அபுதாபி : ஐக்கிய அரபு எமிரேட்சில் 20 முதல் 40 வயதுடையவர்கள் அதிகமாக கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா பாதிப்புகளை குறைக்க அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சுகாதாரதுறை தெரிவிக்கின்றது. அரபு எமிரேட்சில் தொற்றால் பாதிக்கப்படுவோரில் பெரும்பாலானவர்கள் 20 முதல் 40 வயதுடையவர்கள் என அந்நாட்டின் சுகாதார துறையின் செய்தி தொடர்பாளர் டாக்டர் பரிதா அல் ஹோசானி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது : கொரோனா பரவலை தடுப்பது, ஆரோக்யமான நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். நாட்டில் 20 முதல் 40 வயதுடையவர்களில் பெரும்பாலனவர்கள் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது இளைஞர்களை தாக்கும் காரணமாக கவனிக்கப்படுகிறது. அரசின்விதிமுறைகளை மீறுவது பாதிப்பு அதிகரிப்பதற்கான முக்கியமான காரணமாகும். மேலும் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகுலுக்கலை தவிர்ப்பது, குடும்ப / பொது இடங்களில் கூட்டமாக இருப்பது போன்ற அரசின் தடுப்பு நடவடிக்கைகளை சிலர் புறக்கணித்ததால் கடந்த 2 நாட்களில் நோயின் பாதிப்பு உயர்ந்துள்ளது.

தொடர்ந்து அரபு எமிரேட்சில் இன்று புதிதாக 424 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டதாக சுகாதாரதுறை அறிவித்தது, இதனால் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 66,617 ஆக அதிகரித்தது. ஒரே நாளில் 112 பேர் தொற்றில் இருந்து மீட்கப்பட்டனர். அரபு எமிரேட்சில் குணமடைந்த நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 54,408 ஆக உயர்ந்தது. சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சின் (MoHAP) கருத்துப்படி, சமீபத்திய கொரோனா வைரஸ் நோயாளிகள், அவர்கள் அனைவரும் நிலையான நிலையில் உள்ளனர் மற்றும் தேவையான கவனிப்பைப் பெறுகின்றனர். அரபு எமிரேட் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களிடையே 70,000 க்கும் மேற்பட்ட கூடுதல் சோதனைகளை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு தெரிவித்தார்.