புதுடில்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தண்டனையை ஏற்க தயாராக உள்ளதாகவும், மன்னிப்பு கேட்க மாட்டேன் எனவும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.
டில்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, முன்னாள் தலைமை நீதிபதிகளை கடுமையாக விமர்சித்து, சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு இருந்தார். இதையடுத்து, அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணையின்போது, நீதித்துறை நடவடிக்கையை விமர்சிக்கவில்லை என, தெரிவித்த பிரசாந்த் பூஷன், அரசியல் அமைப்பு சட்டம் அளித்துள்ள பேச்சுரிமை மற்றும் கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் தான், அந்த கருத்தை பதிவிட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில், நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையிலான அமர்வு, இந்த வழக்கில் கடந்த 14 ல் தீர்ப்பளித்தது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பிரசாந்த் பூஷன் குற்றவாளி என அறிவித்த நீதிபதிகள், தண்டனை குறித்த வாதம், வரும், 20ல் துவங்கும் என்றும் உத்தரவிட்டனர்.
அதனை தொடர்ந்து, பிரசாந்த் பூஷன் சார்பில், உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், பிரசாந்த் பூஷன், சீராய்வு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால், தண்டனை தொடர்பான வாதங்களை ஒத்திவைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தண்டனைக்கான வாதம் இன்று நீதிமன்றத்தில் துவங்கியது. அப்போது, நீதிபதிகள், பிரசாந்த் பூஷனுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டாலும், அவரது சீராய்வு மனு மீதான விசாரணைக்கு பிறகே நிறைவேற்றப்படும். இந்த அமர்வை பிரசாந்த் பூஷன் தவிர்ப்பது போல் நாங்கள் நினைக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து, சீராய்வு மனு மீது முடிவெடுக்கும் வரை, இன்றைய வாதத்தை ஒத்திவைக்க வேண்டும் என பிரசாந்த் பூஷன் தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தண்டனை விபரம் அறிவித்தால் தான், தீர்ப்பு முழுமை பெறும் என தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து பிரசாந்த் பூஷன் வாதிட்டதாவது: ஜனநாயகத்தின் அடிப்படை ஆதாரத்தை காப்பாற்ற விமர்சனங்கள் என்பது அடிப்படை கடமை. நான் எனது அடிப்படை கடமையை செய்ததாகவே கருதுகிறேன். எனது தண்டனைக்கு எதிரான வாதமாக உண்மையை மட்டும் நான் கருதுகிறேன். தண்டனைக்கு தயாராக இருக்கிறேன். மன்னிப்பு கேட்க போவதில்லை. எனது நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறேன். அதில் பின்வாங்க போவதில்லை. நீதிபதிகள் குறித்த எனது கருத்தில் தற்போதும் உறுதியாக உள்ளேன். இவ்வாறு அவர் வாதிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE