தமிழக சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு, ஏப்ரல், மே மாதங்களில் நடக்க வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும், ௭ - ௯ மாதங்கள் இருக்கின்றன. ஆட்சியை தக்க வைக்க, அ.தி.மு.க.,வும், விட்டதை பிடிக்க, தி.மு.க.,வும் இப்போதே களத்தில் இறங்கியுள்ளன.
இதற்கிடையே, முதல்வர் வேட்பாளர் யார் என்ற குழப்பம், கடந்த சில நாட்களாக, அ.தி.மு.க.,வில் எழுந்துள்ளது. எனினும், அனைவரும், இப்போதைக்கு, முதல்வர், இ.பி.எஸ்., - துணை முதல்வர், ஓ.பி.எஸ்., பக்கமே உள்ளனர்.பக்தனின் விதிநிலைமை இவ்வாறு இருக்க, கர்நாடகா சிறையில் இருக்கும், ஜெ., தோழி சசிகலா, எந்நேரமும் வெளியே வந்து, தீவிர அரசியலில் இறங்க உள்ளார் என்ற வதந்தியும் சுற்றிக் கொண்டிருக்கிறது.தேர்தலுக்கு மாதங்கள் பல இருந்தாலும், இப்போதே வாக்காளர்களை கவனிக்க வேண்டும் என்பதற்காக, இ - பாஸ் விவகாரத்தில், அ.தி.மு.க., அரசு கவனமாக உள்ளது என்ற கருத்தும் உலா வருகிறது.எனினும், வாக்காளர்களுக்கு சில விஷயங்களை இப்போதே போட்டு வைத்தால், தேர்தல் சமயத்தில் பலனளிக்கும் என்பதால், இந்த கட்டுரையில், சில தகவல்களை தெரிவிக்கிறேன். அவற்றை மனதில் இருத்தி, வேட்பாளர்களையும், கட்சிகளையும் அலசி பார்க்க வேண்டியது, வாக்காளர்கள் கடமை.'மண்டையிலெழுத்து மாந்தினால் போகுமா...' என்று, மலையாளத்தில் அற்புதமான பழமொழி உண்டு. மாந்தினால் என்றால், சுரண்டினால் என்று பொருள்.தலையெழுத்தை வாசிக்கும் வல்லமை பெற்ற ஒரு ஜோதிடர், ஒரு நாள் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தார்.
அப்போது, ஒரு மண்டை ஓட்டை அலை அவரது காலடியில் சேர்த்தது.அந்த மண்டை ஓட்டில் என்ன எழுதி உள்ளதென்று படிக்கும் ஆவலில், அதை எடுத்துப் படித்துப் பார்த்தாராம். அந்த ஓட்டில், 'இவன் தலை சுக்கு நுாறாக சிதறி சாவான்' என்று எழுதப் பட்டிருந்தது.ஜோதிடருக்கு ஆச்சரியம். தலை சுக்கு நுாறாகச் சிதறிச் சாக வேண்டும் என, எழுதி இருக்கும் போது, இவனது தலை சிதறாமல், மண்டை ஓடு மொத்தமாக இருக்கிறதே என, எண்ணினார்.எதற்கும் இருக்கட்டும் என்று, அந்த மண்டை ஓட்டை, தன் வீட்டுத் தோட்டத்தில் இருந்த, மரப் பொந்தில் மறைத்து வைத்து, அவ்வப்போது அதை எடுத்து பார்த்து, மீண்டும் வைத்து விடுவார்.ஜோதிடர் செய்கையை நோட்டமிட்ட அவரது மனைவி, இவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது; இறந்து போன அவளின் மண்டை ஓட்டை தான், இவர் தினமும் எடுத்து பார்க்கிறார் என, தவறாக கருதினாள்.ஒரு நாள், அந்த மண்டை ஓட்டை உரலில் போட்டு, உலக்கையால் நொறுக்கி விட்டாள். அதை பார்த்த ஜோதிடர், 'சபாஷ், மண்டை ஓட்டின் எழுத்து பொய்க்கவில்லை' என்று சொல்லி, குதுாகலித்தாராம்.நொறுக்கப் பட்ட மண்டை ஓட்டுக்கும் தமிழகத்தின் தலையெழுத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? இன்னொரு உதாரணத்தையும் பார்த்து விடுவோம்.
பக்தன் ஒருவன் வறுமையில் வாடிக் கொண்டிருந்தான். கைலாயத்திலிருந்து அதைக் கண்ட பார்வதி, தன் கணவர் சிவபெருமானிடம், 'சுவாமி, தங்கள் பக்தன், 60 ஆண்டு காலமாக, வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறானே; கொஞ்சம் கருணை காட்டக் கூடாதா...' என, கேட்டாள்.அதற்கு சிவபெருமான், 'என்ன செய்வது தேவி... வறுமையில் வாட வேண்டு மென்பது அவன் தலையெழுத்து; நீயோ, நானோ அதை மாற்ற முடியாது. உன் விருப்பப்படி, அவன் முன் ஒரு பொற்கிழியைப் போடுகிறேன். அவன் என்ன செய்கிறான் பார்...' என்று சொல்லி, ஒரு பொற்கிழியை, அவன் முன் போட்டார், சிவபெருமான்.அதுவரை சாதாரணமாக நடந்து வந்து கொண்டிருந்தவன், 'கண் பார்வையற்றவன் நடக்க, எவ்வளவு கஷ்டப் படுவான் என்று உணரலாம்' என நினைத்து, இரண்டு கண்களையும் இறுக்க மூடி நடந்து, அந்த பொற்கிழியை பார்க்காமலேயே கடந்து சென்று விட்டான்.பின், கண்களைத் திறந்து, 'பாவம்... கண் தெரியலேன்னா, ரொம்பக் கஷ்டம் தான்' என்று சொல்லிக் கொண்டே, தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான்.
இதை, சிவபெருமானும், பார்வதி தேவியும் பார்த்து சிரித்தனர். 'நீ என்ன செய்தாலும், அவ்வளவு தான் அந்த பக்தனின் விதி' என, கூறிக் கொண்டனர்.தனக்கு முன் போடப் பட்டிருந்த பொற்கிழியை பார்க்காமல், இயல்பாக கண்களை மூடிய அந்த வறியவனின் செயல் போல தான், தமிழகமும், தமிழக மக்களும் நடந்து கொள்கின்றனர்.பசப்பு வார்த்தைகளுக்கும், அடுக்கு மொழி மேடைப் பேச்சுக்கும், 'சொன்னதை செய்வோம்; செய்வதை சொல்வோம்' என்ற பொய் வார்த்தைகளுக்கும், இலவச வண்ணத் தொலைக் காட்சி பெட்டிகளுக்கும் மயங்கி கிடக்கின்றனர்.திராவிடக் கட்சிகளை ஆட்சி பீடத்தில் அமர வைத்த தமிழக மக்கள், அந்த மயக்கத்திலிருந்து விடுபட முடியாமல், விழி பிதுங்கிக் கொண்டிருக்கின்றனர்.ஓட்டுப் பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தி, நாம் போடும் ஓட்டு, அடுத்த ஐந்தாண்டு களுக்கு, ஆளக் கொடுக்கும் அங்கீகாரம் என்பதை சுத்தமாக நினைவில் கொள்ளாமல் இருந்து விடுகிறோம்.
அதனால் தான், 60 ஆண்டுகளாக, இரு திராவிடக் கட்சிகளையும், மாறி மாறி ஆட்சியில் அமர வைத்து, நம் தலையிலும், நம் சந்ததியின் தலையிலும், மண்ணை வாரி போடுகிறோம்.சிலர், ஓட்டுக்கு, 2,000 ரூபாய் கொடுக்கின்றனர்; சிலர் பெறுகின்றனர். ஓர் ஆண்டுக்கு, 365 நாட்கள் எனில், ஐந்து ஆண்டுகளுக்கு,1,825 நாட்கள். ஒரு நாளைக்கு, 1.09 காசு தான் வருகிறது. ஒரு நாளைக்கு, ஒரு ரூபாய்க்கு, நம் ஓட்டை விற்றுள்ளோம் என்று வைத்துக் கொள்ளலாம்.அறுபது ஆண்டுகளாக, தமிழகத்தில் நீங்கள் ஆட்சியில் அமர்த்தும் திராவிடக் கட்சிகளால், கடந்த ஐந்தாண்டுகளில் நீங்கள் அடைந்த, ஐந்து நன்மைகளை பட்டியலிட முடியுமா...நடவடிக்கைஆண்டுதோறும், கோடைக் காலத்தில் வெயில் சுட்டெரிக்கும். மழைக் காலத்தில் மழை வெளுத்து வாங்கும். வெயிலை குடையால் மறைத்து விடலாம். மழைக் காலங்களில் வீதிகளில் தேங்கும் நீரை, எப்படி எதிர் கொள்வது?சாலைகளில் மட்டுமா வழிந்தோடுகிறது. வீட்டுக்குள்ளும் அல்லவா நுழைந்து, படுத்துகிறது.
மழைக் காலங்களில், பெய்யும் மழை நீர், சாலைகளில் தேங்காமல் வழிந்தோட, இதுவரை ஆட்சியில் இருந்த எந்த கட்சியாவது, உருப்படியாக ஒரு திட்டம் தீட்டி, நடவடிக்கை எடுத்து இருக்கிறதா?கல்வி, அரசு நிர்வாகம், போக்குவரத்து வசதி, குடி தண்ணீர் வழங்குதல், குடும்ப அட்டைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்குதல், மின் வினியோக கணக்கீடு, சாலைகள் பராமரிப்பு...இவை மட்டுமா, குப்பை அகற்றுவது, விவசாயத்தை பேணுவது, உள்ளாட்சி நிர்வாகத்தில், மருத்துவ வசதி அளிப்பது, இப்படி ஏதாவது ஓர் இனத்தில் குறைந்த பட்சம், ஐந்து நன்மைகளை, மக்கள் அடைந்ததாக கூறினால், நீங்கள் இனிமேலும் கழகங்களுக்கு ஓட்டளித்து, ஆட்சி பீடத்தில் தாராளமாக அமர்த்தலாம்.
'ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும், மாதம், 20 கிலோ அரிசி வழங்கினோம்' என்று கழகங்கள் வாதிடும். இலவச அரிசி வழங்கியது மத்திய அரசு. மத்திய அரசு வழங்கிய இலவச அரிசியை, தாங்கள் வழங்கிக் கொண்டிருப்பதாக கூறுவது பொய் பித்தலாட்டம்.எனவே, வரும் தேர்தலில், ஓட்டளிப்பதற்கு முன், சற்று சிந்தித்து முடிவெடுங்கள்.கழகங்களின் ஆட்சியில், நீர் நிலைகள் பெருகவில்லை; மணி மண்டபங்கள் தான் பெருகின. சாலைகள் சீரமைக்கப்படவில்லை; சிலைகள் தான் பெருகியுள்ளன.சமாதிகளுக்கும், நினைவாலயங்களுக்கும் தான் முக்கியத்துவம் தரப்படுகிறதே தவிர, மக்களின் வாழ்வாதாரம் மேம்படவில்லை.கழகங்களின் ஆட்சியில், உயிரற்ற சிலைகளுக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பில், 10 சதவீதத்தை கூட, உயிருள்ள மனிதர்களுக்கு கொடுக்கவில்லை.
பகுத்தறிவு என, இத்தனை ஆண்டுகளாக, கழகங்கள் மக்களை மூளைச் சலவை செய்து கொண்டிருந்தன. அந்த பகுத்தறிவை, சரியான முறையில் பயன்படுத்தி, சிந்தித்து செயல் பட்டிருந்தாலே, தமிழகம் தங்கமயமாக மாறி இருக்கும். இனிமேலாவது இதை சிந்தித்து பார்ப்போம்.தமிழகம் மட்டுமல்ல. இந்தியாவின் எந்த மாநிலத்திலும், சொந்த வீடு இல்லாத ஏழைகள் வீடு கட்ட, மத்திய அரசு, ௨.70 லட்ச ரூபாயை மானியமாக வழங்குகிறது. மத்திய அரசு தரும் அந்த மானியத்தை, அதிக அளவில் வாங்கி பயன் படுத்தியுள்ளோர்,தமிழக மக்கள் தான்.கடந்த, 60 ஆண்டுகளாக, எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று சொல்லி, நம் மூளையை மழுங்கடித்து, தமிழையும் படிக்க விடாமல், மற்ற மொழிகளையும் கற்க விடாமல் தடுத்து, பிழைப்பு நடத்தியது எந்த அரசியல் கட்சி என்று, பகுத்தறிவை பயன்படுத்தி சிந்தித்து பாருங்கள்.நீங்கள் ஏமாற்றப்பட்டது தெரிய வரும்.சாமானிய மக்களின் பிள்ளைகள் படித்து முன்னேறி விடக் கூடாது என்ற, தொலை நோக்கு பார்வையில், மத்திய அரசு நடத்தும், 'நவோதயா' பள்ளிகளை, தமிழகத்தில் வர விடாமல் தடை செய்துள்ளனர்.
நவோதயா பள்ளிகளில் உணவு, உடை, உறையுள் இலவசம். நவோதயா பள்ளிகள் வந்தால், தமிழ் அழிந்து விடும்; ஹிந்தி நுழைந்து விடும் என்ற மாய்மாலம், பசப்பு வார்த்தை, கழகத்தினர் நடத்தும் பள்ளிகளில் கிடையாதே!கடந்த, 1967 சட்டசபை தேர்தலின் போது, அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரசை பார்த்து, 'ஆண்டது போதாதா; மக்கள் மாண்டது போதாதா' என்று போஸ்டர் ஒட்டி பிரசாரம் செய்தது, தி.மு.க.,இப்போது அதே கேள்வியை கழகங்களை பார்த்து நாம் கேட்போம். 'ஆண்டது போதாதா; மூன்று தலைமுறைகளை கெடுத்தது போதாதா' என்று!அறுபது ஆண்டு மூளைச் சலவையில் இருந்து, சட்டென்று வெளியே வருவது சற்று சிரமம் தான்.
அதனால் தான், அவர்கள் வார்த்தைக்கு வார்த்தை கூறும் பகுத்தறிவு என்ற வார்த்தையை, அவர்களை நோக்கி வீசி, சிந்திக்கச் சொன்னோம்.வரவிருக்கும் மாதங்களில், பகுத்தறிவோடு சிந்தித்து, தேர்தலின் போது, வித்தியாசமாக செயல் பட்டால், நாடும் வளம் பெறும்; நாமும் நலம் பெறுவோம்.தமிழகம் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை என்று அதன் தலையில் எழுதி இருந்தால், யாரால் என்ன செய்ய முடியும்; தமிழகம் திருந்தப் போகிறதா இல்லை வருந்தப் போகிறதா... முடிவு உங்கள் கையில்!தொடர்புக்கு:இ - மெயில்: essorres@gmail.com எஸ்.ராமசுப்ரமணியன்எழுத்தாளர்.