தலைவரை தடுத்த கோஷ்டி; கட்சிக்குள் உயர்கிறது முஷ்டி!| Dinamalar

தலைவரை தடுத்த கோஷ்டி; கட்சிக்குள் உயர்கிறது முஷ்டி!

Updated : ஆக 25, 2020 | Added : ஆக 25, 2020
Share
'ஸ்மார்ட் சிட்டி'யில், பெரிய குளத்தில் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தன, 'மேக்கப்' வேலைகள். 'ஐ லவ் கோவை' செல்பி கார்னரில் அமர்ந்து, தனது, ஸ்மார்ட் போனில் புகைப்படம் எடுத்துக் கொண்ட மித்ரா, ''அக்கா, கோடிக்கணக்குல பணத்தை கொட்டி, இவ்ளோ வேலை செய்றாங்களே. ஒழுங்கா பராமரிப்பாங்களா, கவர்மென்ட் மாறுச்சுன்னா, வீணாகிடுமே,'' என, பேச்சை துவக்கினாள்.''ஆமாப்பா, குளங்களை
தலைவரை தடுத்த கோஷ்டி; கட்சிக்குள் உயர்கிறது முஷ்டி!

'ஸ்மார்ட் சிட்டி'யில், பெரிய குளத்தில் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தன, 'மேக்கப்' வேலைகள். 'ஐ லவ் கோவை' செல்பி கார்னரில் அமர்ந்து, தனது, ஸ்மார்ட் போனில் புகைப்படம் எடுத்துக் கொண்ட மித்ரா, ''அக்கா, கோடிக்கணக்குல பணத்தை கொட்டி, இவ்ளோ வேலை செய்றாங்களே. ஒழுங்கா பராமரிப்பாங்களா, கவர்மென்ட் மாறுச்சுன்னா, வீணாகிடுமே,'' என, பேச்சை துவக்கினாள்.

''ஆமாப்பா, குளங்களை மேம்படுத்தி, அழகுபடுத்துறதுக்கு மட்டும், ரூ.370 கோடி ஒதுக்கியிருக்காங்க. எந்த நிறுவனம் வேலை செய்கிறதோ, அதே நிறுவனத்திடம் குறிப்பிட்ட வருஷங்களுக்கு பராமரிக்கிற பொறுப்பை ஒப்படைக்கப் போறாங்களாம்,''அப்போது, குறுக்கிட்ட மித்ரா, ''இருந்தாலும், கழிவு தண்ணீ கலக்குதே. சுத்திகரிப்பு நிலையம் கட்டாம, இவ்ளோ செலவழிச்சு என்ன பிரயோஜனம். கழிவு தண்ணீரிலா, படகு சவாரி விடப்போறாங்க,'' என, துளைத்தெடுத்தாள்.

'மித்து, கழிவு நீரை, இயற்கை முறையில் சுத்திகரிச்சு, குளத்துல சேர்க்குறதுக்கும் கட்டமைப்பு ஏற்படுத்தப் போறதா சொல்றாங்க. பார்ப்போம்; என்ன நடக்கப் போகுதுன்னு,'' என்ற சித்ரா, ''கார்ப்பரேஷன்ல உதவி கமிஷனர் அப்பாயின்மென்ட் சர்ச்சை ஓடிட்டு இருக்கே,'' என, கிளறினாள்.''அதுவா, அரசு உத்தரவை மீறி, பணி நியமனம் செஞ்சிருக்கறதா புகைச்சல் ஓடிட்டு இருக்கு. இது சம்மந்தமா, சென்னையில் இருக்கிற அரசு உயரதிகாரிகள் தரப்பிலும், ஆளுங்கட்சி வி.ஐ.பி., தரப்பிலும் விசாரணை நடத்துனாங்களாம்.

