தமிழகம் மற்றும் புதுச்சேரியில், எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்கள் முழு தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதுபோல, தேர்வுக்காக பதிவு செய்திருந்த, அனைத்து தனித்தேர்வர்களுக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும்.
'சொல்லீட்டிங்கல்ல... மறந்திருப்பாங்க; அடுத்த சில நாட்கள்ல அறிவிப்பு வரும் பாருங்க...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., முன்னாள் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை.
சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்து, அ.தி.மு.க.,வை ஆட்டம் காண வைப்பார் என்று பேசப்படுவது, வெறும் யூகமே. ஜெயலலிதாவுடன் நீண்ட காலம் இருந்தவர் அவர். அரசியல் வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது அவர் தான். வந்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்வரா என்பதை, காலம் தான் முடிவு செய்யும்.
'மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று, அதிரடியாக சொல்ல மாட்டேன் என்கிறீர்களே...' என, கூறத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணைச் செயலர், நடிகை விந்தியா பேட்டி.
பிறந்த நாள் என்பதில் சிறப்பேதும் இல்லை. எனினும், இதை முன்னிட்டு வாழ்த்துவதற்கு; வாழ்த்தின் மூலம் மகிழ்வூட்டுவதற்கு; மகிழ்வின் மூலம் ஊக்கமூட்டுவதற்கு; ஊக்கத்தின் மூலம் நம்பிக்கையளிப்பதற்கு; நம்பிக்கையின் மூலம் வெற்றிகரமாக இயங்குவதற்கு, இது வாய்ப்பாக அமையும்.

'மனதில் தோன்றியதை, உண்மையை, மிக யதார்த்தமாய் சொல்லி விட்டீர்கள்... பிறந்த நாளை எதற்காகக் கொண்டாடுகிறோம் என்பதே பலருக்கும் தெரிவதில்லை...' என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை.
நாடு முழுதும், குறிப்பாக, சென்னையில் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்ததா; கொரோனா பாதிப்பில், நாட்டிலேயே, மூன்றாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. எனவே, இதுவரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு பொது தோல்வியே.
'கம்யூ.,க்கள் ஆளும், கேரளாவிலும், இதே நிலை தானே; அங்கு மட்டும், கட்டுப்படுத்தி விட்டனரா என்ன...' என, கேட்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை.
பிற மாவட்ட கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அந்த எண்ணிக்கையோடு சென்னையைப் போட்டி போட வைக்கத் தான், தமிழக அரசு, சென்னையில் அவசரமாக, டாஸ்மாக் கடைகளை திறக்கிறதா?
'டாஸ்மாக்குக்கு எதிராக பேசாதீங்க; தேர்தல் வரப் போகுது. கட்சிக்கு ஓட்டு கிடைக்காது...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., மகளிரணிச் செயலர் கனிமொழி அறிக்கை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE