சென்னை; ஊரடங்கு மற்றும் 'இ -- பாஸ்' நடைமுறை குறித்து, மாவட்ட கலெக்டர்களுடன், வரும், 29ம் தேதி, முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா நோய் பரவலை தடுக்க, இம்மாதம், 31 வரை, மாநிலம் முழுதும், பொது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கருதி, தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. பொது போக்குவரத்துக்கு, தடை தொடர்கிறது.
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, இ- - பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. இதை கைவிட வேண்டும் என, அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். மத்திய அரசும், இ -- பாஸ் நடைமுறையை கைவிட அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக, நேற்று முன்தினம், தலைமை செயலர் சண்முகம், அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, ஆலோசனை நடத்தினார்.
ஆனால், இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை.எனவே, பொது ஊரடங்கை, இம்மாதம், 31ம் தேதிக்கு பின் நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்தும், இ- - பாஸ் நடைமுறையை ரத்து செய்வது குறித்தும், அனைத்து கலெக்டர்களுடன், வரும், 29ம் தேதி காலை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, மருத்துவ நிபுணர் குழுவினருடனும், முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்கு பின், ஊரடங்கு மற்றும் இ -- பாஸ் நடைமுறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.