புதுடில்லி : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பிரசாந்த் பூஷன் மீண்டும் மன்னிப்பு கேட்க மறுத்த நிலையில், அவருக்கு வழங்கப்பட உள்ள தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
குற்றவாளி
உச்சநீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் தொடர்பாக டுவிட்டரில் விமர்சனம் செய்தது தொடர்பாக பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து அவர் சீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், பிரசாந்த் பூஷனுக்கான தண்டனை குறித்த வாதங்கள் சில நாட்களுக்கு முன்னர் துவங்கியது. அப்போது, தண்டனை அறிவிக்கப்பட்டாலும், சீராய்வு மனு மீதான விசாரணை முடிந்த பின்னர் நிறைவேற்றப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.
மறுப்பு
தொடர்ந்து, டுவிட்டரில் தெரிவித்த கருத்திற்கு மூன்று நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க பிரசாந்த் பூஷனுக்கு நீதிமன்றம் அவகாசம் அளித்தது. நேற்றோடு அந்த காலஅவகாசம் முடிந்த நிலையில், பிரசாந்த் பூஷன் தாக்கல் செய்த பதில் மனுவில், ''நான் நம்பும் விஷயங்களை பிரதிபலிக்கும் வகையில்தான் கருத்திட்டிருந்தேன். அது குறித்து நிபந்தனைகளோடோ, நிபந்தனைகளற்றோ மன்னிப்பு கோருவது சரியாக இருக்காது. அது என் மனசாட்சிக்கு அவமதிப்பு செய்யும் வகையில் இருக்கும். எனவே எனக்கு கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றுக் கொள்ள தயார்'' என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள், நாங்கள் என்ன செய்ய வேண்டும், வித்தியாசமான கருத்தை தெரிவியுங்கள் என அட்டர்னி ஜெனரலிடம் தெரிவித்தனர்.
மன்னிக்கலாம்
மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வேணுகோபால் கூறியதாவது: இந்த முறை பிரசாந்த் பூஷனை மன்னித்து, எச்சரிக்கை கொடுத்து விடுவித்துவிடலாம். இனி இதை போல் கருத்து சொல்ல வேண்டாம் என்று மட்டும் அவரிடம் சொல்லலாம். நீதிமன்ற அமைப்பு மீது தெளிவற்று இருக்கும் விஷயங்கள் மீது சொல்லப்பட்ட கருத்தாக தான் பூஷனின் கருத்தை பார்க்க வேண்டும். அதன் மூலம் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் எனக்கூறியதுடன் நீதிமன்ற அமைப்பு மீது, பல முன்னாள் மற்றும் இன்னாள் நீதிபதிகள் ஊழல் புகார்கள் சுமத்தியுள்ளனர் என தெரிவித்தார்.
உணரவில்லை
இதனை தொடர்ந்து நீதிபதிகள், பிரசாந்த் பூஷனின் அளித்துள்ள பதில், இன்னும் இழிவுபடுத்துவது போல் உள்ளது. அவர் தனது தவறை உணர்ந்ததாக தெரியவில்லை. மன்னிப்பு கடிதமும் அளிக்கவில்லை என தெரிவித்தனர். மேலும், தனது கருத்தை திரும்ப பெற்று கொள்ள அரை மணி நேரம் அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.
ஆயுதம் இல்லை
மீண்டும் வழக்கு, விசாரணைக்கு வந்த போது, நீதிபதி அருண் மிஸ்ரா கூறுகையில், மூத்த வழக்கறிஞரான பூஷன் போன்றோர் வெளியிடும் சிறிய கருத்தும் பெரிதாக பார்க்கப்படும். எத்தனை நாளைக்கு தான் நீதிபதிகள் பேசாமலேயே இருக்க முடியும். தங்களை தற்காத்து கொள்ள நீதிபதிகளிடம் எந்த ஆயுதமும் இல்லை. நீதிபதிகளையும், நீதிமன்றத்தின் மாண்புகளையும் தற்காத்து கொள்ள வழக்கறிஞர்கள் உதவ வேண்டும். மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு உள்ளது? நீங்கள் ஏற்படுத்திய காயத்தை நீங்கள் தான் சரி செய்ய வேண்டும் எனக்கூறினார்.
தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE