விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில், மீன் மார்கெட் மற்றும் சாலை பணிகளுக்கான 7.50 கோடி ரூபாய் டெண்டர் விடும் பணி நடந்ததையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
விழுப்புரம் நகராட்சியில், சாலை, கட்டடங்கள் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்கு, டெண்டர் விடும் போது, ஒவ்வொரு முறையும் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இதில், குறிப்பாக, ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர், இந்த ஒப்பந்த புள்ளியை எடுத்து வரும் நிலையில், வெளி நபர்களை இதில் பங்கேற்க விடாமல் தடுப்பதும், அதை மீறி டெண்டர் கோருவதற்கான விண்ணப்பத்தை பெட்டியில் போடவந்தால் மிரட்டுதல் போன்ற சம்பவங்கள் வழக்கமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், விழுப்புரம் நகராட்சியில் நேற்று, அனிச்சம்பாளையம் பகுதியில் 2.50 கோடி ரூபாய் மீன் மார்கெட் கட்டடம் கட்டுவதற்கும், நகராட்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஐந்து இடங்களில் சாலை பணிகளுக்கு 5 கோடி ரூபாய் உள்பட மொத்தம் 7.50 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு, டெண்டர் விடப்பட்டது.இதை முன்னிட்டு, விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் பிரச்னைகள் ஏற்படாமல் இருப்பதற்காக, டி.எஸ்.பி., (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் தலைமையில் இரு இன்ஸ்பெக்டர்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE