கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Updated : ஆக 19, 2020 | Added : ஆக 19, 2020 | கருத்துகள் (114)
Share
Advertisement
சென்னை: துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலை நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த விதிமுறைகளை பின்பற்றவே இல்லை என்றும், அதனால், அந்த ஆலையை மூட உத்தரவிட்டது செல்லும் என்றும், சென்னை உயர் நீதிமன்றம், நெத்தியடி தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆலையை மூடும்படி, அரசு எடுத்த முடிவுக்கு, அரசியல் காரணங்கள் உள்ளதாக கூறிய, ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு, குட்டு வைத்துள்ள
Sterlite Copper verdict, Sterlite case, Madras HC, Thoothukudi, Madras high court, dismisses, Vedantas pleas, Tuticorin

சென்னை: துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலை நிர்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த விதிமுறைகளை பின்பற்றவே இல்லை என்றும், அதனால், அந்த ஆலையை மூட உத்தரவிட்டது செல்லும் என்றும், சென்னை உயர் நீதிமன்றம், நெத்தியடி தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆலையை மூடும்படி, அரசு எடுத்த முடிவுக்கு, அரசியல் காரணங்கள் உள்ளதாக கூறிய, ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு, குட்டு வைத்துள்ள நீதிபதிகள், ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என, திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

'வேதாந்தா குரூப்' நிறுவனம், துாத்துக்குடியில், தாமிர உருக்காலையான, ஸ்டெர்லைட் ஆலையை துவக்கியது. 1994ல், ஆலைக்கான நிலத்தை, 'சிப்காட்' நிறுவனம் ஒதுக்கியது. 1995ல், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது. 1997 ஜனவரியில் உற்பத்தி துவங்கியது.


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை செயல்பட்டு வந்தது. ஆலை கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பதாகவும், நச்சு புகையால் மக்களுக்கு நோய்கள் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆலையை மூட வலியுறுத்தி 2018, மே மாதம் நடந்த போராட்டத்தில், வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாயினர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்தும், ஆலையை திறக்க உத்தரவிட கோரியும், ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. திறக்க கூடாது என பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் மனுத்தாக்கல் செய்தனர். நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. இந்த வழக்கில், செவ்வாயன்று, 815 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என கூறியுள்ளனர். ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசின் நடவடிக்கை செல்லும் எனக்கூறி, வேதாந்தா நிறுவனத்தின் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். மேல்முறையீடு செய்யும் வரை, தீர்ப்பை 2 வாரம் நிறத்தி வைக்க வேதாந்தா தரப்பில் கேட்கப்பட்டது. அதை நிராகரித்த நீதிபதிகள், தள்ளுபடி செய்ததே இறுதி தீர்ப்பு; உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என கூறியுள்ளனர். தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

குற்றச்சாட்டுகள்:

இதற்கு, ஆரம்பத்தில் இருந்தே, அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆலையால், சுற்றுச்சூழல் மாசு, நிலத்தடி நீர் மாசு ஏற்படுவதாகவும், பொது மக்கள் உடல் நிலை பாதிக்கப்படுவதாகவும், குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூடக்கோரியும், 2018ல் மீண்டும் போராட்டம் துவங்கியது.

துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்த பொது மக்கள் மீது, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் பலியாயினர். இதையடுத்து, ஆலையை மூடி, 'சீல்' வைக்க, 2018 மே மாதம், தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம், உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தது.


உத்தரவு:

ஆலையை திறக்க அனுமதிக்கவும், ஆலையை இயக்க ஒப்புதல் வழங்கவும், மின் இணைப்பு வழங்கவும் கோரி, இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.மனுக்களை, நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 815 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பை, நேற்று பிறப்பித்தனர்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, அரசு எடுத்த முடிவு நியாயமானது. அபாயகரமான கழிவு குறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கவனத்துக்கு, ஆலை நிர்வாகம் எடுத்துச் செல்லாதது, சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலானது என்பது, உண்மை தான். கழிவு மேலாண்மைக்கு உரிய வசதிகளை, ஸ்டெர்லைட் நிர்வாகம் ஏற்படுத்தவில்லை. ஆலையை முறையாக கண்காணிக்க, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தவறி விட்டது.

ஆலையை மூடி விட்டால், தாமிர தேவையை பூர்த்தி செய்ய முடியாது; பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்ற, வாதத்தை ஏற்க முடியாது. பொருளாதார பாதிப்பை விட, சுற்றுச்சூழலை பாதுகாப்பதே முக்கியமானது. அரசியல் காரணங்களுக்காக, ஆலையை மூடியதாக, மனுதாரர் தரப்பில் கூறினால், 20 ஆண்டுகளுக்கு முன், ஆலையை துவங்க அனுமதி வழங்கியதும், அரசியல் காரணங்களுக்காகத் தான் என, கூற வேண்டியது வரும்.

ஆலையை துவங்க ஒப்புதல் வழங்கிய போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளை, ஸ்டெர்லைட் ஆலை மீறியுள்ளது. அதன் விளைவுகள் உடனடியாக தெரியாது; பல ஆண்டுகளாகும் .'அரசு எடுத்த முடிவில் உள்நோக்கம் உள்ளது; இதர காரணங்களுக்காக அல்லது அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்பட்டது' என, மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது, நிரூபிக்கப்படவில்லை. மாசு கட்டுப்பாட்டு வாரியம் எடுத்த முடிவுக்கு, தமிழக அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.

பொது நலன் அடங்கியுள்ளதால், ஆலையை நிரந்தரமாக மூடவும், சீல் வைக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆலை இயங்க ஒப்புதல் அளிக்க மறுத்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுகளில், காரணங்கள் கூறப்பட்டுள்ளன. இரண்டு முறை, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது; மூன்று முறை நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டுள்ளது.

விதிமுறைகளை, நிபந்தனைகளை பின்பற்றவில்லை என்றால், சம்பந்தப்பட்ட ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, வாரியத்துக்கு அதிகாரம் உள்ளது. விதிமீறல்கள் சரி செய்யப்படும் வரை, உற்பத்தியை நிறுத்தவோ, ஆலையை மூடவோ, நிரந்தரமாக மூடவோ, நடவடிக்கை எடுக்க முடியும். பொது மக்கள் நலன் கருதி, ஆலையை நிரந்தரமாக மூடி, சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆலையை மூடி, சீல் வைப்பதற்கு, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதே, முழு காரணம் என்பது போல், மனுதாரர் தரப்பில் சித்தரிக்கப்பட்டது. ஏற்கனவே, மாசு கட்டுப்பாட்டு வாரியம், நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் பிறப்பித்த உத்தரவுகளை மறந்து விட்டனர்.

இரண்டு மாநிலங்களில், ஸ்டெர்லைட் ஆலையை நிறுவ முடியவில்லை. மஹாராஷ்டிராவில் நிறுவியபோது, பொது மக்களின் போராட்டத்தால், வழங்கிய அனுமதியை அரசு ரத்து செய்தது. ஆலையை கலைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒப்புதல் பெறாமலேயே, விரிவாக்க நடவடிக்கையை, ஆலை நிர்வாகம் மேற்கொண்டது, அதன் நடத்தையை காட்டுகிறது.

ஆலை தொடர்ந்து இயங்க வேண்டும் என, அந்தப் பகுதி மக்கள் விரும்புவதாக, சென்னையை விட துாத்துக்குடி பாதுகாப்பானது என கூறுவதாக, நிர்வாகம் தரப்பில் முன்வைக்கப்பட்டது. அவ்வாறு அந்தப் பகுதி மக்களை, பேச வைத்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, பொது மக்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சிகள், எம்.எல்.ஏ.,க்கள் அளித்த புகார்களின் விபரங்கள் உள்ளன. மத்திய அரசின் அறிக்கைப்படி, தமிழகத்தில் அதிக மாசு உள்ள நகரம், துாத்துக்குடி என, கூறப்பட்டுள்ளது. அதனால், சென்னையை விட துாத்துக்குடி பாதுகாப்பானது என்ற, வாதம் நிராகரிக்கப்படக் கூடியது.

எனவே, ஸ்டெர்லைட் ஆலையின் விண்ணப்பத்தை நிராகரித்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவு செல்லும். ஆலையை மூட பிறப்பித்த உத்தரவு, மின் இணைப்பை துண்டிக்க பிறப்பித்த உத்தரவு செல்லும். இந்த உத்தரவுகளை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


'சட்ட போராட்டம் தொடரும்'

''ஆலையை திறப்பதற்கான சட்ட போராட்டம் தொடரும்,'' என, ஸ்டெர்லைட் ஆலையின் முதன்மை செயல் அலுவலர், பங்கஜ்குமார் கூறினார்.

துாத்துக்குடியில், அவர் கூறியதாவது: உயர் நீதிமன்ற தீர்ப்பு, வருத்தமும், ஏமாற்றமும் அளிக்கிறது. சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு, 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிய ஆலை, இரண்டரை ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. ஆலையை நம்பியுள்ள, 50 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன; தொடர்புடைய பல்வேறு தொழில் நிறுவனங்களும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளன.தொழில்துறையில் காப்பரின் தேவை அதிகம். தற்போது, இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது, துரதிருஷ்டவசமானது.

காப்பர் கிடைக்காமல், பல தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளன. வலுவான காரணங்கள் இல்லாமல், எங்கள் ஆலை மூடப்படுவதை பார்க்கும் போது, எந்த ஒரு முதலீட்டாளரும், தமிழகத்தில் தொழில் துவங்க பலமுறை யோசிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழல் மாறவேண்டும் என்பது, எங்கள் விருப்பம். நீதித்துறையின் மீது எங்களுக்கு அளவு கடந்த நம்பிக்கையுள்ளது. நாங்கள் எடுத்த முயற்சிக்கு, தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஊழியர்களின் நலன் கருதி, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம். உச்சநீதிமன்றத்தில், எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், சட்டப்போராட்டத்தை மேற்கொள்வோம். துாத்துக்குடியில் எங்கள் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களின் வளர்ச்சிக்கான பணிகளை, தொடர்ந்து மேற்கொள்வோம். இவ்வாறு, பங்கஜ்குமார் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (114)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
20-ஆக-202010:42:02 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\பொருளாதார பாதிப்பை விட, சுற்றுச்சூழலை பாதுகாப்பதே முக்கியமானது............\\ ..... இந்த கருத்து ஈரோடு, பள்ளிப்பாளையம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய இடங்களில் உள்ள சாயப் பட்டறை, தோல் பதனீட்டு ஆலை போன்றவைகளுக்கும் பொருந்துமா? ........... அப்படியென்றால் அவற்றை அரசாங்கம் மூடுவதற்கு முயற்சி எடுக்குமா? .... இல்லை நீதிமன்றம் தானாகவே முன்வந்து அந்த வழக்கினை எடுக்குமா?...............இந்த நீதிமன்ற தீர்ப்புகளில் பிரச்சினை என்னவென்றால் inconsistency ....................
Rate this:
Cancel
ranganathan.V - chennai,இந்தியா
20-ஆக-202006:01:20 IST Report Abuse
ranganathan.V Why the Government allowed in initial stage, to my knowledge this big crime by Government. Looser is Public Check any foreign agency involved in scam
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-ஆக-202023:49:43 IST Report Abuse
தமிழவேல் தவறு ஆலை மீது மட்டும் அல்ல. ""ஆலையை முறையாக கண்காணிக்க, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தவறி விட்டது ""
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X