இதுவரை ஆளுங்கட்சி கோட்டை இனிமேல் விழுந்துருமோ ஓட்டை!| Dinamalar

இதுவரை ஆளுங்கட்சி கோட்டை இனிமேல் விழுந்துருமோ ஓட்டை!

Added : ஆக 18, 2020
Share
கா ந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் முன், தி.மு.க.,வினர் திரளாக கூடியிருந்தனர். அவ்வழியாக சென்ற சித்ரா, ஸ்கூட்டரை ஓரங்கட்டினாள்.''என்னக்கா, ஏதாச்சும் விசேஷமுங்களா, ஏகப்பட்ட உடன்பிறப்புகள் நிக்குறாங்களே,'' என, கிளற ஆரம்பித்தாள்.''கோவை மாவட்ட தி.மு.க.,வுக்கு நியமிச்சிருக்கிற, புது நிர்வாகிகள், மலர் மாலை போடுறதுக்கு வர்றாங்களாம்,'' என்று, சித்ரா சொல்லி முடிப்பதற்குள், சொகுசு
 இதுவரை ஆளுங்கட்சி கோட்டை  இனிமேல் விழுந்துருமோ ஓட்டை!

கா ந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் முன், தி.மு.க.,வினர் திரளாக கூடியிருந்தனர். அவ்வழியாக சென்ற சித்ரா, ஸ்கூட்டரை ஓரங்கட்டினாள்.''என்னக்கா, ஏதாச்சும் விசேஷமுங்களா, ஏகப்பட்ட உடன்பிறப்புகள் நிக்குறாங்களே,'' என, கிளற ஆரம்பித்தாள்.''கோவை மாவட்ட தி.மு.க.,வுக்கு நியமிச்சிருக்கிற, புது நிர்வாகிகள், மலர் மாலை போடுறதுக்கு வர்றாங்களாம்,'' என்று, சித்ரா சொல்லி முடிப்பதற்குள், சொகுசு கார்களில் வந்திறங்கினர்.ஈ.வே.ராமசாமி, அண்ணா துரை சிலைக்கு மாலை அணிவித்து, கருணாநிதி படத்துக்கு மலர் துாவி, மரியாதை செலுத்தி விட்டு, கட்சி அலுவலகத்தை நோக்கி விரைந்தனர்.''உடன்பிறப்புகளிடம் இருக்குற உற்சாகத்தை பார்த்தால், வரப்போற சட்டசபை தேர்தலில், போட்டி கடுமையா இருக்கும் போலிருக்கே,''''ஆமா மித்து, இனி, கொங்கு மண்டலம் அ.தி.மு.க., கோட்டைன்னு சொல்றது கஷ்டமா இருக்கும் போலிருக்கு. தி.மு.க.,வுல உள்ளடி வேலை செய்றதை பத்தி தெரிஞ்சதும், 'மாஜி' அமைச்சர் நேருவை அனுப்பி, விசாரணை நடத்தி, இரண்டு தொகுதிக்கு ஒரு செயலாளர் வீதம், அஞ்சு பேரை நியமிச்சிருக்காங்க,''''ஆளுங்கட்சியில் கோலாச்சிட்டு இருக்கும் ஜாதியை சேர்ந்தவங்களை, தி.மு.க.,வுல ஓரங்கட்டி வச்சிருந்தாங்கங்கிற பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வச்சிருக்காங்க,''''இருந்தாலும், 'பசை'யுள்ளவங்களுக்குதானே பதவி கொடுத்திருக்காங்க,''''என்னப்பா, இப்படிச் சொல்லிட்டே. எலக்சன்ல கோடிக்கணக்குல செலவு செய்ய வேண்டாமா? அதனால, 'ரியல் எஸ்டேட்' செய்ற ரெண்டு பேரை நியமிச்சிருக்காங்க. இவுங்க ரெண்டு பேரின் செயல்பாடுகளையும் ஆரம்பத்திலேயே முடக்குறதுக்காக, ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்கு வேண்டப்பட்டவங்க, தொழில்ரீதியா இருந்த பிரச்னைக்கு ஆளுங்கட்சி தரப்புல உதவி செஞ்சிருக்காங்கன்னு கெளப்பி விட்டிருக்காங்க,''''தி.