சென்னை; 'எம்.எல்.ஏ.,க்கள், மீதான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை, மனதார வரவேற்கிறேன்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்து, சட்டசபை ஜனநாயகத்தை, சென்னை உயர் நீதிமன்றம் காப்பாற்றி இருக்கிறது. எம்.எல்.ஏ.,க்களின் கருத்து சுதந்திரத்தையும், மக்களை வெகுவாகப் பாதிக்கும் பிரச்னைகளையும், சட்டசபையில் எழுப்பும் உரிமையையும், சபாநாயகர் காப்பாற்றத் தவறி விட்டார்.
ஆனால், சென்னை உயர் நீதிமன்றம், அந்த உரிமையை சட்டப்பூர்வமாக பாதுகாத்து இருப்பது, வரலாற்றுச் சிறப்பு மிக்கது. சட்டசபை வரலாற்றில், ஜனநாயகம் போற்றுகிற தீர்ப்பை, தி.மு.க., சார்பில் மனதார வரவேற்கிறேன்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
விஜயகாந்திற்கு வாழ்த்து
ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், 'கருணாநிதியின் குறையாத பாசத்திற்கு பாத்திரமாகத் திகழ்ந்தவரும், என்றும் என் இனிய நண்பரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்திற்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்' என, கூறியுள்ளார்.
ரகுமான்கானுக்கு மரியாதை
மறைந்த, தி.மு.க., முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் இல்லத்திற்கு, நேற்று ஸ்டாலின் சென்றார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரகுமான்கான் படத்திற்கு மலர் துாவி, அஞ்சலி செலுத்தினார்.