலாகும்.எத்தகைய சூழலிலும், விலங்குகள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதில்லை. ஆனால், சிந்தித்துப் பார்த்து பகுத்தாய்வு செய்யும் திறன் கொண்ட மனிதர்கள் மட்டும் தான், வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள முடியாமல், தற்கொலை செய்து கொள்கின்றனர்.அத்தகைய செயல் மனிதப் பண்பாகாது என்ற உணர்வை, வயது வித்தியாசமின்றி சிறுவர் முதல் பெரியவர் வரை கொண்டு சேர்க்க வேண்டிய தருணம் இது.தொடர்புக்கு:94890 00111 பெ.கண்ணப்பன் ஐ.பி.எஸ்.,ஓய்வுபெற்ற ஐ.ஜி.,