மு.க.,வுல இருக்குற முக்கிய நிர்வாகிதான், இப்படி உள்ளடி வேலை செய்றாராம். அவருக்கும், ஆளுங்கட்சிக்கும் உறவு இருக்கறது, வெளியே தெரியாம இருக்கறதுக்காக, அடுத்தவங்க மேல புகார்களை அள்ளி வீசுறாராம். இதையெல்லாம் கட்சி தலைமை ஏற்கனவே கண்டுபிடிச்சு வச்சிருக்கிறதுனால, 2021 எலக்சன்ல தொகுதி கொடுக்குறது, கஷ்டம்னு சொல்றாங்க,''''அதெல்லாம் சரி, ஆளுங்கட்சி கோட்டையில் ஓட்டை விழும்னு சொன்னீங்களே, அதுக்கெல்லாம் வாய்ப்பிருக்கா.''மித்து, கொஞ்சம் யோசிச்சுப்பாரு! கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு, ஸ்டாலின் வந்தப்ப, பொள்ளாச்சிக்கு போற வழியில், தொண்டாமுத்துாரிலும், குனியமுத்துாரிலும் கொஞ்ச நேரம் பிரசாரம் செஞ்சாரு. அ.தி.மு.க.,வை விட, 10 ஆயிரம் ஓட்டு, தி.மு.க., அதிகமா வாங்குச்சு,''''தொகுதிக்குள்ள கோடியா கோடியா கொட்டி, செலவு செஞ்சிருந்தும், ஓட்டு வங்கி குறைஞ்சதுனால, வி.ஐ.பி.,யே தொகுதி மாறப்போறதா சொல்றாங்க. வடக்கு தொகுதியில் வடவள்ளிக்காரரோ அல்லது அவரது மனைவியோ வேட்பாளருன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க,''''யாரு நின்னாலும், ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம்னு, உளவுத்துறை ரிப்போர்ட் போயிருக்கு. அதனால, பூத் வாரியாக லிஸ்ட் ரெடி பண்ணிட்டு இருக்காங்க. வீடு வீடா போயி, ஒரு டீம் கணக்கெடுத்துட்டு இருக்கு. கரன்சியை தட்டி விட்டு, ஓட்டுகளை அள்ளுறதுக்கு ஐடியா வச்சிருக்காங்களாம்; ஓட்டுக்கு அஞ்சாயிரம் வரைக்கும் செலவழிக்க, சிலர் தயாரா இருக்காங்களாம்''''ஓ... அப்படியா,'' என்ற மித்ரா, ''ஆளுங்கட்சியில் அதிருப்தியில இருக்குற எம்.எல்.ஏ.,வும், வி.ஐ.பி., மூவ்ல, ஆடிப்போயிட்டாராமே,'' என, கேட்டாள்.''அதுவா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, புது நிர்வாகிகளை சென்னைக்கு அழைச்சிட்டுப் போயி, இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்.,சை நேரில் சந்திக்க வச்சு, பொக்கே கொடுக்க வச்சாரு. அதுக்கு கூட, அதிருப்தி எம்.எல்.ஏ., போகலை.''இனியும் இதே மாதிரி இருந்தால், மாவட்ட செயலாளர் பொறுப்பையே வேறொருத்தருக்கு கொடுத்திடுவோம்; தொகுதியும் கெடைக்கறதுக்கு வாய்ப்பில்லைன்னு சொல்லிட்டாராம். எம்.எல்.ஏ., தரப்பு ஆடிப்போயிருச்சாம். இப்ப, வி.ஐ.பி.,யை சமாதானப்படுத்துற முயற்சியில், ஈடுபட்டு இருக்காங்களாம்,'' என்றபடி, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.பின் இருக்கையில் அமர்ந்த மித்ரா, அப்பகுதியில் இருந்த மதுக்கடையை பார்த்ததும், ''அக்கா, ஊரடங்கு சமயத்தில், மதுபானங்களை முறைகேடா விக்கிறது, ஜாஸ்தியா ஆகிடுச்சு. காளப்பட்டி, நேரு நகர் ஏரியாவுல, பிரைவேட் காலேஜ் பக்கத்துல இருக்குற கடையில், அதிகாரிங்க ஆய்வு செஞ்சாங்க. சேல்ஸ்மேன் வீட்டுல, 10 பெட்டி கைப்பற்றியதா, வழக்கு பதியச் சொல்லியிருக்காங்க. ஆனா, 75 பெட்டி சரக்கு எடுத்துட்டு போனாங்களாம். 'டாஸ்மாக்' விவகாரத்துல, எவ்ளோ புகார் போனாலும், மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கறதில்லையாம்,'' என, அங்கலாய்த்தாள்.''மித்து, தங்க முட்டையிடுற கோழி மாதிரி, ஆளுங்கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள், போலீஸ்காரங்களுக்கு மாமூல் மழை கொட்டுற கடைக்காரங்க மேல, எப்படி நடவடிக்கை எடுப்பாங்க. பெயரளவுக்கு ஏதாச்சும் ஒரு 'கேஸ்' போட்டுட்டு, விட்டுடுவாங்கப்பா,''''அதெல்லாம் சரி, ரேஷன் கடையில், இலவசமா மாஸ்க் கொடுக்கறதா சொல்லியிருந்தாங்களே, கொடுக்கற மாதிரி தெரியலையே,''''இந்த விஷயத்துல, ஆளுங்கட்சி மேல, அதிருப்தி ஏற்பட ஆரம்பிச்சிருக்கு. நம்ம மாவட்டத்துக்கு, 85 லட்சம் மாஸ்க் தேவையாம். இதுவரைக்கும், 6 லட்சமே வந்திருக்கு; அதிலும், 3 லட்சம் மாஸ்க் தரமில்லாம வந்திருக்கு,''''ஒரு மாஸ்க் தயாரிச்சுக் கொடுக்க, அரசாங்கம், 6 ரூபாய் கொடுக்குது; ஆனா, ரெண்டு ரூபாய் கூட மதிப்பில்லாத மாஸ்க் சப்ளை செஞ்சதுனால, திருப்பி அனுப்பிட்டாங்களாம்,''''பொதுமக்கள் தரப்புல யாருமே இலவசமா மாஸ்க் கேக்கலை; ஆளுங்கட்சிக்காரங்க தேவையில்லாம அறிவிப்பு வெளியிட்டு, கெட்ட பெயரை சம்பாதிச்சிட்டு இருக்காங்க,'' என்றபடி, பாலசுந்தரம் ரோட்டில், ஸ்கூட்டரை செலுத்தினாள் சித்ரா.ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியை பார்த்த மித்ரா, ''அக்கா, இந்த துறையில் மாநில குழு உறுப்பினரா இருந்த ஒருத்தரு, பழைய கலெக்டர் மூலமா, விடுதியில் ஒரு அறையை வாங்கி, தவறா பயன்படுத்திட்டு வந்திருக்காரு. இப்ப இருக்கற அதிகாரிகள் கண்டுபிடிச்சு, அறையை உடனடியா காலி செய்யச் சொல்லி, நோட்டீஸ் கொடுத்திருக்காங்க. இருந்தாலும், இன்னும் காலி செய்யாம இருக்கிறாராம். இதனால, இப்ப இருக்கற கலெக்டர் மீது அவதுாறு பரப்பிட்டு இருக்காராம்,'' என்றாள்.அவிநாசி ரோடு சிக்னலை கடந்து, ஒசூர் ரோட்டில் சென்றபோது, டிராவல்ஸ் நிறுவனத்தை பார்த்த மித்ரா, ''அக்கா, பில்டிங் அப்ரூவல் கொடுக்குற அதிகாரத்தை, ஜோனல் அதிகாரிகளுக்கு, கமிஷனர் கொடுத்திருக்காரே. இனியாவது ஈசியா அனுமதி கிடைக்குமா,'' என, நோண்டினாள்.''மித்து, கார்ப்பரேசன் கமிஷனர், துணை கமிஷனர் பெயரைச் சொல்லி, லட்சக்கணக்குல லஞ்சம் வாங்குறதா, மேலிடத்துக்கு மொட்டை கடுதாசி போயிருக்கு. டிராவல்ஸ்காரர், எல்.பி.