'நிர்வாக நலன்' கருதி, ஒரு அதிகாரியை, வெளியூருக்கு இட மாறுதல் செய்யலாமான்னு யோசிக்கிறாங்களாம். இதை கேள்விப்பட்டதும், அதிகாரிகள் வட்டாரம் ஆடிப்போயிருச்சாம்,''''அதிருக்கட்டும், ஊரடங்கு சமயத்தில், பொறியியல் பிரிவு அதிகாரி ஒருத்தரு, உயரதிகாரி பர்மிஷன் வாங்காம, இ-பாஸ் இல்லாமல், புதுச்சேரிக்கு போயிட்டு வந்தாராமே,'' என, நோண்டினாள் சித்ரா.''ஆமாக்கா, நானும் கேள்விப்பட்டேன். அதிகாரிகள் வட்டாரத்தில் பேசிக்கிட்டு இருக்காங்க,'' என்ற மித்ரா, ''தேர்தல் பரபரப்பு ஆரம்பமாகிடுச்சே. அரசியல் மேட்டர், ஏதுமில்லையா,'' என, கேட்டாள்.

''அரசியல் மேட்டர் இல்லாம இருக்குமா, என்ன? 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், தெற்கு தொகுதியை, காங்கிரசுக்கு கேட்டுப்பெற, 'பிளான்' போட்டிருக்காங்க. அதுக்காக, ரெண்டு நாளைக்கு முன்னாடி, கீதா ஹால் ரோட்டில் இருக்கிற அலுவலகத்துல, ஆய்வு கூட்டம் நடத்தியிருக்காங்க. இதுல கலந்துக்கிறதுக்காக, காங்., கட்சி மாநில தலைவர் அழகிரி வந்திருக்காரு,''''அடடே... தேர்தல் குஸ்திக்கு காங்கிரசும் ரெடியாக ஆரம்பிச்சிடுச்சா,''

''மித்து, பொறுமையா கேளுப்பா! அவரு வர்ற வழியிலேயே, நீலாம்பூர் பை-பாஸில், பிரபு ஆதரவாளர்கள், அவரது காரை வழிமறித்து, தடுத்து நிறுத்தியிருக்காங்க. தெற்கு சட்டசபை தொகுதியில் போட்டியிடுறதுக்கு, 'மயூரா' ஜெயக்குமாருக்கு மறுபடியும் வாய்ப்பு கொடுக்கக்கூடாதுன்னு மனு கொடுத்திருக்காங்க; கூட்டத்தையும் புறக்கணிச்சிட்டாங்களாம். அலுவலகத்தில், புதுசா வச்ச கல்வெட்டில், பிரபு பெயரை குறிப்பிடாததால், ஆதரவாளர்கள் கொந்தளிப்புல இருக்காங்களாம்; நிர்வாகிகளுக்கு உதறலாம்,''

''அக்கா, காங்கிரசுல எப்பவும் கோஷ்டி பிரச்னை இருக்கத்தானே செய்யும். ஆளுங்கட்சி கூட்டத்துல அனல் பறந்துச்சாமே, அதைச்சொல்லுங்க,'' என, கொக்கி போட்டாள் மித்ரா.''அந்த கூட்டத்துக்கு நானும் போயிருந்தேன், மித்து! இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம் வந்திருந்தாரு. எம்.ஜி.ஆர்., - ஜெ., - இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., - அமைச்சர் வேலுமணின்னு, ஒவ்வொருத்தரையும் படிப்படியா புகழ்ந்து தள்ளிட்டு, முக்கால் மணி நேரம் பேசுனாரு.

கடைசியில, சிரித்துக் கொண்டே, 'விளைவு வேறுமாதிரி இருக்கும்; யாரா இருந்தாலும் நடவடிக்கை பாயும்'னு, மிரட்டும் தொணியில் பேசியதை, கட்சி நிர்வாகிகள் விரும்பலை,''''வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி., கூட்டத்துக்கு வராததால், என்ன நடக்கப் போகுதோன்னு, பலரும் இறுக்கமா அமர்ந்திருந்தாங்க. மாநில செயலாளர் பேச்சும் வேறுவிதமா இருந்ததால, நிர்வாகிகளுக்கு நெருடல் அதிகமாகியது,''

''அமைச்சர் வேலுமணி, மைக் எடுத்ததும், நேரடியாகவே விஷயத்துக்கு வந்தார். 2010ல், ஜெ., தலைமையில், கோவையில் நடந்த ஆர்ப்பாட்டமே, ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டது. அதன் பிறகே, அனைவரும் திரும்பி பார்த்தனர்; 2011ல் ஆட்சியை கைப்பற்றினோம்,''''எந்தவொரு விஷயமா இருந்தாலும், கோவையே முன்னெடுக்கும் என, பழைய விஷயங்களை நினைவுபடுத்த ஆரம்பித்ததும், மாநில செயலாளர் பரமசிவம், நாற்காலியின் நுனிக்கே வந்து விட்டார் என, சொல்லலாம். அதாவது, வாழைப்பழத்துல ஊசி ஏத்துற மாதிரி, விஷயத்தை சொன்னதும், கூட்டத்தில், கரவொலி பறந்தது,''

''அப்ப, பி.ஆர்.ஜி., என்ன செய்யப் போறாராம்,''''அதான், ஓ.பி.எஸ்.,சே சொல்லிட்டாரே! கட்சிக்குதான் விசுவாசமா இருக்கணும்; 2021 தேர்தல்தான் இலக்கு; நடந்தவை நடந்தவையா இருக்கட்டும்னு, பிரச்னைக்கு 'புல்ஸ்டாப்' வச்சிட்டாரே,''''இனி, இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்.,சை நேர்ல பார்த்து, பொக்கே கொடுத்து, வாழ்த்து வாங்கிட்டு, பொறுப்பேத்துக்குவாருன்னு சொல்றாங்க,'' என்றபடி, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.பின் இருக்கையில் அமர்ந்த மித்ரா, ''அக்கா, சூலுாருக்கு ஒரு நியாயம்; அன்னுாருக்கு ஒரு நியாயமான்னு ஒரு பஞ்சாயத்து ஓடுதாமே,'' என, கேட்டாள்.

''ஆமாப்பா, சூலுார் ஒன்றியத்துல, கட்சி பதவியும், அரசு பதவியும் ஒருத்தருக்கே இருக்கக்கூடாதுன்னு, பிரிச்சுக் கொடுத்திட்டாங்க. ஆனா, அன்னுார் ஒன்றிய தலைவரா இருக்கற, 'அம்பாள்' பழனிசாமி, கட்சியில் ஒன்றிய செயலாளரா இருக்காரு; கூட்டுறவு சங்கத் தலைவராவும் இருக்காரு. ஒருத்தருக்கு மூணு பதவியான்னு, கட்சிக்குள்ள புகைச்சல் ஓடிட்டு இருக்கு. கட்சி பதவியையும், கூட்டுறவு சங்க தலைவர் பதவியையும், மத்தவங்களுக்கு கொடுக்கணும்னு, ரத்தத்தின் ரத்தங்கள், போர்க்கொடி துாக்கியிருக்காங்க,''

''அதிருக்கட்டும், தி.மு. க.,காரங்க என்ன செய்றாங்கன்னு சொல்லவே இல்லையே,''''மித்து, இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமிச்சிருக்காங்கள்ல, இனிமே, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்புக்குழு நியமிக்கப் போறாங்களாம். அதிருப்தியில் இருக்கறவங்களை சமரசம் செய்றதுக்காக, குழு மெம்பரா நியமிக்கப் போறாங்களாம்,'' என்றபடி, ஒப்பணக்கார வீதி வழியாக, ஸ்கூட்டரை செலுத்தினாள் சித்ரா.

சைரன் ஒலியை அலற விட்டபடி, ஆம்புலன்ஸ் வாகனம் கடந்து சென்றது.அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா, நம்மூர்ல தொற்று பரவல் எப்படியிருக்கு; ஹெல்த் டிபார்ட்மென்ட் அதிகாரிங்க என்ன செய்றாங்க,'' என, 'ரூட்' மாறினாள்.''அதுவா, கார்ப்பரேஷன் லிமிட்டுக்குள்ள மட்டும் நோய் வேகமா பரவுறது மாதிரி, ஒரு இமேஜ் உருவாக்குறாங்க. மாவட்ட சுகாதாரத்துறை கட்டுப்பாட்டுல இருக்குற, புறநகர் ஏரியாவுல 'மெடிக்கல் கேம்ப்' நடத்துறதே இல்லை. சாயாங்காலம், 6:00 மணியாச்சுன்னா, புள்ளிவிவரம் மட்டும் வெளியிடுறாங்க,'' என்றபடி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை கடந்தாள் சித்ரா.

தெற்கு தாலுகா அலுவலகத்தை பார்த்த மித்ரா, ''அக்கா, இந்த ஆபீசுல வாரிசு சான்றிதழ் கொடுக்குறதுக்கு ஏகப்பட்ட கெடுபிடி செய்றாங்களாம். 'அப்ளை' செய்றவங்க, சாயாங்காலம் வரைக்கும் 'வெயிட்' பண்ணாலும் கெடைக்கறதில்லையாம்,'' என்றாள்.''ஆமா, மித்து, உண்மைதான்! இதே மாதிரி, அன்னுார் ஏரியாவிலும் ஏகப்பட்ட பிரச்னை ஓடிட்டு இருக்கு. ரேஷன் அரிசியை டன் கணக்கில் கடத்துறாங்களாம். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துல, இயந்திரங்களை பயன்படுத்தி, லட்சக்கணக்குல பணத்தை சுருட்டுறாங்களாம். மாவட்ட நிர்வாகம் கண்டுக்கறதே இல்லையாம்,''ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்டச் சாலையில் பயணித்த போது, 'ஸ்மார்ட் சிட்டி' வேலைகளை பார்த்த மித்ரா, ''நாலு வருஷத்துக்கு முன்னாடி, ஆர்.எஸ்.புரம், டி.பி., ரோட்டுல ஆரம்பிச்ச வேலையே இன்னும் முடியலை. ரேஸ்கோர்ஸ்ல இப்பதான் ஆரம்பிச்சிருக்காங்க.

எத்தனை வருஷம் ஆக்குவாங்களோ, தெரியலை. ஏற்கனவே ஸ்ட்ராங்கா இருக்குற கட்டுமானங்களை எல்லாம் இடிச்சு தள்ளிட்டு, செட்டப் செல்லப்பா ரேஞ்சுக்கு, மேக்கப் வேலைகள் நடக்குதாம்; இது, எத்தனை நாள் தாங்குமோ தெரியல...'' என, புலம்பினாள்.வீட்டுக்கு முன் ஸ்கூட்டரை நிறுத்திய சித்ரா, ''ஆளுங்கட்சி ஸ்டைலில், தி.மு.க.,விலும் ஒன்றியத்தை ரெண்டா பிரிச்சு, பதவி கொடுக்கப் போறாங்களாம்,'' என்றாள்.

''அப்படியா,'' என, ஆச்சரியத்தோடு கேட்டாள் மித்ரா.''தொண்டாமுத்துார் ஒன்றிய செயலாளரா இருந்த சேனாதிபதிக்கு, மாவட்ட பொறுப்பு கொடுத்திருக்காங்க. இனிமே, ஒன்றியத்தை வடக்கு, தெற்குன்னு ரெண்டா பிரிக்கப் போறாங்களாம். 'மாஜி' தலைவர் ஒருத்தரு, பதவியை கைப்பத்துறதுக்கு, 'மூவ்' பண்ணிட்டு இருக்காராம்,'' என்றபடி, வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X