பெங்களூரு: காயமடைந்த ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு உதவக் கூடிய வகையில் மருத்துவ செயலி உருவாக்கிய பெங்களூருவைச் சேர்ந்த கண் மருத்துவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர்.

டில்லி ஜாமியா நகரில் காஷ்மீர் தம்பதியான ஜஹான்சாகிப் சாமி வானி மற்றும் ஹீனா பஷீர் பேஹ் ஆகியோர் வசித்தனர். ஐ.எஸ்.ஐ.எஸ்., துணை அமைப்புடன் தொடர்பு வைத்துக்கொண்டு தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதாக இவர்களை டில்லி சிறப்பு போலீசார் கடந்த மார்ச்சில் கைது செய்தனர். இவ்வழக்கை பின்னர் தேசிய புலனாய்வு முகமை கையிலெடுத்தது. இத்தம்பதிகளுடன் தொடர்பிலிருந்ததாக பெங்களூரு பசவன்குடியைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் (28) என்ற இளம் கண் மருத்துவரை இன்று (ஆக., 18) கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூரு எம்.எஸ்.ராமையா மருத்துவக் கல்லூரியில் கண் மருத்துவராக பணியாற்றி வரும் இவர், காயமடைந்த ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு உதவ மருத்துவ செயலி ஒன்றையும், ஆயுதம் தொடர்பான செயலியையும் உருவாக்கி வந்துள்ளார்.

மேலும் 2014-ம் ஆண்டு சிரியாவில் இருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் மருத்துவ முகாமிற்கு சென்று சிகிச்சை அளித்துள்ளார். அங்கு 10 நாட்கள் தங்கியிருந்துவிட்டு பின்னர் இந்தியா திரும்பியுள்ளார். இத்தகவலை என்.ஐ.ஏ., தெரிவித்துள்ளது. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை காவலில் எடுத்து மேலும் விசாரிக்க உள்ளனர்.
உயிர் காக்க வேண்டிய மருத்துவர் ஒருவரே, உயிரை எடுக்கும் பயங்கரவாதிகளுக்கு பல வகையிலும் உதவியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE