சென்னை : மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் பா.ஜ.வுக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாத நிலை உள்ளது.
வரும் தேர்தலில் 25 எம்.எல்.ஏ.க்களையாவது சட்டசபைக்கு அனுப்புவது என கட்சி தலைமை இலக்கு நிர்ணயித்துள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ளதால் இலக்கை அடையும் நோக்கில் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை பா.ஜ. துவக்கி உள்ளது.
இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் 65 ஆயிரம் ஓட்டுச் சாவடிகள் உள்ளன. இவற்றில் 50 ஆயிரம் ஓட்டுச் சாவடிகளில் சாவடிக்கு 40 பேர் கொண்ட குழுவை கட்சி நியமித்துள்ளது.மீதமுள்ள ஓட்டுச் சாவடிகளிலும் குழு அமைக்கும் பணி நடந்து வருகிறது. செவ்வாய்கிழமை தோறும் ஒவ்வொரு கிளை கூட்டமும் நடத்தப்பட வேண்டும்.

இக்கூட்டத்தில் மாநில தலைவர் உட்பட அனைத்து நிர்வாகிகளும் தங்களுக்கு ஓட்டு உள்ள கிளை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். கூட்டத்தில் அந்த ஓட்டுச் சாவடியில் உள்ள வாக்காளர்கள் குறித்த விபரங்களை சேகரிக்க வேண்டும். தினமும் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று மத்திய அரசு செயல்படுத்தி உள்ள மக்கள் நல திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும்.
ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும் குறைந்தது 250 பேரை கட்சி ஆதரவாளர்களாக மாற்ற வேண்டும் என நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கட்சி நிர்வாகிகள் கூறினர்.