எஸ்., ஒரு டிரைவர், ஒரு உதவியாளர் ஆகியோரை பக்கத்துல வச்சுக்கிட்டு, தனித்தனியா ரிஜிஸ்தர் மெயின்டெயின் பண்ணி, லட்சம் லட்சமா பணம் வசூலிச்சிட்டு இருந்தாராம். இதை உயரதிகாரிகள் கண்டுபிடிச்சிட்டாங்க. அதனால, பொறுப்புல பாதியை பறிச்சிட்டாங்களாம்,'' என்றபடி, மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்துக்குள், ஸ்கூட்டரை நிறுத்தினாள் சித்ரா.அங்கிருந்த விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்து கொண்டிருந்தது. ஊழியர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா, இந்த வருஷம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்களாமே,'' என, கேட்டாள்.''ஆமாப்பா, அப்படித்தான் சொல்லியிருக்காங்க. ஊர்வலமும் நடத்த மாட்டோம்; விசர்ஜனமும் இருக்காது. சிலைகள் மட்டும் கண்டிப்பா பிரதிஷ்டை செய்வோம்ன்னு இந்து அமைப்புகள் தெளிவா சொல்லிட்டாங்க. இருந்தாலும், சிலைகள் தயாரிக்கிற இடத்துக்கு போலீஸ்காரங்க போயி, யாருக்கும் விற்கக்கூடாதுன்னு, கண்டிசன் போடுறாங்களாம்; கலெக்டர் வரைக்கும் புகார் போயிருக்கு,''''ஏங்கா, இந்து அமைப்புகள் சொல்றது சரிதானே! ஊர்வலம் கிடையாது; விசர்ஜனம் கிடையாது; சிலை மட்டும் வச்சு வழிபாடு மட்டும்தானே நடத்தப் போறாங்க. இதை எதுக்கு தடுக்குறாங்க. ஏற்கனவே, வேல் விஷயத்துல, தி.மு.க., சின்னாபின்னமானது ஆளுங்கட்சிக்கு தெரியலையா?''''விநாயகர் சதுர்த்தி விஷயத்துல எதுக்கு தேவையில்லாம கட்டுப்பாடு விதிக்கிறாங்க. இந்த விஷயத்துல கவனம் இல்லாம செயல்பட்டாங்கன்னா, ஒட்டுமொத்த அதிருப்தியும் ஆளுங்கட்சி மேலே திரும்பிடுமே,'' என, வருத்தப்பட்டாள் மித்ரா.பேசிக்கொண்டே அலுவலகத்துக்குள் சென்ற சித்ரா, மண்டல அதிகாரி, 'ரவுண்ட்ஸ்' சென்றிருந்ததால், சென்ற வேகத்தில் திரும்பினாள்.''என்னக்கா, ஆபீசர்ஸ் யாருமே இல்லையா,'' என, கேட்ட மித்ரா, ''சின்ன தடாகம் வட்டாரமே கதி கலங்கி இருக்கிறதாம். கோவில்களுக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்களில் இருந்து, சூளை உரிமையாளர்கள் சிலர், மண்ணை சுரண்டி எடுத்து வித்தது வெளிச்சத்துக்கு வந்திருக்கு. இதுசம்பந்தமா, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தோண்டி எடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. இதுல, என்ன கொடுமைன்னா, கோவில் நிலத்துக்கும் சிலர் பட்டா தயாரிச்சு வித்துட்டாங்களாம்,'' என, அதிர்ச்சியூட்டினாள்.''அச்சச்சோ... அப்புறம்,'' என, வாயைப்பிளந்தாள் சித்ரா.''அப்புறமென்ன, விசாரணை நடந்துக்கிட்டு இருக்கு,'' என்ற மித்ரா, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X